நவராத்திரி பூஜைக்காக திருவனந்தபுரம் செல்லும் சிறப்புமிக்க சுசீந்திரம் நங்கை அம்மன்!

நவராத்திரி பூஜைக்காக திருவனந்தபுரம் செல்லும் சிறப்புமிக்க சுசீந்திரம் நங்கை அம்மன்!

குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது பத்மநாபபுரத்தில் நவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். பின்னர் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்ததும் நவராத்திரி விழா கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. இந்த விழாவில், குமரி மாவட்டம் குமாரகோவில் முருகன் தேவாரக் கட்டு சரஸ்வதி அம்மன் மற்றும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகிய மூன்று சிலைகளும் பங்கேற்று வருகின்றன.

ஆண்டுதோறும் இந்த மூன்று சாமி சிலைகளும் திருவனந்தபுரம் சென்று வருகின்றன. நங்கை அம்மன் புறப்படும் போது அம்மனுக்கு போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்துவார்கள் மேலும் போலீசாரின் பேண்டு வாத்தியமும் இடம் பெறும். இத்தகைய சிறப்பு மிக்க   முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் தெப்பக்குளக்கரையில் உள்ளது. 

லட்சுமி, சரஸ்வதி, பார்வதி மூன்று பேரும் குழந்தை வடிவில் இருந்த தங்கள் கணவர்கள் மீண்டும் சுய வடிவம் பெற கார்த்தியாயினி நோன்பு இருந்தபோது காட்சி கொடுத்த தாய் தெய்வம் இவள். கௌதமரின் சாபம் நீங்க இந்திரன் 300 கன்னியரை சாட்சியாக வைத்து பூஜித்த போது தோன்றியவள் என்றும் கதைகள் கூறுகின்றன.

கோவில் வடக்கு பார்த்தது என்றாலும் தெற்கு வாசல் வழியே தான் பக்தர்கள் செல்ல முடியும் இதன் வழி சென்று தெற்கு வடக்காக அமைந்திருக்கும் கோவிலின் வடக்கு முன் மண்டபத்தை அடையலாம். 

கருவறையின் முன் அர்த்தமண்டபம் இருந்தாலும் முகம் மண்டபத்திலிருந்து பக்தர்கள் இறைவியை தரிசிக்க முடியும். செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்படுகிறது. அந்தப் பகுதி பெண்கள் திருமண தடை நீங்கவும் மற்றும் குழந்தை இல்லாத பெண்கள் அப்பாக்கியம் பெற அம்மனை வேண்டி பலன் பெறுகிறார்கள் பிறகு நேர்த்தியாக உருவங்களையும் தொட்டில்களையும் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.  அமைவிடம் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com