டேஸ்டி கிச்சன் ரெசிபிஸ்…

டேஸ்டி கிச்சன் ரெசிபிஸ்…

குணுக்கு குழம்பு

தேவையானவை: பக்கோடா (அ) குணுக்கு - 10, புளி - நெல்லிக்காய் அளவு, குழம்பு பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். புளியை சிறிது தண்ணீரில் கரைத்து இதில் ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். புளி வாசனை போனதும் குழம்பு பொடி சேர்த்து, மேலும் கொதிக்க வைத்து, பக்கோடாவை (அ) குணுக்கு போட்டு நன்றாகக் கொதித்ததும் இறக்கி... கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.

வடைகறி

தேவையானவை: வடை - 10, வெங்காயம் - 2, தக்காளி - 1, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், சோம்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கி... இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் வடைகளைக் கிள்ளி போடவும். சிறிது நேரம் கொதிக்கவிட்டு... கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

பேல் பூரி

தேவையானவை: மிக்சர், அரிசிப்பொரி - தலா 100 கிராம், வெங்காயம், தக்காளி - தலா 1, ஸ்வீட் சட்னி (பேரீச்சம்பழம் வெல்லம் புளி மூன்றையும் சேர்த்து அரைத்த விழுது), கார சட்னி (கொத்தமல்லி புதினா பச்சை மிளகாய் உப்பு சேர்த்து அரைத்த விழுது), பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

கோஃப்தா கறி

தேவையானவை: சாதம் - ஒரு பெரிய பவுல், பூசணிக்காய் ஒரு கீற்று (அ) பெங்களூர் கத்திரிக்காய் - பாதி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, கோதுமை மாவு, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கிரேவிக்கு: வெங்காயம், தக்காளி - 2 (நறுக்கி அரைத்துக் கொள்ளவும்), கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: காயைத் துருவிப் பிழிந்து, சாதத்துடன் சேர்க்கவும். இதில் கொத்தமல்லி, கோதுமை மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். 

கடாயில் எண்ணெய் விட்டு கிரேவிக்கு கொடுத்துள்ள வற்றை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பொரித்து வைத்துள்ள கோஃப்தாக்களை இந்த கிரேவியில் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

ஈஸி கொத்து பரோட்டா

தேவையானவை: பரோட்டா - 10, வெங்காயம் - 2, தக்காளி - 1, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் உற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, நன்றாக வதக்கவும். இதில் பரோட்டாக்களை பிய்த்துப் போட்டு, தோசை கரண்டியால் கைகளால் கொத்தி கொத்தி எடுத்து, சூடாக பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com