உருவ வழிபாடும் அருவ வழிபாடும்!
மனம் என்பது அலைந்து திரிவது. ஒன்றில் ஈடுபட்டு, சில வினாடிகள் கூட அதில் நிலைத்து நில்லா தன்மையினை உடையது. இந்த மனத்தினை ஒன்றில் அகப்படச் செய்து, நிலைபெறச் செய்வதே வழிபாட்டின் நோக்கம். வழிபாடு என்பது மனத்தை ஒரு வழியில் நிலைப்படுத்தலை குறிக்கிறது. ‘படுதல்’ என்பது தோன்றுதல், அகப்படுதல் எனவும் பொருள்படும். மனிதனை, விலங்கு மற்றும் பிற உயிர்களிலிருந்து வேறுபடுத்திக் காண்பிப்பது மனமாகும். மனிதனை பண்பாட்டில் நிறுத்தி வைப்பதும் மனமே. மனதின் உயர்வெனப்படுவது கட்டுக்கடங்கி ஒரு வழிப்படுதல் ஆகும். இதனையே வழிபாடு செய்கிறது.
அருவ நிலையிலும், உருவ நிலையிலும் பரம்பொருள் மனிதனை மனத்தின் வழியே செலுத்துகிறார். மனித மனமானது நிலைத்த வழியில் நிற்க வேண்டுமானால் பற்றுக்கோடு அவசியமாகும். மனத்தை ஒருநிலைப்படுத்த எல்லா மதத்தினரும் அவரவர் பண்பாட்டுக்கு ஏற்ப பற்றுக்கோட்டினை அமைத்துக் கொண்டனர். அதன் வழி, தனது சிந்தையை செலுத்தி மனதினை ஒருமுகப்படுத்த முயல்கின்றனர். கடவுளை பற்றுக்கோடாக அமைக்க அருவம் மட்டுமல்லாது, உருவமும் வேண்டியதாயிற்று.
‘அருவமாய் நின்றாரை யார் அறிவார்? உருவமாய்த் தோன்றிலனேல் உற்று’ என்கிறார் மெய்கண்டார். கண்டவை யாவையும் இறை உருவமே என்பது சிறந்ததொரு தத்துவ நிலையாகும். இருப்பினும், இறைவனுக்கும் மனிதப் போர்வை அமைத்துக் காட்டுவது மனித வாழ்வுக்கு வழிகாட்டியாக அமைகிறது. உருவத்தின் வழியாக இறைமை பண்புகளை எளிதில் விளக்கிட முடியும். உருவமும், உருவ வழிபாடும் வாழ்க்கைக்கு வழிகாட்டுபவையாக, மனித பண்பாட்டை வளர்ப்பவையாக அமைகின்றன. அதன் பயன் கருதி மனித உருவை சிறிதும், பெரிதுமாக கூட்டியும், குறைத்தும் உணர்த்த வேண்டிய கருத்துக்கேற்ப இறைவனுக்கு உருவம் அமைக்கப்பட்டது. மனதின் தத்துவத்தை, மெய்ப்பொருளின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவ வழிபாடும் அருவ வழிபாடும் அமைகிறது. பரம்பொருளின் அருவ நிலையில் வெளிப்படுவது அருள் அல்லது ஆற்றல் ஆகும். இதனையே வடமொழியில் சக்தி என்கிறோம்.