சீதா தேவி பூமிக்குள் ஐக்கியமான தலம்!
வாரணாசிக்கும் அலகாபாத்துக்கும் இடையில் சீதாமடி, சீதாமரி (Sita Marhi), சீதாமணி என பல பெயர்களில் ஒரு கிராமம் அழைக்கப்படுகிறது. இங்குதான் சீதா தேவி தனது பூலோக வாழ்வினை முடித்துக்கொண்டு பூமிக்குள் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இத்தலம் Sita Samahit Sthal, அதாவது சீதா ஐக்கியமான ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. கங்கை நதியிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் சீதாமடி அமைந்துள்ளது.

இலங்கையிலிருந்து சீதா தேவியை மீட்டுக் கொண்டு வந்த ஸ்ரீ இராமபிரான் அவரை முற்காலத்தில் வனமாக இருந்த இந்தப் பகுதியில் தங்க வைத்திருக்கிறார். ஸ்ரீராம - ராவண யுத்தம் முடிந்ததும், சீதா தேவி அடர்ந்த வனத்தில் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வசித்து வந்தாள். இங்கு சீதா தேவிக்கு லவன், குசன் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இருவரும் யாராலும் வெல்ல இயலாத சிறந்த போர் வீரர்களாகத் திகழ்ந்தார்கள். ஸ்ரீராமபிரான் அசுவமேத யாகத்துக்காக அனுப்பிய குதிரை இப்பகுதிக்கு வந்து சேர்ந்தது. அதை லவனும் குசனும் பிடித்துக் கட்டிப் போட்டு விட்டனர். அசுவமேத யாகக் குதிரை காணாமல் போனதை அறிந்த ராமபிரான், அதை தேடிக் கொண்டு இப்பகுதிக்கு வந்தார். வந்துள்ளது ராமபிரான் என்பதை அறியாத சிறுவர்கள், அவருடன் போரிட்டார்கள். அவர்களிடையே கடுமையான போர் மூண்டது. இதை அறிந்த சீதா தேவி அங்கு வந்து லவனையும் குசனையும் ராமபிரானுக்கு இவர்கள் தங்கள் பிள்ளைகள் என்று கூறி அவர்களை ராமபிரானிடம் ஒப்படைத்த பின்னர், இப்பகுதியில் பூமிக்குள் ஐக்கியமானதாகக் கூறப்படுகிறது.

சீதாமடி தலத்தின் மூலஸ்தானத்தில் பளிங்குக் கல்லிலால் ஆன சீதா தேவியின் சிலை உள்ளது. கருவறைக்குக் கீழ் உள்ள பகுதியில் சீதா தேவி பூமிக்குள் ஐக்கியமானதாகக் கூறப்படும் இடத்தில் பளிங்கினால் ஆன சீதா தேவியின் சிலை மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
இத்தலத்தை ஒட்டி அனுமனுக்கு பிரம்மாண்டமான கோலத்தில் சுதைச்சிற்பம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய குன்று போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மீது இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. 110 அடி உயரம் கொண்ட இந்த அனுமன் சிலைதான் உலகிலேயே உயரமான அனுமன் சிலை என்று கூறப்படுகிறது. இந்த குன்றின் கீழ்தளத்தில் அனுமனுக்கு ஒரு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றிலும் ராமாயணக் கதை அழகிய ஓவியங்களாகத் தீட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வாரணாசியிலிருந்து அலகாபாத் செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இது. தினமும் காலை முதல் இரவு வரை இத்தலம் திறந்திருக்கும். நூற்றுக்கணக்கான ஆன்மிக அன்பர்கள் தினமும் இத்தலத்துக்கு வந்து சீதா தேவியையும் அனுமனையும் தரிசித்துத் திரும்புகிறார்கள்.
அலகாபாத்திலிருந்து வாரணாசி செல்லும் சாலையில் ஹண்டியா (Handia) என்ற இடத்தைக் கடந்ததும் வலது பக்கமாகத் திரும்பி 12 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து சீதாமடியை அடையலாம். வாரணாசியிலிருந்து வரும்போது கோபிகஞ்ச் (Gopi Ganj) என்ற இடத்தில் இடது பக்கத்தில் திரும்பி 12 கிலோ மீட்டர் பயணித்தும் இத்தலத்தை அடையலாம். வாரணாசியிலிருந்து 85 கிலோ மீட்டர் தொலைவிலும் அலகாபாத்திலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.