உங்க வீட்ல இட்லி மாவு இருக்கா? அப்போ இந்த போண்டா செஞ்சு பாருங்க. 

Idly Maavu Bonda Recipe.
Idly Maavu Bonda Recipe.
Updated on

குளிர்சாதனப் பெட்டிகள் வந்ததிலிருந்தே பெரும்பாலான வீடுகளில் இட்லி மாவு எப்போதும் இருக்கிறது. இதைப் பயன்படுத்தி நாம் இட்லி, தோசை மட்டுமே செய்து சாப்பிட்டு வருகிறோம். ஆனால் ஒரு முறை இட்லி மாவைப் பயன்படுத்தி மொறுமொறுவென போண்டா செய்து பாருங்கள் வேற லெவல் டேஸ்டாக இருக்கும். 

வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் உடனடியாக ஏதாவது ஸ்னாக்ஸ் செய்ய வேண்டும் என்றால், இந்த போண்டா செய்யலாம். கார போண்டாவை மைதா மாவு, அரிசி மாவு சேர்த்து செய்வார்கள். ஆனால் இட்லி மாவில் சுலபமாக செய்யும் இந்த போண்டா மாலை நேரத்தில் சிறந்த ஸ்னாக்ஸாக இருக்கும். இதை எப்படி செய்வதென்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

  • இட்லி மாவு - 2 கப்

  • பச்சை மிளகாய் - 2

  • வெங்காயம் - 1

  • சீரகம் - 1 ஸ்பூன் 

  • கொத்தமல்லி தழை - சிறிதளவு

  • கருவேப்பிலை - சிறிதளவு

  • எண்ணெய் - பொரிப்பதற்கு

  • உப்பு - தேவையான அளவு 

  • அரை டேபிள் ஸ்பூன் ரவை

  • ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு

செய்முறை:

முதலில் வெங்காயம், கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். (தேவைப்பட்டால் நன்கு மசித்த ஒரு உருளிக்கிழங்கு சேர்த்துக்கொள்ளவும்)

பிறகு ஒரு சிறிய பாத்திரத்தில் இட்லி மாவை போட்டு, அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து கெட்டியான பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ளுங்கள். 

பின்னர், சற்று அகலமான கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் கலந்து வைத்த இட்லி மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு வேக வைக்க வேண்டும். குறிப்பாக இந்த போண்டா செய்வதற்கு என்னை நன்றாக கொதிக்க வேண்டும். இல்லையேல் இட்லி மாவு அடை போல மாறிவிடும். 

பின்னர் போண்டா பொன்னிறமாக சிவந்து நன்கு வெந்ததும், மறுபுறம் திருப்பி வேகவைத்து எடுத்தால் மொறுமொறுப்பான போண்டா தயார். 

logo
Kalki Online
kalkionline.com