பேக்கரியில் தயாரிப்பது போலவே, வீட்டிலேயே தவாவில் தேங்காய் பன் செய்வது எப்படி?

பேக்கரியில் தயாரிப்பது போலவே, வீட்டிலேயே  தவாவில்  தேங்காய் பன் செய்வது எப்படி?

பேக்கரியில் தயாரிப்பது போலவே, வீட்டிலேயே தவாவில் தேங்காய் பன் செய்ய முடியும் என்று சொன்னால் ஆச்சரியமாக உள்ளதா ? ஆனால், அது உண்மை. அதனை இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம். மேலும், இதில் முட்டை சேர்க்கமால் செய்வதால், எவருக்கும் உண்பதற்கு எளிது.

தேவையான பொருட்கள்:

ஈஸ்ட் தூண்டுதல் (yeast activation)

  • 1/2 கப் வெதுவெதுப்பான பால்

  • 2 மேசைக் கரண்டி சர்க்கரை

  • 1 தேக்கரண்டி ஈஸ்ட்

மாவு தயாரிக்க:

  • 2 கப் மைதா மாவு

  • 1/2 தேக்கரண்டி உப்பு

  • 1 மேசைக்கரண்டி எண்ணெய்

தேங்காய்ப் பூரணம் தயாரிக்க:

  • 1 கப் துருவிய தேங்காய்

  • 1/2 கப் டூட்டி ப்ரூட்டி

  • 2-3 மேசைக்கரண்டி செர்ரி துண்டுகள்

  • 2 மேசைக்கரண்டி வெண்ணெய் அல்லது நெய்

  • 1/4 தேக்கரண்டி ஏலப்பொடி

  • 1/4 கப் சர்க்கரை

செய்முறை:

  1. முதலில் ஈஸ்ட் தூண்டுதலைத் தயாரிக்க வேண்டும். வெதுவெதுப்பான பாலில் 2 மேசைக் கரண்டி சர்க்கரை மற்றும் 1 தேக்கரண்டி ஈஸ்ட் சேர்க்க வேண்டும். இதனை 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இது ஈஸ்ட் தூண்டுதல் (yeast activation) என்றழைக்கப்படும்.

  2. தூண்டப்பட்ட ஈஸ்ட், பால் நுரையாகக் காணப்படும். இத்துடன் 2 கப் மைதா, 1/2 தேக்கரண்டி உப்பு, 1 மேசைக்கரண்டி எண்ணெய் இவற்றைப் பிசைந்துக் கொள்ள வேண்டும். நன்கு பிசைந்தப் பிறகு, இந்த மாவினை 1 மணி நேரம் ஊற விட வேண்டும். மாவின் மேல் 1 அல்லது 2 ஸ்பூன் எண்ணெய் கொண்டு தடவுவதன் மூலம், மாவு காய்ந்து வெடிப்பு விழுவதைத் தவிர்க்கலாம்.

  3. மாவு ஊறும் நேரத்தில் தேங்காய்ப் பூரணம் தயார் செய்துக் கொள்ளலாம். 1 கப் தேங்காய், மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்துக் கொள்ளவும். இத்துடன் 1/2 கப் டூட்டி ப்ரூட்டி, 2-3 மேசைக்கரண்டி செர்ரி துண்டுகள், 2 மேசைக்கரண்டி வெண்ணெய் அல்லது நெய், 1/4 தேக்கரண்டி ஏலப்பொடி மற்றும் 1/4 கப் சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  4. செய்முறை எண். 2ல் உள்ள மாவு, ஒரு மணி நேரம் கழித்து, இருமடங்காகப் பெருகியிருக்கும். இதனை இரண்டாகப் பிரித்து வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு பகுதி மாவினை சப்பாத்தி திரட்டுவதைப் போல், சிறிது மாவு சேர்த்துத் திரட்டிக் கொள்ள வேண்டும். 1/2 இன்ச் தடிமனில் இருக்கும்படி திரட்டிக் கொள்ள வேண்டும்.

  5. நான்-ஸ்டிக் தவாவில் 2 ஸ்பூன் எண்ணையை தடவி, ஒரு பகுதி மாவினை வைக்க வேண்டும். செய்முறை எண். 3ல் உள்ள தேங்காய் பூரணத்தை, பரவலாக மாவின் மீது சேர்க்க வேண்டும். இரண்டாவது பகுதி மாவினையும் சப்பாத்தியைப் போல், திரட்டி, பூரணம் சேர்த்த மாவின் மீது விரித்து, ஓரங்களை அமிழ்த்தி விட வேண்டும்.

  6. அடுப்பின் மீது, இரும்பு தோசைக் கல்லை, 5 நிமிடம் முன்சூடு (preheat) செய்ய வேண்டும். நன்கு சுட்டப் பின்னர், தோசைக் கல்லின் மீது, செய்முறை எண். 5ல் உள்ள தவாவினை மூடி வைத்து, மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

  7. 10 நிமிடம் கழித்து, தேங்காய் பன்னைத் திருப்பிப் போட்டு, 5 நிமிடங்கள் அடுத்தப் பக்கத்தை வேக விட வேண்டும்.

  8. அடுப்பை அணைத்து, பன்னின் மீது வெண்ணெய் தடவி வைக்க, பன் பஞ்சு போல், மிருதுவாக இருக்கும்.

  9. நன்கு ஆறியப் பின், பன்னினைத் துண்டாக்கி, உண்டு மகிழலாம்.

வீட்டிலேயே சுடச்சுட சுவையான தேங்காய் பன் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com