மன அமைதி தரும் இடும்பாவனம் ஸ்ரீசற்குணேஸ்வரர்!

மன அமைதி தரும் இடும்பாவனம் ஸ்ரீசற்குணேஸ்வரர்!

யற்கை எழில் சூழ்ந்த சோழ வளநாட்டில், தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களுள் ஒன்று இடும்பாவனம். மகாபாரதக் காலத்தில் வாழ்ந்த இடும்பன் பூஜித்துப் பேறு பெற்ற தலமாதலின் இத்தலம், ‘இடும்பாவனம்’ எனப் பெயர் பெற்றது. பஞ்ச பாண்டவர்களுள் ஒருவனான பீமன் ‘தலைமறைவு‘ வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் வந்தபோது இடும்பாவனத்துக்கு வந்தார். அருகில் உள்ள இடும்பனின் தலைநகரமாகிய குன்றளூரில் இடும்பியைக் கண்டு மணம் புரிந்தார். பின்னர் பீமன் இடும்பியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி, சிவனாரை வணங்கி மகிழ்ந்தார். மிகப் பழைமை வாய்ந்த இத்தலத்தில் பிரம்மதேவர், ஸ்ரீராமபிரான், எமதர்மன் போன்றோர் வழிபட்டு அருள் பெற்றுள்ளனர்.

பிரம்மதேவர் சத்வ குணங்கள் பெற வேண்டி தவம் புரிந்து, சிவபெருமானை இங்கு வழிபட்டு அருள் பெற்றதால் இத்தல ஈசனை சற்குணேசர், ஸத்குண நாதர் என்று அழைக்கின்றனர். அகத்திய மாமுனிவர் இறைவனின் மணக்கோலம் கண்ட தலங்களுள் ஒன்றாக, ‘இடும்பாவனம்’ புகழப்படுகின்றது. இத்தலம் பிதுர்முக்தித் தலங்களுள் ஒன்றாகும். ஆகவே, பிதுர்க் கர்மாக்களைச் செய்வதற்கு இத்தலம் மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. சிவராத்திரியன்று உபவாசம் இருந்து இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சற்குணநாதரை வணங்கினால், முன்னோரது பாவங்கள் நீங்கி அவர்கள் மோட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை.

நந்தி, பலிபீடம், கொடிமரம் ஆகியன ஆலயத்தின் வெளியே காணப்படுகின்றன. கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், ஒரு பிராகாரத்துடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர மாடத்தில் இருபுறமும் வள்ளி தெய்வானையுடன் முருகர் மற்றும் விநாயகர் உள்ளனர். நாற்புறமும் அகலமான மதில்கள் சூழ ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே சென்றால் இருபுறமும் முன் வரிசையில் இடும்பன், அகத்தியர், சூரியன், சந்திரன், நால்வர், பைரவ மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. முதலில் ராஜகோபுரத்துக்கு நேராக பிரம்மாண்டமான சபா மண்டபம், மூடுதளமாக உள்ள மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என இறைவன் சன்னிதி அமைந்துள்ளது.

சுயம்பு லிங்கமான மூலவரின் கருவறை உயர்ந்த அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் கருணையே வடிவாகக் காட்சி தருகின்றார் ஸ்ரீ சற்குணேஸ்வரர். இப்பெருமானை வழிபட்டால் மன அமைதியும், அற்புத வரங்களையும் பெறலாம். வாழ்வில் ஏற்படக்கூடிய இடர்களை நீக்க வல்லவர் இந்த இடும்பாவனேஸ்வரர் என்னும் சற்குணேஸ்வரர். ‘இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம்’ என்று திருஞான சம்பந்தர் தனது பதிகத்தின் 10வது பாடலில் இக்கருத்தினை உறுதிப்படுத்துகின்றார். லிங்க மூர்த்திக்கு பின்புறம் சுவரில் ஆதி தம்பதியான அம்மையும், அப்பனும் எழில் வடிவோடு திருமணக் கோலத்தில் தரிசனம் தருகின்றனர். சுவாமி சன்னிதிக்கு வலப்புறம் தியாகராஜர் சன்னிதி, முக மண்டபத்துடன் விளங்குகின்றது. சன்னிதிக்குள் தியாகேசர், அம்மையோடு திருவாபரணங்கள் ஜொலிக்க அற்புத தரிசனமளிக்கின்றார்.

மங்கல நாயகி அம்பாள் தெற்கு நோக்கி தனி சன்னிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். சர்வ மங்கலங்களையும் அருளும் வல்லமை மிக்கவள் இந்தத் தாயார். அழகிய தூண்களும், சிலைகளும் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. முறையான சிவாலய கோஷ்ட மூர்த்தங்களோடு, பின்புற வரிசையில் மகாகணபதி, கஜலட்சுமி, சனீஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோரின் திருவடிவங்கள் அருள் செய்கின்றன. இங்குள்ள வெண்மை நிறமுடைய சுவேத விநாயகர் மிகவும் பிரசித்தமானவர்.

ஆலயத்தின் எதிரே உள்ள பிரம்ம தீர்த்தம், எமன் ஏற்படுத்திய எம தீர்த்தம் மற்றும் அகத்திய முனிவர் உண்டாக்கிய அகஸ்திய தீர்த்தம் ஆகியன இத்தலத்தின் தீர்த்தங்களாக உள்ளன. தல விருட்சமாக வில்வம் விளங்குகிறது.

அமைவிடம்: திருத்துறைப்பூண்டியில் இருந்து தென்மேற்கே 16 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com