பிரட் இல்லாமல் சாண்ட்விச் செய்யலாம் வாங்க!
எங்காவது வெளியே செல்லும்போது, கடைகளில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள சாண்ட்விச்சுகளைப் பார்த்தால் அப்படியே சாப்பிட வேண்டும் போல தோன்றுகிறது அல்லவா? இனி பிரட் இல்லாமல் செம டேஸ்டியான சாண்ட்விச் வீட்டிலேயே செய்யலாம்.
நம் வீட்டிலேயே ஏதாவது சுவையாக செய்து சாப்பிட வேண்டும் என நினைக்கும்போது எதுவுமே இருக்காது. சரி, ஏதாவது இருக்கிறத வச்சு சமைச்சு சாப்பிடலாம் என ரொம்ப யோசிச்சு, இறுதியில் கடையில் ஆர்டர் செய்து சாப்பிடலாம் என்ற முடிவுக்கு வந்து விடுவோம். இனி இருக்கிறத வச்சு ஏதாவது சமைக்கலாம் என தோன்றும்போது, இந்த பிரட்டே இல்லாத சாண்ட்விச்சை செய்து பாருங்கள்.
என்னது பிரட்டே இல்லாமல் சாண்ட்விச்சா? அட உண்மைதாங்க. இந்த சாண்ட்விச் செய்ய பிரட் தேவையில்லை. ஆனா வீட்டில் கண்டிப்பாக உருளைக்கிழங்கு இருக்கணும். இது இருந்தால் போதும் வீட்டிலேயே 10 நிமிடத்தில் பிரட் இல்லாத சாண்ட்விச் செய்யலாம். இது ஒரு சரியான பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி. இதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையைப் பார்க்கலாம்.
கோதுமை/மைதா - 2 டீஸ்பூன்
தக்காளி - 1
ஸ்வீட் கான் - சிறிதளவு
குடைமிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
உருளைக்கிழங்கு - 4
வெங்காயம் - 1
துருவிய கேரட் - 1
சீஸ் - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - ½ டீஸ்பூன்.
முட்டைகோஸ்/வெள்ளரிக்காய் - சிறிதளவு.
முதலில் உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி கொஞ்சம் பெரிய அளவில் துருவி எடுத்துக் கொள்ளவும். சிறிய துளைகளில் துருவிக்கொள்ள வேண்டாம். பின்னர் துருவிய உருளைக்கிழங்கை நீரில் அலசி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இத்துடன் மைதா அல்லது கோதுமை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் இந்த கலவையை தோசை கல்லில் அடை போல அழுத்தி விடவும். இதை மூன்று நிமிடங்கள் வரை வேகவைத்து, மெதுவாகத் திருப்பிப்போட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கு வேகும்போதே தேவையான அளவு தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், வெள்ளரிக்காய், குடைமிளகாய் போன்ற உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதில் உப்பு, மிளகுத்தூள் மற்றும் துருவிய சீஸ் சேர்த்து கலக்கவும்.
உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும், அதன் ஒரு பக்கத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ள காய்கறிக் கலவையை வைத்து மூடவும். பின்னர் சீஸ் உருகி வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.
அவ்வளவுதான் பிரட் இல்லாத சாண்ட்விச் ரெடி, இது ஆரியதும் துண்டுகளாக வெட்டி குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பரிமாறலாம். இதன் சுவை மிகச் சிறப்பாக இருக்கும்.