இராமாயண வானரப்படை அணிவகுத்த குரங்கணி!

முத்துமாலை அம்மன்
முத்துமாலை அம்மன்

மிழ்நாட்டில் ராமேஸ்வரம் தவிர வேறு சில பகுதிகளும் ராமாயணக் கதை நடந்த இடங்களாகக் கருதப்படுகின்றன. இது தொடர்பான செவிவழி கதைகளும் உள்ளன. தென்காசி மாவட்டத்தில் தென்காசி - நெல்லை சாலையில் அமைந்துள்ள ஆலங்குளத்திலிருந்து வடக்கே நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மாயமான்குறிச்சி என்ற ஊர். வஞ்சகமாக மான் வேடம் தரித்து பர்ணசாலை அருகே வந்த மாரிசனை உண்மையான மான் என நம்பி அதை தனக்குப் பிடித்துத் தருமாறு சீதை வற்புறுத்தி கேட்டதால் ராமர் அதை பிடிப்பதற்காக துரத்தி செல்வார். ஆனால், மான் ராமருக்கு பிடிகொடுக்காமல் போக்குக் காட்டியபடி ஓடும். ஒரு கட்டத்தில் ராமர், இது சாதாரண மான் அல்ல; மாயமான் என்று புரிந்துகொள்வார். அப்படி அவர் மாயமானை அடையாளம் கண்ட இடம்தான், 'மாயமான்குறிச்சி' என அழைக்கப்படுகிறது.

முத்துமாலை அம்மன் கோயில்
முத்துமாலை அம்மன் கோயில்

விரட்டிச் செல்லும் மானை ஓர் இடத்தில் குத்தி வீழ்த்த ராமபிரான் முயற்சிப்பார். அந்த இடம், ‘குத்தபாஞ்சான்’ (குத்துவதற்கு பாய்ந்தான்) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ஊர் ஆலங்குளத்துக்கு தெற்கே சற்று தொலைவில் உள்ளது.

கடத்திச் செல்லப்பட்ட தனது மனைவி சீதையை தேடி வனத்தில் அலைந்து திரியும் ராமபிரான் கடனா நதியோரம் ஒரு புளிய மரத்தின் அடியில் தங்கி இளைப்பாறுவார். தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பாப்பாங்குளம்தான் அந்த இடம். ராமர் தங்கிய அந்த இடத்தில் அவரது பாதம் பட்ட பாறை ஒன்றும், புளியமரம் ஒன்றும் உள்ளன. அந்த இடத்தில் இப்போது பெரிய ராமர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமிக்கு முதல் நாள் இந்த கோயிலில் விமரிசையாக தேரோட்டம் நடைபெறுகிறது.

முதலில் அங்கு சிறிய கோயில் ஒன்றே இருந்ததாகவும், பின்னர் பாண்டிய மன்னன் ஆதித்யவர்மனால் பிராகாரத்துடன் கூடிய பெரிய கோயில் கட்டப்பட்டதாகவும் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். கடனா நதியில் ராமபிரான் நீராடி அங்குள்ள ஒரு பாறையில் அமர்ந்து 'சந்தியா வந்தனம்' செய்ததாகவும், மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை குறிக்கும் வகையில் அந்த பாறை 'சக்கரபாறை' என அழைக்கப்படுவதாகவும் அவர்களால் வழிவழியாகக் கூறப்படுகிறது. அந்தப் பாறை தற்போதும் அங்கு உள்ளது. கிராம மக்கள் அங்கு வந்து நீராடிச் செல்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது குரங்கணி என்ற ஊர். இங்குள்ள முத்துமாலை அம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. பறக்கும் தேர் எனப்படும் புஷ்பக விமானத்தில் ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றான். அப்படி செல்லும்போது தனது கணவர் ராமபிரான் தான் சென்ற திசையை அறிந்துகொள்ள உதவும் வகையில் சீதை தனது கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையை கழற்றி வீசினார். முத்துமாலை விழுந்த இடத்தில் அம்மன் கோயில் ஒன்று உருவானது. அங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கும் அம்மன், 'முத்துமாலை அம்மன்' என அழைக்கப்படுகிறார். இது தொடர்பான தல புராண கதையும் உள்ளது.

பின்னர் சீதையை தேடி அங்கு வரும் ராமரும், லக்ஷ்மணனும் சுக்ரீவனின் வானர படையுடன் இலங்கை செல்ல தயார் ஆவார்கள். இதற்காக அங்கு வானரப் படைகள் அணிவகுத்து நின்றதால் அந்த இடம், 'குரங்கணி' என அழைக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே, 'முன்சிறை' என்ற இடம் உள்ளது. சீதையை கவர்ந்து சென்ற ராவணன், வழியில் ஒரு இடத்தில் பாறையில் தனது புஷ்பக விமானத்தை நிறுத்தி, அங்கு சீதையை தனிமைப்படுத்தி வைத்து, சிறிது நேரம் ஓய்வெடுத்தான். இலங்கையில் சிறை வைக்கப்படும் முன்பே வழியில் சிறிது நேரம் சீதை சிறை வைக்கப்பட்ட அந்த இடம், 'முன்சிறை' என அழைக்கப்படுகிறது. அந்தப் பாறையில் இரு கண்கள் வடிவத்தில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை சீதாதேவி சிந்திய கண்ணீர் என்று சொல்கிறார்கள்.

முன்சிறை
முன்சிறை

நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் பொத்தையடி என்ற கிராமத்தினருகே மருந்து வாழ் மலை என்ற ஒரு மலை உள்ளது. ராவணன் படையுடன் நடந்த போரின்போது மயக்கமுற்ற லக்ஷ்மணனுக்கு சிகிச்சை அளிக்க மூலிகை கொண்டு வருமாறு ராமர் கூற, அனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்துக்கொண்டு செல்வார். அப்படி அவர் கொண்டு செல்லும்போது சிதறி விழுந்த ஒரு துண்டுதான் இந்த, 'மருந்து வாழ் மலை' என்று சொல்லப்படுகிறது. ஒரு கோணத்தில் பார்த்தால் இந்த மலை அனுமார் போன்று காட்சி அளிக்கும்.

இதேபோல் நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி கொழுந்து மாமலையும் சஞ்சீவி மலையின் சிதறிய பகுதி என சொல்லப்படுகிறது. சேரன்மகாதேவியில் பிரசித்தி பெற்ற ராமர் கோயில் ஒன்றும் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com