
சாதாரணமாக நம் வீடுகளில் கறிவேப்பிலை கொத்துமல்லி இருக்கும். சட்னி பிரியாணி போன்றவைகள் செய்யும்போது மட்டும் புதினாவும் லிஸ்ட்டில் இடம் பெறும். ஆனால் நாவின் ருசியைத் தூண்டுவதில் முதலிடம் பிடிக்கும் புதினாவில் உணவு செரிமானத்திற்கு உதவும் அத்தனை சத்துகளும் நிறைந்துள்ளன. இதை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாகும். இரும்புச்சத்தும் விட்டமின் சி, டி, சுண்ணாம்பு சத்தும் நிறைந்த புதினாவில் செய்யும் எளிதான சத்துகள் மிகுந்த ரெசிபிகள் இதோ...
புதினா சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி - இரண்டு கப்
நறுக்கிய பெரிய வெங்காயம் - ரெண்டு
நறுக்கிய தக்காளி -ரெண்டு
எலுமிச்சை பழச்சாறு தேவையான அளவு
கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
உப்பு தேக்கரண்டி அளவு
அரைக்க:
புதினா அரைக்கட்டு கொத்தமல்லி - அரை கட்டு
பூண்டு பத்து அல்லது 12 பல்
பட்டை ஒன்று
லவங்கம் ஒன்று
பச்சை மிளகாய் 4
இவற்றை தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்
தாளிக்க;
ஆயில்
பட்டை லவங்கம் –ரெண்டு
முந்திரி -நான்கு
கருவேப்பிலை- தேக்கடி அளவு
சீரகம் அரை ஸ்பூன்
பிரிஞ்சி இலை –ஒன்று
செய்முறை:
முதலில் பிரஷர் குக்கரில் ஆயில் சேர்த்து தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து வெங்காயத்தை அதில் சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு வதக்கி இதில் அரைத்த பொருட்களை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். பின்பு அரிசியை சேர்க்கவும் தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு இறக்கி, தேவையான அளவு எலுமிச்சை பழச்சாறு பிழிந்து கிளறவும். இதற்கு வெங்காய பச்சடி நன்றாக இருக்கும்.
குறிப்பு- பாஸ்மதி ரைஸுக்கு ஒரு கப்புக்கு இரண்டு, பச்சை அரிசிக்கு ஒரு கப்புக்கு மூன்று கப் தண்ணீரும் புழுங்கல் அரிசிக்கு ஒரு கப்புக்கு 3 கப் தண்ணீர் சேர்க்கவும்.
புதினா தோசை
தேவையான பொருட்கள்:
பச்சரிசி- அரை கப்
வரகு அரிசி துவரம் பருப்பு -தலா ஒரு கைப்பிடி
புதினா -ஒரு கட்டு
மிளகு -ஒரு டீஸ்பூன்
சீரகம் -அரை டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி வரகரிசி துவரம் பருப்பு உளுந்து இவற்றை ஒன்றாக மூன்று அல்லது நான்கு மணிநேரம் ஊற வைத்து இதனுடன் மிளகு சீரகம் புதினா சேர்த்து நன்றாக அரைக்கவும். உப்பு சேர்த்து மாவை புளிக்க(5 மணி நேரம்) வைக்கவும். பின்பு தோசை ஊற்றினால் சூப்பராக இருக்கும் இதற்கு தொட்டுக்க தக்காளி சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னி அட்டகாச காம்பினேசன்.