அரசமர ரூபத்தில் அருளும் ஸ்ரீ மகாவிஷ்ணு!

ஸ்ரீ ஆதிஜெகந்நாதப் பெருமாள்
ஸ்ரீ ஆதிஜெகந்நாதப் பெருமாள்

காவிஷ்ணு அமர்ந்த, கிடந்த, நின்ற என மூன்று திருக்கோலங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கும் திவ்யதேசத் திருத்தலம் ராமநாதபுரத்துக்கு அருகில் அமைந்துள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் திருத்தலமாகும். இத்தலத்தின் புராணப் பெயர் திருப்புல்லணை என்பதாகும். ஸ்ரீஆதிஜெகந்நாதப் பெருமாள் அமர்ந்த கோலத்திலும் ஸ்ரீ தர்ப்ப சயன ராமர் கிடந்த கோலத்திலும், ஸ்ரீ பட்டாபிராமர் நின்ற கோலத்திலும் என மூன்று கோலங்களில் மகாவிஷ்ணுவை இத்தலத்தில் தரிசிக்கலாம்.

முன்னொரு காலத்தில் புல்லவர், காலவர், கண்ணவர் என்ற மூன்று மகரிஷிகளும் தர்ப்பைப் புற்கள் நிறைந்த, தற்போது கோயில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் மகாவிஷ்ணுவை வேண்டி கடும் தவமியற்றி வந்தனர். அப்போது அந்த மகரிஷிகள் அரக்கர்களின் துன்புறுத்தலுக்கு ஆளாயினர். மகரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, மகாவிஷ்ணு அரசமர ரூபத்தில் இங்கு எழுந்தருளி மகரிஷிகளைக் காத்தருளினார். பின்னர் சங்கு, சக்ரதாரியாய் அபய முத்திரையுடன் ஆதிஜெகந்நாதப் பெருமாளாகக் காட்சியளித்தார்.

கோயில் வெளித்தோற்றம்
கோயில் வெளித்தோற்றம்

இக்கோயிலின் பிரதான சன்னிதியில் மூலவர் ஆதிஜெகந்நாதப் பெருமாள் இருபுறமும் தாயார்களுடன் கிழக்கு திசை நோக்கி எழுந்தருளி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். உத்ஸவர் ஸ்ரீ கல்யாண ஜெகந்நாதப் பெருமாள். தாயார் பத்மாசினி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். கோயிலில் ஸ்ரீ ஆண்டாளுக்கு ஒரு சிறிய தனி சன்னிதி அமைந்துள்ளது.

அடுத்ததாக, ஸ்ரீ தர்ப்ப சயன ராமர் சன்னிதி அமைந்துள்ளது. சீதா தேவியை மீட்க இலங்கைக்குச் செல்ல கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி கோருகிறார். மூன்று நாட்கள் அங்கேயே இருந்தும் சமுத்திரராஜன் வெளியே வரவில்லை. கோபமடைந்த ஸ்ரீராமபிரான் சமுத்திரத்தை வற்றச் செய்வதாக சபதம் செய்ய, சமுத்திரராஜன் தனது தவறை உணர்ந்து ராமபிரான் முன்பு தோன்றி, மன்னிப்புக் கேட்டதோடு, பாலம் கட்ட வசதிகளைச் செய்து கொடுக்க சம்மதிக்கிறார். ஸ்ரீராமபிரான் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த சமுத்திரராஜன் கடலை மென்மையாகவும் தாழ்வாகவும் மாற்றி அமைத்தார். இதன் பின்னர் இலங்கைக்குச் செல்ல எளிதில் பாலம் அமைக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீராமன் மூன்று நாட்கள் தர்ப்பைப்புல்லின் மீது சயன நிலையில் உபவாசம் இருந்தார். இதனால் இத்தலத்து ராமபிரான் ஸ்ரீ தர்ப்ப சயன ராமர் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த சன்னிதியில் ஸ்ரீராமபிரான் தர்ப்பைப் படுக்கையில் படுத்திருக்க, கடல் அரசன் இலங்கைக்கு வழிகாட்டுவதற்காகக் காத்திருக்கிறார்.  இந்த சன்னிதியில் லட்சுமணன் ஆதிசேஷன் வடிவத்தில் பெருமாளுக்குப் படுக்கையாக அமைந்திருக்கிறார். இந்த சன்னிதிக்கு வெளியே ஸ்ரீ விபீஷணன் சிற்ப வடிவத்தில் அமைந்திருக்கிறார். சீதையை மீட்கச் செல்லுமுன் ஸ்ரீராமபிரான் இங்கு தங்கிய தலம் என்பதால், கருவறையில் சீதை இல்லை. லட்சுமணரின் வடிவமாக ஆதிசேஷன் இருக்கிறார். ஆஞ்சனேயர் மட்டும் அமைந்துள்ளார். சீதையை மீட்டு ராமேஸ்வரம் திரும்பிய ஸ்ரீராமபிரான், இத்தலத்தில் ஒரு தனி சன்னிதியில் ஸ்ரீ பட்டாபிராமனாக சீதை, லட்சுமணருடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீ ஆதிஜெகந்நாதருக்கு பங்குனி மாதத்திலும் ஸ்ரீராமபிரானுக்கு சித்திரை பிரம்மோத்ஸவத்திலும் உத்ஸவம் நடைபெறுகிறது. மேலும், வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜயந்தி, பொங்கல் மற்றும் தீபாவளி, புரட்டாசி சனிக்கிழமைகள் முதலான நாட்களில் விசேஷ உத்ஸவங்கள், கார்த்திகை தீபம் மற்றும் நவராத்திரி உத்ஸவம், ஆவணியில் மூன்று நாட்கள் பவித்ரோத்ஸவம் முதலான விசேஷங்கள் நடைபெறுகின்றன.

எழில்மிகு கோபுரம்
எழில்மிகு கோபுரம்

திருமங்கை ஆழ்வார் இத்தலத்தினை தனது 21 பாசுரங்கள் மூலம் மங்களாசாஸனம் செய்துள்ளார். வழக்கமாக, மகாலட்சுமி தாயாரை மடியில் இருத்தி காட்சி தரும் நரசிம்மப் பெருமாள் இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவியோடு காட்சி தருவது சிறப்பு.   இத்தகைய நரசிம்மர் தரிசனம் சிறப்பு என்றும் கூறப்படுகிறது. வேண்டும் வரங்களைத் தரும் தலமாக இது விளங்குகிறது. பிள்ளைப்பேறு இத்தலத்தின் சிறப்பம்சமாகும். சேது தீர்த்தத்தில் நீராடினால் நமது அனைத்து பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். கிரக தோஷங்களும் நீங்குகின்றன. திருமணத் தடை உள்ளவர்கள் உத்ஸவர் கல்யாண ஜெகந்நாதரிடம் வேண்டிக்கொண்டால் திருமணத் தடைகள் விலகுகின்றன. தல விருட்சம் அரசமரமாகும். ஸ்வாமி சன்னிதிக்குப் பின்புறம் அமைந்துள்ள இந்த அரசமரத்தை பக்தர்கள் மகாவிஷ்ணுவாகவே கருதி வழிபடுகின்றனனர். இந்தத் தலத்தின் தீர்த்தம் சக்ர தீர்த்தம் ஆகும்.

தரிசன நேரம்: காலை 7.30 முதல் மதியம் 12.15 மணி வரை. மாலை 3.30 முதல் இரவு 8 மணி வரை.

அமைவிடம்: மானாமதுரையிலிருந்து திருப்புல்லாணிக்கு பேருந்து வசதிகள் உள்ளன.  ராமேஸ்வரத்திலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், ராமநாதபுரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com