நீத்தார்கடனை நிறைவேற்றும் மஹாளய பட்சம்!

மகாளயபட்சம் ஆரம்பம்
நீத்தார்கடனை நிறைவேற்றும் மஹாளய பட்சம்!

‘ஏ ஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா ந சபாந்தவஹா

தே சர்வே த்ருப்திம் ஆயாந்து மயா

உச்ரிஷ்டைஹி குஸௌதஹைஹி

த்ருப்யத் த்ருப்யத் த்ருப்யத்’

மேலே கூறப்பட்டுள்ள ஸ்லோகம் ஒவ்வொரு அமாவாசையன்றும், நீத்தார்கடனை நிறைவேற்றுகையில் உச்சரிக்கப்படுவதாகும்.

இதன் பொருள்: ‘எனக்குத் தாயாகவோ, தந்தையாகவோ, சகோதரராகவே பிற உறவினராகவோ இல்லாவிட்டாலும், யாரெல்லாம் இவ்வுலகை விட்டு நீங்கியிருக்கிறார்களோ, அவர்களுடைய ஆன்மாக்கள் புண்ணியம் அடைய, இந்த அமாவாசை நாளில், தர்ப்பையோடு கலந்த நீரை அர்ப்பணிக்கிறேன்’ என்பதாகும்.

பொதுவாகவே, அமாவாசை தோறும் வீடுகளில் செய்கின்ற தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்குச் செல்வதாகவும், அவர் அவற்றை நமது முன்னோர்களிடம் ஒப்படைப்பதாகவும் கூறப்படுகிறது. அமாவாசைகளில் நீத்தார்கடனை நிறைவேற்ற இயலாதவர்கள், மஹாளயபட்ச காலத்தில் இதைச் செய்தால் மிகுந்த பலனை அளிக்கும்.

மஹாளயபட்சம்: பௌர்ணமி முதல் அமாவாசை வரை, புரட்டாசி மாதத்தின் கிருஷ்ணபட்சத்தில் சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் காலமாகும். பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் பிரதமை, த்விதியை, த்ரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, த்ரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை ஆகிய 15 திதி நாட்களில், குறிப்பிட்ட திதியில் ஒரு முறையும், அமாவாசையன்று ஒரு முறையும், இரு தடவைகள் தர்ப்பணம் செய்வது சிறந்ததாகும். மகாபரணி, மத்யாஷ்டமி, வைதிருதி, மகாவியதீபாதம், அமிர்தா நவமி ஆகிய நாட்கள் தர்ப்பணம் செய்ய விசேஷமான நாட்கள் எனினும், இந்த நாட்களில் செய்ய இயலாதவர்கள் ஏதாவதொரு நாளில் செய்யலாம்.

‘மறந்தவனுக்கு மஹாளயத்தில் கொடு’ என்கிற மாதிரி, இந்த நீத்தார்கடனை மஹாளயபட்ச காலத்தில் செய்கையில், மறைந்த முன்னோர்களின் ஆன்மாக்கள் மகிழ்வுற்று ஆசிகள் வழங்குவார்கள். ‘காருண்ய பிதாக்கள்’ என அழைக்கப்படும் இவர்களின் ஆசிகளின் மூலம் பித்ரு தோஷம் மற்றும் பிற தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெறலாம். நாம் அளிக்கும் தர்ப்பணத்தை ஏற்பதற்காக முன்னோர்கள் மட்டுமல்ல, அறிந்தவர்கள், அறியாதவர்கள் என பலர் காத்திருப்பது வழக்கம்.

நமது உயர்வுக்கு நன்றி கூறும் வகையிலும், தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கோரும் வகையிலும், பிறர் நல்வாழ்வுக்காகவும், பிரார்த்தனை செய்து, மஹாளயபட்ச தர்ப்பண வழிபாட்டை மேற்கொள்கையில், ஆன்மாக்கள் சாந்தியடைவார்கள். வீடுகளில் மட்டுமல்லாது, நீர் நிலைகள், கடலோரங்களில் இதைச் செய்து முடிந்ததை தானமாக கொடுப்பதோடு, பறவைகள், கால்நடைகள் ஆகியவைகளுக்கு உணவளிப்பதும் அவசியமாகும்.

உபரி தகவல்கள்: துர்கா தேவி தனது புகுந்த வீடாகிய கயிலாய மலையிலிருந்து தாய் வீடாகிய பூவுலகுக்கு, அருமை மகன்கள் கணேசர், கார்த்திக் மற்றும் லெட்சுமி, சரஸ்வதியுடன் வரும் நாளை, ‘மஹாளயம்’ அல்லது ‘தேவிபக்ஷ’ என பெங்காலிகள் கூறுகிறார்கள். அன்று காலை நீராடி, விரதமிருந்து பூஜை செய்து தேவி ஸ்தோத்ரம் படிப்பார்கள்.

அத்வைத வேதாந்த பண்டிதராகிய அப்பைய தீட்சிதரின் அவதார தினமும் இன்று கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் அவதாரமென அழைக்கப்படும் இவர், பல சாதனைகளைப் புரிந்தவர். பாமர மக்களுக்கும் சிவ தத்துவம் மற்றும் அத்வைதத்தை புரியவைக்க தொண்டர்களைத் திரட்டி ஒரு இயக்கமே நடத்தியவர். இவருடைய புகழ் வடநாட்டில் காசி வரையிலும் பரவியிருக்கிறது. பரந்த நோக்கம் கொண்ட அப்பைய தீட்சிதர் 104 நூல்களை எழுதியதாகத் தெரிகிறது. இளம் வயதிலேயே சிவ தீட்சை பெற்று சிவ மூல மந்திரத்தை முறைப்படி ஓதுபவராக இருந்ததால், இவருடைய தொழுகையெல்லாம் சிவனைக் குறித்தே இருந்தது. மேலும் இவரது, ‘சித்தாந்த லேச சங்கிரகம்’ என்கிற வேதாந்த நூல் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com