துஷ்ட சக்திகளை விரட்டும் தசாங்க தூபம்!

துஷ்ட சக்திகளை விரட்டும் தசாங்க தூபம்!

சாம்பிராணி தூபம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், சித்த மூலிகை தூபமான தசாங்கம் பற்றியும் அதன் வியக்க வைக்கும் பலன்கள் குறித்தும் பலருக்கும் தெரியாது. அதைப் பற்றிய பதிவுதான் இது.

தசாங்கம் என்பதும் தூபம் போடப் பயன்படும் ஒருவகை சாம்பிராணிதான். ஆதிகாலத்தில் இருந்து தெய்வங்களுக்கு தூபம் போடவும் அபிஷேகத்திலும் சேர்க்கப்படும் மகத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புதமான ஒரு பொருள்தான் தசாங்கம். இது வெளிப்படுத்தும் புகையில் இருக்கும் பலன்கள் எண்ணற்றவை என்றே கூறலாம். தசம் என்றால் பத்து என்று பொருள். பத்து தெய்வீகப் பொருட்கள் அடங்கிய மூலிகையையே தசாங்கம் என்று கூறுகிறோம். தசாங்கத்தில் இருக்கும் பத்து வகையான மூலிகைப் பொருட்களின் குணங்களும் மகத்துவம் வாய்ந்தவை. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்தால்தான் தசாங்கம் என்கிற அற்புதப் பொருள் உருவாகிறது. இவை அனைத்தும் சித்தர் பெருமக்கள் அருளிய குறிப்புகளில் இருந்து பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

1. வெட்டி வேர், 2. லவங்கம், 3. வெள்ளை குங்குலியம், 4. ஜாதிக்காய், 5. மட்டிப்பால், 6. சந்தனத் தூள், 7. நாட்டு சர்க்கரை, 8. திருவட்ட பச்சை, 9. சாம்பிராணி, 10. கீச்சிலி கிழங்கு ஆகியவையே தசாங்கத்தில் உள்ள மூலிகைப் பொருட்கள் ஆகும். இனி, தெய்வீகப் பொருளான தசாங்கம் எத்தகைய பலனைத் தருகிறது என்பதைப் பார்ப்போம்.

தசாங்கத்தின் புகை உடலின் பல்வேறு உள் உறுப்புகளின் பாதிப்புகளை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதன் நறுமணமே தெய்வீக உணர்வை உண்டாக்குபவையாக இருக்கும். மேலும், வீட்டுக்குள் நுழையும் துஷ்ட சக்திகளை இதன் புகை விரட்டி விடும். இதனை திருஷ்டி கழிக்கவும் உபயோகிக்கலாம். இதன் புகையை நுகர்வதால் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாகி விடும். வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால் அவை அனைத்தும் மாயமாய் மறைந்தே போகும். கோயில்களில் வீசும் நறுமணம் போல் நமது வீட்டிலும் அதன் மணம் நீண்ட நேரம் நிறைந்து இருக்கும். வீடு மட்டுமின்றி, அருகில் உள்ள இடங்களும் மணக்கும். தெய்வத்திடம் நமக்குள்ள நெருக்கத்தை அதிகமாக்க சிறந்த வழி தசாங்கம் பயன்படுத்துவது என்றால், அது மிகையல்ல.

தசாங்கம் கூம்பு வடிவ சாம்பிராணி போல, நாட்டு மருந்து கடைகளில் மட்டுமல்ல, தற்போது இணையதளங்களில் ஆர்டர் செய்தாலும் கிடைக்கிறது. தூளாகவும் கெட்டியாகவும் இருவேறு வடிவங்களில் இது கிடைக்கிறது. கூம்பு வடிவத்தில் உள்ள முனையில் நெருப்பு வைத்து அதற்கென்று தந்துள்ள சிறு தட்டில் வைத்துவிட்டால், அது கீழே விழாமல் இருக்கும். இதன் சாம்பலை செடி, கொடிகளுக்கு போடலாம். தசாங்கத்தை ஏற்றி இறைவனுக்குக் காண்பித்த பிறகு, வீடுகளில் உள்ள மூலை, முடுக்குகள் ஒன்று விடாமல் காண்பிக்க வேண்டும். சிறு குழந்தைகளுக்கு உடல் முழுவதும் படும்படி காண்பித்தால் நல்லது. தசாங்கம் கொண்டு தூபம் போடுவது சகல விதமான ஐஸ்‌வர்யங்களையும் வீட்டில் சேர்க்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com