
ஆவணி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலையில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கவேண்டும் என்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது.
நாளை ஆகஸ்ட் 10ம் தேதி வியாழக்கிழமை இந்த நிறைபுத்தரி பூஜை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நிறைபுத்தரி பூஜைக்கு முந்தைய நாளான இன்று ஆகஸ்ட் 9ம் தேதி புதன்கிழமை அன்று அச்சன்கோவிலில் இருந்து நிறைபுத்தரி ஊர்வலம் நடைபெறுகிறது.
இன்று ( ஆகஸ்ட் 9 ) காலை 4 மணிக்கு அச்சன்கோவில் நடை திறக்கபட்டு நிர்மால்ய பூஜை முடிந்ததும் சுத்தம் செய்யபட்ட நிறைபுத்தரி நெற்கதிர்களை 51 கட்டுகளாக, பட்டு வஸ்திரம் சுற்றபட்டு பூஜை செய்து பிரத்யேகமாக அலங்கரிக்கபட்ட திருஆபரணபெட்டி வாகனத்தில் ஏற்றபட்டு காலை 5 மணிக்கு தேவசம்போர்டு அதிகாரிகள், கமிட்டிகாரர்கள், பக்தர்களுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.
இந்த பெட்டி மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தில் ஒப்படைப்பார்கள். இதையொட்டி மாலை 5 மணியளவு ஐயப்பன் நடை திறக்கப்படும். அதனை தொடர்ந்து நாளை 10 ஆம் தேதி காலை 5 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். மேலும் 10 ஆம் தேதி இரவு நடை அடைக்கப்படும். பின்னர் ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆகஸ்ட் 21 வரை ஐந்து நாட்கள் பக்தர்களை அனுமதிக்கப் படுவார்கள்.