பச்சை குத்திக்கொண்டிருக்கும் பைரவர்!

பச்சை குத்திக்கொண்டிருக்கும் பைரவர்!

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகில் உள்ளது திருச்சேறை என்னும் சிவஸ்தலம். இது சோழ நாட்டின் தென்காவிரித் தலங்களில் 95வது திருத்தலமாகும். இது ஒரு பாடல் பெற்ற தலமாகும். கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே நாச்சியார்கோவில் வழியாகக் குடவாசல் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. திங்கட்கிழமைகளில் இங்குள்ள ருணவிமோசனேஸ்வரரை தரிசித்தால் கடன் தொல்லையிலிருந்து மீளலாம். தொடர்ந்து பத்து திங்கட்கிழமைகள் இக்கோயில் ருணவிமோசனேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால் 11ம் திங்கட்கிழமை கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்பது இங்கே தரிசிக்க வருபவர்களின் அனுபவமாக உள்ளது. உலகில் உள்ள அனைவருமே ஏதாவது ஒருவகையில் கடன் பட்டவர்கள்தான் என்கின்றன ஞான நூல்கள்.  நம் கடனையெல்லாம் தீர்க்கும்போது நமக்குப் பிறவி இல்லை என்று சொல்கின்றன சாஸ்திரமும் ஜோதிடமும்.

இத்தல ருணவிமோசனேஸ்வரரை வழிபட்டு மார்க்கண்டேயர் பிறவிப் பெருங்கடனைத் தீர்த்துக் கொண்டார். இதனால் பதினாறாவது வயதில் இவருக்கு மரணம் என்றிருந்த நிலை மாறிப்போனதாகக் கூறுகிறது வரலாறு. அதுமட்டுமின்றி, ‘என்றும் பதினாறு’ எனும் சாகா வரமே கிடைத்தது என்கிறது புராணம்.

இத்தல ஈசனுக்கு சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர் போன்ற வேறு திருநாமங்களும் உண்டு. தனது பக்தர்களை நன்னெறிப்படுத்துவதால் இந்த சிவனுக்கு செந்நெறியப்பர் என்னும் பெயர் வந்தது. இறைவி ஞானாம்பிகை. ஒவ்வொரு தமிழ் மாதமும் 13, 14, 15 தேதிகளில் அதிகாலை நேரத்தில் சூரியனின் கிரணங்கள் செந்நெறியப்பரின் மீதும் அம்பிகையின் மீதும் படுகின்றன. அந்த நாட்களில் சூரியன் இத்தல ஈஸ்வரனையும் அம்பிகையையும் வழிபடுவதாக ஐதீகம். அந்த நாட்களில் சூரியனுக்கும் இக்கோயிலில் விசேஷ பூஜை நடைபெறுகிறது. தல விருட்சம் மாவிலங்கை. இந்த மரத்தில் வருடத்தில் முதல் நான்கு மாதங்கள் இலைகளும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை மலர்களும், கடைசி நான்கு மாதங்கள் இலை, பூ ஒன்றுமில்லாமலும் காட்சியளிக்கிறது.

சிவ துர்கை, விஷ்ணு துர்கை, வைஷ்ணவி துர்கை என்று மூன்று விதமான துர்கையம்மன்கள் காட்சியளிப்பது இந்தத் திருத்தலத்தில் மட்டுமே. இங்கேயுள்ள பைரவரின் இடது கையில் பச்சை குத்தப்பட்டு கையில் சூலமும் மணியும் ஏந்தி காட்சியளிக்கிறார். இதுவும் இந்தத் திருத்தலத்தில் மட்டுமே காணப்படும் விசேஷ காட்சியாகும். தேய்பிறை அஷ்டமி நாட்களில் இந்த பைரவருக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு இங்குள்ள பைரவருக்கு உண்டு. திருநாவுக்கரசரால் தனி தேவாரப் பாடல் பெற்ற பைரவர் இவர்.

‘விரித்த பல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருங்கை

தரித்ததோர் கோலே கால பயிரவனாகி வேழம்

உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்

சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே’

என்று அவர் பாடிய இரண்டு பதிகங்களில் ஒரு பாடலில் சிவபெருமானே பைரவர் கோலத்தில் காட்சியளிப்பதாய் கூறுகிறார். இந்த விசேஷமான பைரவருக்கு அஷ்டமியன்று அபிஷேக ஆராதனை செய்தும், சகஸ்ரநாம அர்ச்சனை செய்தும் வழிபட்டால் காரியானுகூலம், வழக்கு விவகாரங்களில் வெற்றி, நவக்கிரக தோஷங்கள் நீங்குதல் ஆகிய நற்பலன்களைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com