
உங்கள் வீட்டில் பீன்ஸை சாம்பாருக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு நீண்ட நாட்களாக பிரிட்ஜில் அப்படியே வைத்துள்ளீர்களா? கவலை வேண்டாம் அத்துடன் கொஞ்சம் கோதுமை மாவு சேர்த்து உடனடியாக செய்யலாம் சுவையான கோதுமை பீன்ஸ் அடை. நீங்கள் சாதாரணமாக செய்யும் தோசையை விட இப்படி பீன்ஸ், கோதுமை பயன்படுத்தி செய்யும் கோதுமை அடை ரொம்பவே சுவையாக இருக்கும்.
கோதுமை மாவு ஆரோக்கியம் நிறைந்தது என்பதால் இதை அடிக்கடி செய்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இதை அவ்வப்போது காலை நேர உணவாக எடுத்துக் கொள்ளும்போது உடலுக்கு பல நன்மைகளை ஏற்படுகிறது. சரி, இந்த கோதுமை பீன்ஸ் அடையை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஒரு கப் கோதுமை மாவு.
ஒரு வெங்காயம்.
வெங்காயத்தாள் சிறிதளவு.
ஒரு தேக்கரண்டி உளுந்து.
உப்பு தேவையான அளவு.
அரை தேக்கரண்டி கரம் மசாலா.
ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள்.
ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு.
எண்ணெய் தேவையான அளவு.
ஒரு கரண்டி தோசை / இட்லி மாவு.
100 கிராம் பீன்ஸ்.
செய்முறை:
முதலில் பீன்ஸை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். இத்துடன் வெங்காயத்தாள் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் தோசை கல்லில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, உளுந்து கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பருப்பு பொன்னிறமாக வதங்கியதும் அதில் வெங்காயத்தாள், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் வதக்கிய பொருள், பீன்ஸ், கரம் மசாலா, உப்பு, தோசை மாவு மற்றும் மிளகாய் தூளை கோதுமை மாவில் நன்றாக சேர்த்து கலக்கவும். இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்.
பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து நன்றாகக் காய்ந்ததும் அடை போல ஊற்றி இருபுறமும் நன்கு வேக வைத்து எடுத்தால் சுவையான கோதுமை பீன்ஸ் அடை தயார்.
இதில் குழந்தைகளுக்குத் தேவையான எல்லா விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இதை உட்கொள்ளலாம். வாரம் ஒரு முறையாவது இதை சாப்பிட்டு வருவது உடல் நலத்திற்கு நல்லதாகும்.