ஓணம் பண்டிகையும் பத்து நாட்கள் விசேஷமும்!

ஓணம் பண்டிகையும் பத்து நாட்கள் விசேஷமும்!

கேரளம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுச்சூழலும், அங்கு கொண்டாடப்படும் பாரம்பர்ய விழாவான ஓணம் பண்டிகையும்தான். மகாபலி எனும் சிறந்த அரசருக்கு பகவான் மகாவிஷ்ணு அளித்த வரத்தின்படி ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் தமது நாட்டு மக்களின் மகிழ்ச்சியைக் காண வரும் நாட்களையே ஓணம் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது என்கிறது புராணக்கதை. கேரள மக்கள் தங்கள் வீடுகளின் முன் பத்து நாட்களும் மலர்களால் கோலமிட்டு ஆடிப்பாடி மகிழ்வார்கள் என்றாலும், தொடர்ந்து பத்து நாட்களும் வெவ்வேறு நட்சத்திரப் பெயரில் அந்தந்த நாட்களுக்குரிய சிறப்புடன் கொண்டாடப்படுகிறது ஓணம் பண்டிகை. அந்தப் பத்து நாட்களின் சிறப்பைப் பார்ப்போமா?

முதல் நாள் அத்தம்: இன்று இந்நாளில் வாமன மூர்த்தி திருக்கோயில் மற்றும் கொச்சியில் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெறும். அன்று ஒரு வகை மலரால் கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அத்தப் பூக்கோலம் போட்டு மகிழ்வர்.

2வது நாள் சித்திரா: உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் அன்று கோயில் சென்று வழிபாடுகளை நிகழ்த்துவது சம்பிரதாயம்.

3வது நாள் சுவாதி: இந்த நாளில் உறவினர் மற்றும் பிரியமான நட்புகள் என்று ஒருவருக்கொருவர் பரிசுகளை அளித்து மகிழ்வர்.

4வது நாள் விசாகம்: அறுவடையில் கிடைத்த புதிய தானியங்கள், காய்கறிகள், பழங்களை வைத்து கசப்பு சுவை தவிர்த்த அறுசுவை உணவான, ‘ஓணம் சத்யா’ தயாரித்து உண்பார்கள். பண்டிகைப் பலகாரங்களைச் செய்வர்.

5வது நாள் அனுஷம்: கேரளாவின் பிரசித்தி பெற்ற (வள்ளக்களி) படகுப் போட்டிகளை பல பகுதிகளில் இன்று நடத்தி, வெற்றிக் களிப்படைவார்கள்.

6வது நாள் திருக்கேட்டை: இது முன்னோர்களிடம் ஆசி பெறும் நாளாகிறது. இந்நாளில் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்கிறார்கள்.

7வது நாள் மூலம்: கோயில்களில் ஒணம் சத்யா விருந்து வழங்கப்படும். புலிகளி, கைகொட்டுக்களி போன்ற கேரள கிராமப்புறக் கலைகள் இன்று நடத்தப்படும்.

8வது நாள் பூராடம்: வீட்டின் முன் போடப்படும் பெரிய மலர்க்கோலத்தின் நடுவில் வாமனர் சிலையை வைத்து வழிபட்டு, அவரை தங்கள் வீட்டுக்கு வரவேற்கின்றனர்.

9வது நாள் உத்திராடம்: மகாபலி மன்னரின் வருகையை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு உணவு வகைகளை சமைத்தும், அடுத்த நாளை வரவேற்கவும் ஆயத்தமாகிறார்கள்.

10வது நாள்: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மலர் வகையைச் சேர்த்து செய்யப்படும் மலர் அலங்காரங்களுடன் வாசலில் அரிசி மாவுக் கோலமிட்டு, ஓண விருந்துடன் திருவோணம் பண்டிகை நிறைவடைகிறது.

அறுவடைத் திருவிழாவாக பருவ மழை நிறைவு பெற்றதும், சிம்ம மாதத் (ஆவணி) துவக்கத்தில் நடத்தப்படும் இந்த விழா, ஓராயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருவதாக வரலாற்றுச் செய்தி ஒன்று கூறுகிறது. மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் ஓணம் பண்டிகை அமைந்துள்ளது வெகு சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com