காங்கேயம் காளையும் சென்னிமலை முருகனும்!

காங்கேயம் காளையும் சென்னிமலை முருகனும்!

- கடம்பூர் ராம்குமார்

நாம் அனைவரின் வாழ்விலும் பயணங்கள் மிக முக்கியமான ஒன்று. சிலசமயம் அது நம் வாழ்க்கையை கூட மாற்றும். சில பேருக்கு வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத ஒன்றாக அமையும். அப்படி நான் சென்ற ஓர் பயணம்தான் சென்னிமலை. இந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. எதார்த்தமாக இந்த ஊருக்குச் செல்ல நேர்ந்தது. இரவு அங்கு தங்கி மறுநாள்தான் கிளம்பும் சூழல்.

இரவு விசாரித்தோம் அந்த ஊரின் சிறப்புகள் என்னவென்று. அவர்கள் முதலில் கூறியது முருகன் கோயில் பற்றி. கோயில் எங்கே என கேட்டேன். உடனே திரும்பி ஓர் உச்சியில் தெரிந்த வேல் விளக்கை காட்டினார். ஆம் மலை மீது முருகன் கோயில். கோயிலுக்கு எப்போது போனால் சிறப்பு என்றோம். அவர் காலை 5.30 மணி அளவில் அடிவாரத்திற்கு போங்க. செவ்வாய் கிழமை சிறப்பு நாள். கூட்டம் கூடும் என்றார்.

விடிகாலை முன்பாக எழுந்து சரியான நேரத்திற்கு சென்றோம் அடிவாரத்திற்கு. 5.30 மணி அளவில் மக்கள் வரத் தொடங்கினர். நடந்தும், வாகனங்களிலுமாக. மலை வழியும் படிகட்டுகள் வழியும் உண்டு.

நாங்கள் அடிவாரத்தில் நிற்கும்போது காளை மாடு ஒன்று பனைப் பைகளைத் தொங்கவிட்டவாறு நின்றது. அருகே சென்று விசாரித்தோம். இந்த மாடுகள் தினமும் முருகனுக்காக அடிவாரத்தில் உள்ள தீர்த்த குளத்தில் இருந்து புனித நீர் கொண்டு செல்லுமாம் படிகட்டுகள் ஏறி! அதுவும் 1310 படிகள். இதைக் கேட்டவுடன் ஆச்சர்யம் மேலோங்க, மாடுடன் பயணிக்க ஆரம்பித்தோம். அடிவார விநாயகரை வழிப்பட்டு விட்டு... தொடர்ந்து படிகட்டுகள் ஏற ஏற... மாட்டை பார்த்த பக்தர்கள் அதை தொட்டு வணங்கினர். சிலர் மாலை இட்டனர். பழம் கொடுத்தனர். சிலர் ஆச்சரியமாக பார்த்தனர். மாடை வழிநடத்த ஒருவர் வருகிறார். மாட்டுக்கு ஆங்கே சிறிது ஓய்வு!

இந்த சேவை 60 வருடங்களாக இங்கு நடைபெறுகிறதாம்! பாதி தூரம் ஏறிய பிறகு ஒரு விநாயகர் ஆலயத்தில் மாட்டிற்கு பூசை இட்டு மாலை சாற்றி அனுப்பினார்கள். மாடு சரியாக அரை மணி நேரத்தில் சன்னதி அடைந்தது. புனித நீரும் முருகனிடம் சேர்க்கப்பட்டு அபிசேக ஆராதனை நடைபெற்றது. மக்கள் மகிழ்ந்தனர்.

எனக்கு முருகனை பார்த்த மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க.... இப்படி மாடு முருகனுக்காக மலையேறும் காட்சியைப் பார்த்ததும், அம்மாடுடன் படியேறிச் சென்றதும் ஆச்சர்யம் நிறைந்த அனுபவமாக இன்னும் மனதில் நிற்கிறது.

மலையேறிய மாட்டின் கட்டுக்கோப்பான தோற்றம்... விசாரித்ததில் அது காங்கேயம் காளையாம். இதுபோல மலையேற சுழற்சி முறையில் மூன்று காளைகள் இருக்கிறதாம். அவற்றின் பெயர்கள் செந்தில்நாதன், சண்முகம், குமார்... இந்தக் காட்சியைப் பார்க்க  நீங்கள் அதிகாலை 5.45 அடிவாரத்தில் இருக்கனும். தினமும் நடைபெறும். இதுவே எங்கும் பார்க்க முடியாத சிறப்பு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com