
ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சி அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிறப்பு வழிபாடு நடத்திக் கொண்டாடினர். இதற்காக பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
ஆடிப்பெருக்கு நிகழ்வு திருச்சியின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆடி மாதத்தில் 18வது நாளை ஆடிப்பெருக்கு தினமாக கொண்டாடி வருகின்றனர். மழைக்காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தில் விவசாயிகள் அறுவடை பணியை தொடங்கினால் விளைச்சல் அதிகரித்து பயன் கிடைக்கும் என்பது ஐதீகம். இவ்வாறு ஆடி மாதத்தில் பெருக்கெடுத்து ஒரு காவிரியின் நீரை வணங்கு விதமாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் ஆடி மாதம் பதினெட்டாம் நாள் விவசாயிகள் புதிய விதைகளை பயிரிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நாளில் நீர்களை வணங்குவதுமாக ஆற்றங்கரைகளிலும், குளத்துக்கரைகளிலும் அல்லது வீடுகளில் உள்ள தண்ணீர்களிலும் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்துவர். குறிப்பாக புதுமண தம்பதிகள் தங்கள் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆடி மாத பதினெட்டாம் தேதி அன்று காவிரி ஆற்றில் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மேலும் புதுமணத் தம்பதிகள் தாலிக் கயிறு அன்றைய தினம் மாற்றியும், திருமணமாகாத பெண்கள் கைகளில் மஞ்சள் கயிறை கட்டியும் சிறப்பு வழிபாடு நடத்துவர். இவ்வாறு வாழையிலை, அரிசி, தேங்காய், பழம், பூ, வெற்றிலை, குங்குமம், தீபம் ஆகியவற்றை படைத்து நீர்நிலைகளில் வழிபாடு நடத்துவர்.
இன்றைய தினம் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவது அடுத்து திருச்சி அம்மா மண்டபம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை பகுதிகளில் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்த பெருமளவில் கூடினர். இதனால் 300 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் தீயணைப்புத்துறையினர், மருத்துவக் குழுவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.