திருநாட்டை அலங்கரித்த 
ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள்!

திருநாட்டை அலங்கரித்த ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள்!

ன்மிக அன்பர்களால் பக்தியுடன், ‘அண்ணா’ என்று அழைக்கப்பட்டவர் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள். தமது பக்தி ரசம் சொட்டும் சொற்பொழிவுகளால் பாமர மக்களின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர். இவரது சொற்பொழிவை மிகவும் விரும்பிக்  கேட்கும் அடியவர்கள், உலகம் முழுவதும் வியாபித்து உள்ளனர். விழுப்புரம் மாவட்டம், பரனுரை சேர்ந்த சுவாமிகள் கடந்த சில நாட்களாகவே வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி இருந்தார். இந்த நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஸ்ரீ சுவாமிகள் அரங்கன் அடி எய்தினார்.

சுவாமிகள் இப்பூவுலகில் தோன்றிய திருநாள் 31.8.1934. அதே நாளில் (31.8.2023) சுவாமிகள், பகவானின் திருநாட்டை அலங்கரித்திருப்பது ஆன்மிக அன்பர்களால் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.  சுவாமிகள் பரிபூரணமாக 89 ஆண்டுகள் இப்பூவுலகில் பகவான் திருச்சேவையில் ஈடுபட்டு, ஸ்ரீ கிருஷ்ண பகவானின் பூரண அருளை நமக்கெல்லாம் பெற்றுத் தந்து சென்றுள்ளார்.

சங்கநல்லூரில் ஒரு சிறிய கிராமத்தில்  பிறந்த சுவாமிகள், இள வயது முதற்கொண்டே ஆன்மிகத்தில் ஈடுபாட்டுடன் திகழ்ந்தார். இறைவனைச் சேர எளிய வழி, பக்தி ஒன்றே சிறந்தது என்பதை உணர்ந்து, சுவாமிகள், ஸ்ரீ போதேந்திராளை தனது மானசீக குருவாகப் போற்றி, ஸ்ரீமத் பாகவதத்தை தனது பிரமாண கிரந்தமாக எடுத்துக் கொண்டார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தமக்குகந்த தெய்வமாக வழிபட்ட சுவாமிகள், பரனூரில் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு ஒரு கோயிலைக் கட்டி, அங்கேயே தங்கியிருந்து பகவானின் திருசேவையில் ஈடுபட்டார். பரனூர் கோயில் பூஜையின்போது பாடப்படும் பல பாடல்கள் இவர் எழுதியவை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் மனங்களில் பக்தியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்த, இமயம் முதல் குமரி வரை இந்தியா முழுவதும் இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்ரீமத் ராமாயணம், மகாபாரதம், பக்தவிஜயம், பகவத் கீதை, ஆழ்வார்கள் வைபவம், ஸ்ரீமத் பாகவதம், உபநிடதங்கள் போன்ற பல தலைப்புகளில், பல ஊர்களில் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்தி இருக்கிறார். ஞானச்சுடராக விளங்கிய ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள் அண்ணா, இப்பூவுலகை நீத்தது ஆன்மிக உலகுக்குப் பேரிழப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com