ராகு - கேது பெயர்ச்சி: பலன்களும் பரிகாரமும்!

ராகு-கேது பெயர்ச்சி
ராகு-கேது பெயர்ச்சி

வக்கிரகங்களில் சாயா கிரகங்கள், நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் குறிப்பிடப்படுபவை ராகுவும் கேதுவும். இந்த இரண்டு கிரகங்களுக்கும் ஜாதகத்தில் சுயமாக வீடுகள் கிடையாது. அதனால் இவ்விரு கிரகங்களும், பன்னிரண்டு ராசி வீடுகளில் எந்த வீட்டில் அவர்கள் தங்கி இருக்கின்றனரோ அந்த வீட்டின் ஆதிக்கத்தை தமதாகவே எடுத்துக்கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள்.

போகக்காரகனான ராகுவும், ஞானக்காரகனான கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்வது வழக்கம். அப்போது அவர்கள் இருக்கின்ற வீடுகளுக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களைக் கொடுக்கின்றனர்.

அந்த வகையில், தற்போது ராகு பகவான் மேஷ ராசியில் சஞ்சாரம் செய்துகொண்டு இருக்கிறார். இந்த வருடம் அக்டோபர் மாதம் 30ம் தேதிக்குப் பிறகு அவர் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனைத் தொடர்ந்து அவர் ஒன்றரை வருடங்கள், அதாவது 2025 மே மாதம் வரை மீன ராசியிலேயே சஞ்சாரம் செய்யவிருக்கிறார். அதேபோல், கேது பகவான் தற்போது துலாம் ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். எதிர் வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதிக்குப் பிறகு அவர் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனைத் தொடர்ந்து அவர் ஒன்றரை வருடங்கள், அதாவது 2025 மே மாதம் வரை கன்னி ராசியிலேயே சஞ்சாரம் செய்யவிருக்கிறார்.

மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல், சாயா கிரகங்கள் என்ற அழைக்கப்படும் இந்த ராகுவும் கேதுவும் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரும் சுபாவம் கொண்டவர்கள். அடுத்த மாதம் 30ம் தேதி நடைபெற உள்ள இந்த ராகு – கேது பெயர்ச்சி ஒருசில ராசியினருக்கு நற்பலன்களைக் கொடுத்தாலும், ஒருசில ராசியினர் பரிகாரம் செய்து கொள்ளவேண்டிய நிலையிலேயே உள்ளனர். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த ராகு – கேது பெயர்ச்சி பலன்களைத் தரப்போகிறது என்பதையும் பரிகாரம் செய்யகொள்ள வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார் என்பதையும் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

ராகு – கேது பெயர்ச்சியில் நற்பலன் மற்றும் பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய ராசிக்காரர்கள்:

இந்த ராகு கேது பெயர்ச்சி, ரிஷபம், மிதுனம் மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைத் தரப்போகும் பெயர்ச்சியாக அமைய உள்ளது. அதேபோல், மேஷம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் இந்த ராகு - கேது பெயர்ச்சியை ஒட்டி அவசியம் பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய ராசிக்காரர்களாக உள்ளனர்.

இந்த ராகு கேது பெயர்ச்சி பொதுவாகவே, பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய ராசிக்காரர்களுக்கு நிதி சிக்கல் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு பெயர்ச்சியாகவே அமைகிறது. நிதி சிக்கலால் இவர்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால் இந்தக் காலகட்டத்தில் நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பது நலம். தொழில், வியாபாரத்தில் பல சிக்கல்கள் மற்றும் சிரமங்களைச் சந்திக்கவேண்டி இருக்கும். மேலும் நெருங்கிய வட்டாரத்தில் மன வேற்றுமை, விரிசல்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி, தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களைக் கையாளும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். இந்த ராசிக்காரர்கள் மன அழுத்தத்தின் காரணமாக பல்வேறு உடல் நலப் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியும் இருக்கும். வேலைக்குச் செல்பவர்கள் பணியிடத்தில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். கடன் தொல்லை நெருக்கடியைக் கொடுக்கும். திருமணத் தடை, குழந்தைப் பேறில் காலதாமதம், நீதிமன்ற விவகாரங்களில் இழுபறி, உடல் நலப் பிரச்னைகள், அனாவசிய விரயச் செலவுகள் அதிகம் இருக்கும்.

ராகு - கேது பெயர்ச்சி பரிகாரங்கள்:

ராகு – கேதுவை ப்ரீத்தி செய்ய துர்கா தேவியை வழிபடுவதால், அனுகூலமான பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ’ எனும் மந்திரத்தை உச்சரிப்பது, ராகு மற்றும் கேது பெயர்ச்சியினல் ஏற்படும் பிரச்னைகளுக்கு நிவாரணம் தரும்.

கடுகு எண்ணெய் மற்றும் ஏழு வகை தானியங்களை ஏழை எளியோருக்கு தானம் செய்யலாம். இவை ராகு கிரகத்தினால் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும். அதேபோல், கேது பகவானுக்கு எள் மற்றும் கருப்பு போர்வையை ஏழைகளுக்கு வழங்கலாம்.

ஒரு அனுபவம் மிக்க ஜோதிடரின் ஆலோசனையின்பேரில் ருத்ராட்சம் அணிவது ராகு -கேது பெயர்ச்சியினால் உண்டாகும் பிரச்னைகளை தீர்க்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com