பலநூறு வருடங்களாக நந்தி பகவனின் வாயிலிருந்து நீர் வழியும் அதிசய கோவில்!

பலநூறு வருடங்களாக நந்தி பகவனின் வாயிலிருந்து நீர் வழியும் அதிசய கோவில்!

ர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ தக்ஷிண முகநந்தி தீர்த்த கல்யாணி திருக்கோயில். இந்தக் கோயிலின் சிறப்பே இங்குள்ள நந்தியின் வாயில் இருந்து எப்போதும் நீர் ஊற்றாக ஊறி கொட்டிக் கொண்டிருப்பதுதான். அனைத்துச் சிவாலயங்களிலும் சிவபெருமானுக்கு எதிராகத்தான் நந்தி அமைக்கப்பட்டிருப்பார். ஆனால், இந்த ஸ்ரீ தக்ஷண முகம் நந்தி தீர்த்த கல்யாணி திருக்கோயிலில் நந்தி பகவான் சிவலிங்கத்துக்கு மேல் உள்ள தளத்தில் உள்ளார். அதோடு, அந்த நந்தியிலிருந்து வடியும் தீர்த்தம் சிவலிங்கத்தின் தலையில் விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சிவனை அபிஷேகம் செய்வது போன்று அந்த தீர்த்தம் பின்னர் அந்த நீர் அங்குள்ள தெப்பக்குளத்தில் சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் குளத்தைச் சென்றடைந்தாலும் அந்தக் குளத்தின் நீர்மட்டம் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி ஒரு அடி கூட உயர்வதில்லை. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பது எப்படி மர்மமோ அதேபோல், எங்கே செல்கிறது என்பதும் இந்தக் கோயிலின் மற்றொரு அதிசயமாக உள்ளது. சிவபெருமானே அபிஷேகத்துக்குப் பிறகு குளத்தில் சேரும் இந்தத் தீர்த்தத்தில் அபூர்வ சக்தி இருப்பதாகவும், இந்த நீரைப் பருகினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

இந்தக் கோயில் ஏறக்குறைய 400 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இந்தக் கோயில் அமைந்துள்ள இடம் அப்பகுதியிலே மிகத் தாழ்வான பகுதிகள் அமைந்துள்ளதால் அங்கிருந்து வரும் நீரூற்று நந்தி வாயின் வழியே வெளியேறும் வண்ணம் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நீர் கீழே உள்ள லிங்கத்தின் மீது விழுந்து பின்னர் குளத்தில் கலப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. விநாயகருக்கும், நவக்கிரகங்களுக்கும் தனிச் சன்னிதி அமைந்துள்ள இந்தக் கோயில் மொத்தமும் ஒரு குளத்தைச் சுற்றி முடிந்து விடுகின்றது.

சிவன் கோயில்களில் பொதுவாக நந்தி பகவானுக்குத்தான் பிரதோஷத்தன்று விசேஷ அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், இந்தக் கோயிலில் நந்தி பகவானே தனது வாயிலிருந்து வழியும் நீரால் நித்தமும் சிவபெருமானை அபிஷேகம் செய்யும் ஆச்சரியம் நடந்து கொண்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com