நவரசக் கறிக்கூட்டு!

நவரசக் கறிக்கூட்டு!

மீல் மேக்கர்’ என்ற சோயா பீன்ஸ் மற்றும் நிலக்கடலை கலந்த கலப்பு உணவு உருண்டைகளைக் கொண்டு தயாரிக்கப் பட்ட உணவு இது.

தேவையான பொருட்கள் :

மீல் மேக்கர் – ½  பாக்கெட், காரட் பெரியது – 1, உருளைக்கிழங்கு பெரியது – 1, முருங்கைக்காய் – 2, தக்காளிப் பழம் – 2, பட்டர் பீன்ஸ் உரித்தது – ½  கப், வெங்காயம் (பொடித்தரம்) - 150 கிராம், தேங்காய் - 1 மூடி, இஞ்சித் துண்டு சிறியது – 1,  பூடு (சேர்ப்பவர்களுக்கு) – 2 அரிசி, மஞ்சள்பொடி – ½  டீஸ்பூன், கொத்துமல்லித் தழை – கொஞ்சம், கறிவேப்பிலை (தாளிதத்திற்கு) கொஞ்சம்,  கடுகு கொஞ்சம், உளுத்தம் பருப்பு கொஞ்சம், விருப்பப்படும் எண்ணெய் - 100 மில்லி, டால்டா - 3 ஸ்பூன், தனியா - 3 டீஸ்பூன், சோம்பு (பெருஞ்சீரகம்) - 2 டீஸ்பூன், சீரகம் – ½  டீஸ்பூன், கசகசா - 2 டீஸ்பூன், வத்தல் பொடி 2 முதல் 3 டீஸ்பூன் வரை (கார விருப்பத்தைப் பொறுத்து) அல்லது பொடிவத்தல் – 25, பட்டை (கறிமசால்) – சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, அண்டிப்பருப்பு – 50. கிராம்

 செய்முறை:

1. கொத்துமல்லித் தழை, தனியா, சீரகம், வத்தல் பொடி, கசகசா இஞ்சித் துண்டு, பூண்டு, சோம்பு (பெருஞ்சீரகம்) ஆகியவற்றை மை போல அரைத்து வைக்கவும்.

2. தேங்காயைத் துருவி வைக்கவும்.

3. தக்காளிப் பழத்தின் விதையை நீக்கிவிட்டுப் பொடியாக அரிந்து தோசைக் கல்லில் 1 ஸ்பூன் டால்டா விட்டு இலேசாக எரியும் தீயில் கவனமாக நிறம் மாறும் வரை வதக்கி எடுக்கவும்.

4. மீல் மேக்கரைத் தனியாக நீர்விட்டு பெரிய நெல்லிக்காயளவில் ஊறும் வரை அவிய வைக்கவும். ஆறிய பிறகு பொடிப் பொடியாக அரிந்து வைக்கவும்.

5. பட்டர் பீன்ஸ், உருளைக்கிழங்கு, காரட், முருங்கைக் காய் ஆகியவற்றை மொத்தமாக அதிகம் குழைந்து விடாமல் அவித்து எடுக்கவும். (குக்கரில் வைத்தால் குழைந்து விடும். கவனம்.) ஆறிய பிறகு உருளைக்கிழங்கு, காரட் இரண்டையும் பொடிப்பொடியாக அரியவும். முருங்கைக் காயின் சதையை மட்டும் ஸ்பூன் கொண்டு வழித்து எடுக்கவும்.

6. ஒன்று முதல் ஐந்து வரை சொல்லியுள்ள பதார்த்தங்களை ஒரு பாத்திரத்தில் ஒன்று சேர்த்து எல்லாம் ஒன்று சேரும் வகையில் கையினால் புரட்டி எடுக்கவும். (பிசையக் கூடாது) இத்துடன் டால்டாவையும், மஞ்சள் பொடியையும் பொடியாக்கிய பட்டையையும் சேர்க்க வேண்டியது அவசியம். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொண்டு ருசி பார்த்துக்கொள்ளவும். அண்டிப் பருப்பை சிறிது வறுத்துச் சேர்க்கவும்.

7. ஒரு இடைத்தரமான பாத்திரம் அல்லது வாணலியில் எண்ணெய் விட்டு வழக்கமான முறையில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக் கவும். கடுகு வெடித்ததும் பொடிப் பொடியாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கிய பிறகு கறிக்கூட்டுக் கலவையை அதில் கொட்டிக் கிளரவும். பிறகு இரண்டு கப் நீர் விட்டுக் கொதிக்க விடவும். ஒன்று சேர்ந்து குழையும் வரை கிண்டி விடவும். நீர் 90 சதம் வற்றிய பிறகு இறக்கி வைக்கவும்.

8. சாதத்திற்குத் தொடுகறியாகப் பயன்படும் சாதத்தில் பிசைந்து சாப்படலாம் சப்பாத்தி, பூரிக்குச் சிறந்த துணை உணவு. இட்லி, தோசைக்கும் ஏற்ற துணை உணவு.

- ராஜேஸ்வரி கோபாலகிருட்டிணன், கோயில்பட்டி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com