சதுர்புஜதாரியாய் கங்க்ரோலி துவாரகீஷ்!

சதுர்புஜதாரியாய் கங்க்ரோலி துவாரகீஷ்!

ராஜஸ்தான் மாநிலத்தின் தெற்குப் பகுதில் அமைந்த ராஜஸ்மண்ட் மாவட்டத்தில் உள்ளது கங்க்ரோலி. இது ஒரு சிறிய ஊர். இங்கிருந்து உதய்ப்பூருக்கு 68 கி.மீ. தொலைவு. ராஜஸ்மண்ட் என்ற செயற்கை ஏரி மஹாராஜா ராஜ்சிங் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஏரியின் அருகாமையிலேயே உதய்ப்பூர் - அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது பஞ்ச துவாரகைகளில் ஒன்றான கங்க்ரோலி துவாரகா. இந்திய சுதந்திரத்துக்கு முன்னர் இப்பகுதி மேவார் சமஸ்தானத்தைச் சேர்ந்ததாக இருந்திருக்கிறது. பின்னர் ராஜஸ்தானுடன் இணைக்கப்பட்டது.

ஏரியின் நீண்ட படிக்கட்டுகளில் பக்தர்கள் அமர்ந்து, ஏரியின் அழகை ரசிக்கலாம். நூற்றுக்கணக்கான புறாக்கள் பக்தர்களுக்கு வெகு அருகிலேயே வந்து அமர்கின்றன. காரணம், அவற்றுக்கான தீனியை அருகிலேயே விற்கிறார்கள். பக்தர்களும் மகிழ்ச்சியாக வாங்கி, விசிறி இறைக்கின்றனர்.

கங்க்ரோலியில் அருளும் மூல விக்ரஹம் மதுராவில் இருந்து 1671ம் ஆண்டு மஹாராணா ராஜ்சிங் காலத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. 1676ல் ராஜஸ்மண்ட் ஏரி உருவாக்கப்பட்டு, துவக்க விழா நடைபெற்றபோது தற்போதுள்ள ஆலயத்தில் இந்த விக்ரஹம் வைக்கப்பட்டு இருக்கிறது. வல்லபாச்சாரியாரின் பேரனான ஸ்ரீ பாலகிருஷ்ணாஜி என்பவர் இதற்கான ஆயத்தங்களைச் செய்தார். அன்றிலிருந்து வைணவர்களின் ஒரு பிரிவான புஷ்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்களின் முக்கியமான வழிபாட்டு இடமாக (பீடம்) கங்க்ரோலி இருந்து வருகிறது.

கோயிலின் நுழைவாயிலுக்கு அருகில் சிறு கடைகள் சில உள்ளன. நொறுக்குத் தீனிகள், கடவுள் உருவங்கள் மற்றும் படங்கள் போன்றவற்றை விற்பனை செய்கிறார்கள். செல்ஃபோன், கேமிரா போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். இதற்குக் கட்டணம் ஏதும் வசூலிப்பது இல்லை.

ஆலயத்தின் நுழைவாயிலில் ராஜஸ்தான் கட்டட பாணியில் அலங்கார வளைவு வரவேற்கிறது. ஆலயத்துக்குள்ளே பக்தர்கள் காத்திருக்கப் பெரியதொரு ஹால் உள்ளது. பெரிய முற்றம் ஒன்றும் காணப்படுகிறது. நாலாபுறமும் மாடங்கள் தென்படுகின்றன. காருகேடட் கூரை அமைந்திருக்கும் படிக்கட்டுகளில் ஏறினால் இறைவனை எளிதாக தரிசிக்கலாம். இங்கே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகிருஷ்ணரை துவாரகீஷ் என்கிறார்கள். விக்ரஹம் சிறியதானாலும் எழிலோடு விளங்குகிறது. சதுர் புஜங்களிலும் திவ்ய ஆயுதங்கள் ஏந்திக் காட்சி அளிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இரண்டு பூசாரிகள் 16 விதமான உபசாரங்களைத் துவாரகீசருக்குச் செய்கிறார்கள். மாலை ஆரத்தியை, ‘உத்தப்பன சேவா’ என்கிறார்கள்.

இடது புறம் தனிச்சன்னிதி ஒன்றில் இருக்கும் தொட்டிலில் ஸ்ரீகிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். பூசாரிகள் தொட்டிலை அசைத்து சேவை செய்கின்றனர். ஒரு சிறிய பாத்திரத்தில் வண்ணமும், நறுமணமும் மிக்க மலர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பழங்களும் படைக்கப்பட்டு இருக்கின்றன. இங்கு சிவன், பார்வதி, பிரம்மா, சரஸ்வதி, ரிஷபம், கருடன் ஆகியோரும் காட்சி கொடுக்கின்றனர். அருகில் ஒரு சிறிய பூந்தோட்டமும் உள்ளது. ஆன்மிகப் புத்தகங்கள் ஏராளமாக உள்ள ஒரு நூலகமும் இங்கு இருக்கிறது. கோயிலில் இசைக் கருவிகளை ஒலிப்பதற்கென்றே தனி இசைக் குழு ஒன்றும் உண்டு. கோயிலின் தலைமைப் பூசாரி, வல்லபாச்சாரியரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்.

இந்த ஆலயம் மிகவும் சுத்தமாகவும் மனதுக்கு இதம் அளிக்கும் சூழலிலும் இருக்கிறது. இக்கோயிலில் மனத்தில் இனம் புரியாத அமைதி குடியேறுவதை உணரலாம். இசைக் கருவிகளின் நாதத்தோடு பக்திப் பாடல்களும் ஒவ்வொரு நாள் மாலையிலும் ஒலிப்பது நமது இதயங்களை வருடிச் செல்லும். இயன்றவரை மாலை வேளையில் இந்த ஆலயத்தைத் தரிசிப்பது உன்னதமான ஓர் ஆன்மிக அனுபவத்தைத் தரும்.

கோயிலில் இருந்து ராஜஸ்மண்ட் ஏரியின் அழகைக் கண்குளிரக் காணலாம். நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் இந்த ஆலயத்துக்கு வந்து ஸ்ரீகிருஷ்ணரை சேவித்துச் செல்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com