சிதம்பரம் கோயில் அர்த்தஜாம பூஜை சிறப்பு தெரியுமா உங்களுக்கு?

சிதம்பரம் கோயில் அர்த்தஜாம பூஜை சிறப்பு தெரியுமா உங்களுக்கு?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் காலை 6 மணிக்கு நடைபெறும் முதல் கால பூஜை முதல், இரவு 10 மணிக்கு நடைபெறும் அர்த்தஜாம பூஜை வரை ஆறு கால பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெறும். அதில் குறிப்பாக, அர்த்தஜாம பூஜை (இரவு பூஜை) மிகவும் விசேஷமானது.

சைவத்தின் தலைநகராகக் கொண்டாப்படும் சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை மிகவும் தாமதமாக, அனைத்து சிவாலயங்களிலும் அர்த்த ஜாம பூஜை முடிந்த பிறகு இரவு 10 மணிக்கு மேல்தான் நடைபெறும். சிதம்பரம் நடராஜர் கோயில் அர்த்த ஜாம பூஜையைக் கண்டால் அனைத்து சிவாலய அர்த்தஜாம பூஜையைக் கண்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அனைத்து கோயில்களிலும் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் பைரவ மூர்த்திக்கு வழிபாடு நடத்தப்படும். இந்த வழிபாட்டுடன் அன்றைய பூஜைகள் முடிந்ததாகக் கருதப்படும். ஆனால், சிதம்பரத்தில் நடராஜர் பள்ளியறை சேர்ந்த பிறகு பிரம்ம சண்டிகேஸ்வரர், பைரவ வழிபாட்டுக்குப் பிறகு, அர்த்தஜாம அழகர் எனப்படும் க்ஷேத்ரபாலகன் பூஜிக்கப்படுகிறார்.

ஜோதிடன் ஒருவன் பலரது சாபத்தால் மறுபிறவியில் பல்லியாகப் பிறந்தான். அப்படி அவன் பிறந்த இடம் சிதம்பரம். சித்சபையின் கொடுங்கைகளில் வசித்த அந்த பல்லிக்கு புண்ணியவசத்தால் சிவ பக்தி உண்டானது. நடராஜப் பெருமானின் திருவருள் கைகூடியது. அழகிய சிவகணமாகும் பேறு அதற்குக் கிடைத்தது. கோயிலை இரவில் காவல் காக்கும் வேலையும் கிடைக்கப்பெற்றது. அவரே அர்த்தஜாம அழகர்.

சித்சபையின் ஈசான பாகத்தில் தேவ சபையின் மேற்குச் சுவரில் அமைந்துள்ள மாடத்தில், சித்சபையை நோக்கியவாறு அர்த்தஜாம அழகர் காட்சி தருகிறார். சித்சபையின் கூரையில் பிரம்மசண்டிகேஸ்வரரின் சன்னிதிக்கு அருகில் அந்த பல்லி சிலையும் பொறிக்கப்பட்டுள்ளது. அர்த்தஜாம அழகர் ஈஸ்வர அம்சம் என்றும், பைரவ அம்சம் என்றும், துவாரதேவதா அம்சம் என்றும், தர்மராஜர் அம்சம் என்றும் பலவித கருத்துக்கள் நிலவுகின்றன.

நாள்தோறும் பள்ளியறை பூஜை, பைரவ பூஜையைத் தொடர்ந்து, அர்த்தஜாம அழகருக்கு வழிபாடு நடைபெறும். அப்போது மணம் பொருந்திய தாம்பூலத்தை நைவேத்தியம் செய்வார்கள். இவர் பல்லி வடிவில் வழிபட்ட ஈஸ்வரன், பல்லிகேஸ்வரர் என்ற பெயரில் இரண்டாம் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு அருகில் எழுந்தருளியுள்ளார்.

அர்த்தஜாம அழகரை வழிபட்டால், களவு போன அல்லது தொலைந்து போன பொருட்கள் திரும்பக் கிடைத்திடும். செல்வங்கள் நிலைத்து நிற்கும். கடன் தொல்லைகள் நீங்கும். செல்வங்கள் சேர்ந்திடும் என்பது நம்பிக்கை. சிதம்பரம் நடராஜர் கோயில் செல்வோர் அவசியம் இப்பெருமானை தரிசித்து சகல நலன்களையும் பெற்றிடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com