ஆயுள் விருத்தி தரும் ஸ்ரீ ஆதிமூலேஸ்வரர்!

ஆயுள் விருத்தி தரும்
ஸ்ரீ ஆதிமூலேஸ்வரர்!

மார்கண்டேயர் என்றும் பதினாறு வயதுடையவராக இருக்க வரம் பெற்றது போல், சித்திரகுப்தர் என்றும் பன்னிரண்டு வயதுடையவராக இருக்க வரம் பெற்ற தலம் பரங்கிப்பேட்டை ஸ்ரீ ஆதிமூலேஸ்வரர் திருக்கோயிலாகும்.

காஷ்யப மகரிஷி ஒருசமயம் சிவனை வேண்டி யாகம் நடத்தியபோது, வருணன் மழையைப் பொழிவித்தான். இதனால் காஷ்யபரிடம் சாபம் பெற்று தனது சக்தியை இழந்தான் வருணன். இழந்த சக்தியை மீண்டும் பெற, ஈசனை வேண்டினான். வருணனுக்கு அருள்புரிந்த சிவன், அவனது வேண்டுகோளுக்கிணங்க இத்தலத்தில், ‘ஆதிமூலேஸ்வரர்' எனும் திருநாமத்தோடு இத்தலத்தில் அருள்புரிகிறார். மகா அவதார புருஷர் பாபாஜி பிறந்த தலம் இதுவெனக் கூறப்படுகிறது.

சிவன் கோயில்களில் பைரவருக்கு அர்த்தஜாம பூஜை செய்தபின் நடை அடைப்பது வழக்கம். இக்கோயிலில், பைரவருக்கும், சித்திரகுப்தருக்கும் பூஜை செய்து நடை அடைக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது. அர்த்தஜாமத்தில் சித்திரகுப்தரே சிவனுக்கு பூஜை செய்வதாக இங்கு ஐதீகம்.

சித்திரகுப்தர் சிவனருள் பெற்று, எமதர்மனின் கணக்கராகப் பணி பெற்ற தலம் இது. இவரது 12ம் வயதில் உயிர் பிரியும் விதி இவருக்கு இருந்தது. இதனால் அவரது தந்தை வசுதத்தன் வருந்தினார். அவரைத் தேற்றிய சித்திரகுப்தன், இத்தலத்து சிவனை வழிபட்டார். எமன் அவரைப் பிடிக்க வந்தபோது, சிவன் அம்பிகையை அனுப்பி எமனைத் தடுத்தார். எமனிடம் அம்பிகை, ‘சித்திரகுப்தன் சிவபக்தன். அவனை விட்டுவிடு!' எனக் கட்டளையிட்டாள்.

எமனும் சித்திரகுப்தனை தண்டிக்காமல் விட்டதுடன், சிவனது கட்டளைப்படி தனது உதவியாளராகவும் ஏற்றுக்கொண்டார். மேலும், சித்திரகுப்தரும் என்றும் 12 வயதுடையவராக இருக்கும்படியான அருளைப் பெற்றார். அம்பாள் சன்னிதி எதிரே சித்திரகுப்தருக்கு சன்னிதி உள்ளது.

மரண பயம் நீங்கவும், ஆயுள் விருத்தி பெறவும், நாட்பட்ட நோய்கள் தீரவும் இங்கு மிருத்யுஞ்சய ஹோமம் செய்து வழிபடலாம். அறுபது மற்றும் எண்பதாம் திருமணங்களும் இங்கு செய்து கொள்கிறார்கள். ஞானம், மோட்சம் தரும் கேது பகவானுக்கு அதிதேவதை சித்திரகுப்தர். எனவே, இவையிரண்டும் கிடைக்க இத்தலத்தில் சித்திரகுப்தரை வணங்கலாம்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஈசான்ய (வடகிழக்கு) திசையில் அமைந்த கோயில் இது. வேண்டுவோருக்கு அமுதம் போல அருளை வாரி வழங்குவதால் இத்தல அம்பிகைக்கு அமிர்தவல்லி என்று பெயர். அம்பிகை சிலையின் கீழ் ஸ்ரீசக்ரம் உள்ளது. சித்திரை மாதத்தில் முதல் ஏழு நாட்கள் சிவன், அம்பிகை மீது சூரிய ஒளி விழும். இந்நாட்களில் இங்குள்ள சூரியனுக்கு முதல் பூஜை நடைபெறும்.

வருணன் அருள் பெற்ற தலமென்பதால் குறைவின்றி மழை பெய்யவும், அதிக மழைப்பொழிவால் சேதம் உண்டாகாமல் இருக்கவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். இத்தலத்தில் துர்கையை சுற்றி வந்து வழிபடும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது.

பிராகாரத்தில் ராமேஸ்வரம் ராமலிங்க சுவாமி, காசி விஸ்வநாதர் சன்னிதிகள் உள்ளன. இவை தவிர, நீலகண்டர், நீலாயதாட்சி, சக்தி விநாயகர், சுப்பிரமணியர், கடம்பன், பாதாள லிங்கம், கஜலட்சுமி, கால பைரவர், சூரியன் ஆகியோரும் உள்ளனர். திருநள்ளாறு போல, கோயில் முகப்பில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு எள் தீபமேற்றி இங்கு வழிபடலாம்.

அமைவிடம்: சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் பரங்கிப்பேட்டையில், சேவா மந்திர் பேருந்து நிலையம் அருகில் உள்ளது கோயில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com