போஷாக்கு அளிக்கும் பொட்டுக்கடலை லட்டு!
வறுத்த கடலை எனப்படும் பொட்டுக்கடலை பதின்பருவ சிறுமிகளுக்கு மாதவிடாய் தருணத்தின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். இதில் அதிகம் புரதச்சத்து இருப்பதால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்கும். சில குழந்தைகள் மிகவும் ஒல்லியாக நோஞ்சானாக இருப்பார்கள். அந்த குழந்தைகளுக்கு பொட்டுக்கடலையை உண்ணத் தருவதன் மூலம் உடல் எடை கூடும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. மேலும் இது நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது.
சுவையான சத்தான பொட்டுக்கடலை லட்டு எப்படித் தயார் செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
பொட்டுக்கடலை - 200 கிராம்
வெல்லம் - 100 கிராம்
முந்திரிப் பருப்பு - 10
நெய் - 3 ஸ்பூன்
ஏலக்காய் – 4
சூடான தண்ணீர் - ஒன்றரை டம்ளர்
செய்முறை :
பொட்டுக்கடலையை வாணலியில் லேசாக சூடு செய்து மிக்ஸியில் நைசாக அரைத்து, சல்லடையில் சலித்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக்கொள்ளவும். முந்திரிப் பருப்பை சிறிதாக நறுக்கவும். வெல்லத்தைத் துருவிக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவைப் போட்டு, முந்திரி, ஏலப்பொடி, வெல்லம் சேர்த்து, நன்றாக கலந்து கொள்ளவும். நெய்யை உருக்கிக் கொள்ளவும். பின்னர் வெந்நீர் மற்றும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகும் வரை நன்றாக பிசைந்துக் கொண்டு. எலுமிச்சை அளவு மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து நன்றாக உருண்டையாக உருட்டவும். இப்போது சத்தான சுவையான பொட்டுக்கடலை லட்டு தயார்.

