ஊளைச்சதைகளைக் குறைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் தானியங்களில் மிக முக்கியமானது கொள்ளுப் பயறு. அதை வைத்து எப்படி கஞ்சி செய்யலாம், அதன் பயன்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
கொள்ளு பார்லி கஞ்சி செய்வது எப்படி?
தேவையான பொருள்கள் :
கொள்ளு வறுத்து பொடித்தது - 2 ஸ்பூன்
பார்லி வறுத்து பொடித்தது - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - அரை ஸ்பூன்
மிளகுத்தூள் - கால் ஸ்பூன்
பூண்டுப்பற்கள் இடித்தது - 2
கொத்தமல்லி இலைகள்
செய்முறை :
கொள்ளுப் பொடி மற்றும் பார்லி பொடியுடன் 3 கப் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து, அதோடு உப்பும் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு இரண்டு பொடியும் வேகும்வரை காய்ச்ச வேண்டும்.
கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சீரகமும் இடித்த பூண்டும் சேர்த்துக் கொள்ளலாம்.
கஞ்சி நன்கு வெந்து ஒன்றரை கப் அளவுக்கு சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். கொத்தமல்லி இலைகளைத் தூவி பருகலாம்.
இந்த சத்து மிகுந்த கஞ்சியை காலை நேர உணவாக தொடர்ந்து ஒரு மாதம் எடுத்து வந்தால் உடலில் ஏராளமான நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை கண்கூடாக உணர்வீர்கள்.