கோவர்த்தன கோபாலனாக ஸ்ரீநாத்ஜி!

கோவர்த்தன கோபாலனாக ஸ்ரீநாத்ஜி!

தய்பூரில் இருந்து வடகிழக்கு திசையில் 52 கி.மீ. தொலைவில் இருக்கிறது நாத்வாரா. பஞ்ச துவாரகைகளில் இதுவும் ஒன்று. இங்கே குடிகொண்டு இருக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, ‘ஸ்ரீநாத்ஜி’ என்கிறார்கள். நாத்வாரா ஊரையே ஸ்ரீநாத்ஜி என்றும் சொல்கிறார்கள். நாத்வாரா என்றால் ஸ்ரீநாத்ஜிக்குச் செல்லும் பாதை என்று பொருள். பாகவத புராணத்திலும், கார்கா சம்ஹிதாவிலும் இந்தத் தலம் பற்றிய குறிப்புகள் உண்டு. இக்கோயில் ஸ்ரீகிருஷ்ணர் விக்ரஹம் முதலில் கோவர்த்தனத்தில் இருந்ததாம். அந்நியர் படையெடுப்பின்போது பாதுகாப்பாக யமுனை வழியே ஆக்ரா கொண்டு செல்லப்பட்டதாம். பிறகு ஆறு மாதங்கள் கழித்து இங்கே கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த விக்ரஹம் மாட்டு வண்டியில் கொண்டு வரப்பட்டபோது சின்ஹாட் என்ற கிராமத்தில் வண்டியின் அச்சாணி அளவுக்குத் தரையில் புதைந்து மேற்கொண்டு நகராமல் வண்டி நின்றுவிட்டதாம். இதுவே கடவுள் காட்டிய அடையாளம் என்று கருதி அங்கேயே ஒரு கோயிலை நிர்மாணித்தார்களாம். என்றாவது ஒருநாள் ஸ்ரீநாத் மறுபடியும் கோவர்த்தனத்துக்கே திரும்ப வருவார் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

ந்தியாவின் மேற்குப் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜஸ்மண்ட் மாவட்டத்தில் இருக்கிறது நாத்வாரா. ஆரவல்லிக் குன்றுகளில் பனாஸ் என்ற நதிக் கரையில்  அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் இங்குள்ள பாலகிருஷ்ணரின் விக்ரஹம் தேவ்டாமன் என அழைக்கப்பட்டது. இதற்கு தேவரை வென்றவன் என்று பொருள். இந்திரனை வென்று கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்ததால் இந்தப் பெயர். பின்னர் வல்லபாச்சாரியார் என்பவர் இத்தல பகவானுக்கு கோபால் எனப் பெயரிட்டார். இறுதியாக, விட்டல்நாத் என்பவர்தான் ஸ்ரீநாத்ஜி என தற்போது இருக்கும் பெயரைச் சூட்டினார்.

இந்த ஆலயத்துக்கு, ‘ஸ்ரீநாத் ஹவேலி’ என்று ஒரு பெயரும் உண்டு. ஸ்ரீநாத்ஜியின் மாளிகை என்று இதற்குப் பொருள். காரணம், அந்தக் கால  மாளிகைகளில் இருப்பதைப்போல இங்கும் பால், வெற்றிலை, இனிப்புகள், பூக்கள், நகைகள் போன்றவை வைக்கத் தனித்தனி அறைகள் இருக்கின்றன. மேலும், சமையல் அறை, குதிரை லாயம் போன்றனவும் இருக்கின்றன. கோவர்த்தனகிரியைக் கையால் தூக்கும்போது கையை எப்படி வைத்திருந்தாரோ அதேபோலக் குழந்தைக் கிருஷ்ணர் இடது கையை உயர்த்தியவாறு தரிசனம் தருகிறார். வலது கரம் இடுப்பில் வைத்தபடி இருக்கிறது.

தினசரி எட்டு முறை இக்கோயில் கருவறை திறக்கப்பட்டு ஸ்ரீகிருஷ்ணர் தரிசனம் தருகிறார். கொஞ்ச நேரம்தான் தரிசனம். மீண்டும் திரை போட்டு மூடிவிடுவார்கள். கிருஷ்ணருக்கு தோழர், தோழிகளுடன் விளையாடப் பொழுதை ஏற்படுத்திக்கொடுக்கத்தான் இந்த ஏற்பாடு. காத்திருந்து திரை விலகியதும் மீண்டும் தரிசிக்கலாம். இக்கோயிலில் சராசரியாக வாரத்துக்கு மூன்று விழாக்களாவது நடைபெறுகின்றன. விதவிதமான வண்ண ஆடைகளை அணிவிக்கிறார்கள். குழந்தையைக் கவனித்துக்கொள்வதைப்போல குளிப்பாட்டுதல், ஆடை அணிவித்தல், பிரசாதம் படைத்தல், ஓய்வு தருதல் ஆகியன தினந்தோறும் நடைபெறுகின்றன. ஜன்மாஷ்டமி, ஹோலி, தீபாவளி போன்ற சமயங்களில் ஏராளமான பக்தர்கள் இங்கே கூடுகின்றனர். பாகிஸ்தானிலும் ரஷ்யாவிலும் கூட ஸ்ரீநாத்ஜீயின் ஆலயங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com