சுக்கிர தசை வேண்டுபவர் வணங்க வேண்டிய ஆலயம்!

சுக்கிர தசை வேண்டுபவர் வணங்க வேண்டிய ஆலயம்!

ரித்திரரையும் தனவானாக்கும் அருள்வல்லமை பெற்றவர் சுக்கிரன். அதனால்தான் நல்வாழ்வு பெற்ற ஒருவரை, ‘சுக்கிர தசை பெற்றவர் என்று கூறுவர். ஆயக்கலைகள் அறுபத்தி நான்குக்கும் இவரே அதிபதி. கலைத்துறையில் பிரகாசிக்கவும், அழகு மற்றும் வசீகரத்தை அருள்வதிலும் வல்லவர். இதுபோன்ற பெருமைகளைக் கொண்ட சுக்கிர கிரகத்துக்கு அதிபதியான சுக்கிராச்சாரியார் வழிபட்ட தலம்தான் சென்னையை அடுத்துள்ள மாங்காடு திருத்தலத்தில் அருளும் அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில்.

திருமால் வாமன அவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தி மன்னனிடம் மூன்றடி மண் தானம் கேட்டதும், மன்னனின் குரு சுக்கிராச்சாரியார், அதனைத் தடுத்ததும், அதற்கு மன்னன் ஒப்புக்கொள்ளாததாலும், அதனால் சுக்கிராச்சாரியார் தானே வண்டாக மாறி தானக் கெண்டியின் வாயை அடைத்துக் கொண்டதும், வாமனனான வந்த திருமால் ஒரு தர்ப்பைப் புல்லால் கெண்டியின் வாயைக் குத்த, வண்டுருவில் இருந்த சுக்கிராச்சாரியார் கண் பார்வை இழந்ததும் புராண சம்பவங்கள்.

திரிவிக்ரமனாக, மூன்றடி மண் தானம் பெற்ற திருமால் மூவுலகையும் அளந்தார். அதனையடுத்து,  சுக்கிராச்சாரியார் இழந்த பார்வையை திரும்பப், திருமாலை வேண்டிக் கொண்டார். பெருமாளும், ‘மாங்காடு தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் தவமிருக்கும் பார்வதி தேவிக்கு தரிசனம் தர, ஈசன் அங்கு வருவார். அப்போது ஈசனை தரிசித்து இழந்த உனது பார்வையை பெறலாம்’ என்று அருளினார்.

அதன்படியே மாங்காடு திருத்தலத்தில் சுக்கிராச்சாரியார் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து சிவபெருமானை தினமும் வழிபட்டு வந்தார். காலம் செல்ல, பார்வதி தேவியை மீண்டும் மணக்க வேண்டி, மாங்காடு தலத்தில் தோன்றிய ஈசன், முதலில் சுக்கிராச்சாரியாருக்கு அருளி, இழந்த அவரது பார்வையை மீண்டும் கொடுத்தருளினார்.

அதிர்ஷ்டகாரகன் சுக்கிரனுக்கே அதிபதியான சுக்கிராச்சாரியார் வழிபட்ட இந்தத் தலத்தில் அருளும் அருள்மிகு வெள்ளீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு சுக்கிரனின் பரிபூரண அருள் வாய்க்கும். சுக்கிரனுக்கு வெள்ளி என்றும் ஒரு பெயருண்டு. சுக்கிரன் வழிபட்டதாலேயே இத்தல இறைவனுக்கு வெள்ளீஸ்வரர் என்று பெயர். இத்தல இறைவனுக்கு பார்க்கவேஸ்வரர் என்றும் ஒரு பெயருண்டு. சுக்கிரன் இழந்த பார்வையை மீண்டும் அருளியதால் இவர் திருநாமம் பார்க்கவேஸ்வரர். பார்வை குறைபாடு உள்ளோர் இத்தல ஈசனை வழிபட்டு பலன் பெறுகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை இத்தலத்து ஈசனின் முன்வைத்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் அல்லது பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் சுக்கிரனுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன.

மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலின் உபகோயிலான ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா, பல வருடங்களைக் கடந்து இன்று (4.9.2023) வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ வெள்ளீஸ்வரரின் அருளைப் பெற்றனர். இதனையடுத்து ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலய மண்டல பூஜைகள் தொடர்ந்து நடைபெற உள்ளன. பக்தர்கள் இந்த மண்டல பூஜைகளில் கலந்துகொண்டு ஈசனின் பேரருளுக்குப் பாத்திரராவதோடு, சுக்கிர பகவானின் பெருங்கருணையையும் பெற்றுச் சிறக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com