மேன்மை உடைய ஒன்பதாவது அவதாரம்!
கணிதத்தில் ஒன்பது என்பது மிகவும் விசேஷமான எண். இந்த எண்ணுடன் எந்த எண்ணைக் கொண்டு பெருக்கினாலும், அப்பெருக்கலின் வரும் எண்ணின் கூட்டுத்தொகை ஒன்பதாகத்தான் வரும். மிகவும் அற்புதமானதும் மேன்மை உடையதுமான எண் இந்த ஒன்பது. மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் சிறப்பான கிருஷ்ணாவதாரமாகும்.
அவதாரச் சிறப்பு
மழையும் வெள்ளப்பெருக்கம் வருகிற தட்சிணாயன மழைக் காலத்தில், ஆவணி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில், அஷ்டமி திதியில், இருட்டான நேரத்தில், சிறைச்சாலையில் தாய் – தந்தையர் கால் விலங்கிடப் பட்டிருக்கும் வேளையில், ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்தது. கிருஷ்ண லீலைகள் அதிசயக்கத்தக்கவை. பாகவத்தில் பத்தாவது ஸ்கந்தம் முழுவதும், கிருஷ்ணனின் பால லீலைகள் மற்றும் யுவ பருவ லீலைகள் பற்றிய விபரங்கள்தான் அதிகம்.
தர்மத்திற்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ, அப்போது அதைக் காப்பாற்ற இறைவன் அவதாரம் எடுத்து கீழே இறங்கி வருகிறார் என இந்து மதப் புராணங்களும் மற்ற மதத்தினரின் நூல்களும் தெரிவிக்கின்றன.
விட்டம் கழிந்த எட்டு என்று ஸ்ரீஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகை கூறப்படுகிறது. அதாவது பெளர்ணமியன்று வரும் ஆவணி அவிட்டத்திலிருந்து வரும் எட்டாம் நாளான கிருஷ்ண பட்ச அஷ்டமி அன்றுதான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த ஜெயந்தி விழா நாள்.
எந்த பூஜையோ, ஸம்ஸ்காரங்களோ, அவற்றின் முடிவில், நமது ஆத்மார்த்த சமர்ப்பணத்தை இறைவனிடம் கூறுகின்ற ஸ்லோகம் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்தின் முடிவில் வரும்,
“காயேன வாசா மன ஸேந்த்ரியைவா
புத்யாத் மனாவா ப்ரக்ருதே ஸ் வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி!”
என்ற ஸ்லோகம் ஆகும். இது சகலமும் கிருஷ்ணார்ப்பணம் என்பதை உணர்த்துகிறது.
பூரண அவதாரங்கள்
ராம அவதாரம் மற்றும் கிருஷ்ணாவதாரம் என இரண்டு மட்டுமே பூரண அவதாரங்களாகக் கூறப்படுகின்றன. இவை இரண்டிலும் இறைவன் தாயின் கர்ப்பத்தில் அவதரித்தது முதல், தனது அவதாரத்தை முடித்துப் பின்னர் சோதிக்குத் திரும்பும்வரை உள்ள நிகழ்ச்சிகள் பூரணமாக அமைந்துள்ளன. ராம அவதாரத்தை வால்மீகி ராமாயணமும், கிருஷ்ணாவதாரத்தை ஸ்ரீமத் பாகவதமும் விவரிக்கின்றன. இதிகாசங்களில் சிறந்ததாக ஒன்றையும், புராணங்களில் சிறந்ததாக மற்றொன்றையும் கருதி, அநேகர் இதைப் பாராயணம் செய்வது வழக்கம்.