வரலட்சுமி வருவாய் அம்மா!

வரலட்சுமி வருவாய் அம்மா!

செல்வத் திருமகளான வரமஹாலட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளும் நிகழ்வையே நாம் வரலட்சுமி விரதம், வரலட்சுமி பூஜை என்று கொண்டாடுகிறோம். வரலட்சுமி என்றாலே செல்வம் செழிப்பு ஆகிய வரங்களை அளிப்பவள். ஆவணி மாதம் பௌர்ணமி நாளுக்கு முந்தையதாக வரும் வெள்ளிக்கிழமையில் இந்த விரதம் அனுசரிக்கப்படுகிறது.

முக்கியமாக, புகுந்த வீட்டில் இந்த விரதம் அனுசரிக்கும் பழக்கம் இருந்தால், திருமணமாகி மருமகள் வீட்டுக்கு வரும்போது முதல் வரலட்சுமி நோன்பு அன்று அந்தப் பெண்ணிற்கு இந்த நோன்பு வீட்டுப் பெரியவர்களால் எடுத்து வைக்கப்படும்.

முதல் நாளே பூஜை செய்யப்போகும் இடத்தில் இழை கோலம் போட்டு சுற்றிலும் செம்மண் இட்டு அழகுப்படுத்த வேண்டும்.  வீட்டு வாசலிலும் இழை கோலம் போட வேண்டும். வீட்டு வாசலில் துளசி மாடத்திற்கருகே ஒரு சின்ன கோலம் போட்டு அம்மனை அழைப்பதற்கு தயாராக வைக்க வேண்டும்.

முதல் நாள் மாலையே அம்மனை அலங்கரிக்க ஆரம்பித்து விட வேண்டும். சிலர் வீட்டு சுவற்றில் வரலட்சுமி முகம் வரையும் பழக்கம் இருக்கும். அவர்கள் சுவற்றில் அந்த இடத்தில் வெள்ளையடித்து காவியில் வரலட்சுமி முகம் முதல் நாளே வரைவார்கள். அதற்கு நேரே பூஜா மண்டபம் வைக்கப்பட வேண்டும். மண்டபத்தின் இருபுறமும் வாழைக்கன்றுகளை அழகாகத் தொங்க விட வேண்டும். மண்டபத்தில் மேல்பகுதியில் மாவிலையை சரமாகக் கோர்த்து தொங்க விட வேண்டும்.

இப்போது அம்மனை ஆவாஹனம் செய்யப்போகும் கலசத்தை மண்டபத்திற்குள் வைக்க வேண்டும். கலசம் வைத்து பூஜை செய்யும் வழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இதை செய்ய வேண்டும். ஒரு மணைப்பலகையில் கோலமிட்டு அதன் மேல் ஒரு வாழை இலையில் அரிசியை பரப்பி அதன் மேல் வெள்ளியிலோ அல்லது பித்தளையிலோ ஆன சொம்பை கலசமாக வைக்க வேண்டும். இதற்குள் அட்சதை, வெற்றிலை பாக்கு, மஞ்சள், ஒரு வெள்ளிக் காசு, முடிந்தால் ஒரு தங்கக் காசு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழமும் போட்டு, புனிதப் பொருட்களாகக் கருதப்படும் பிச்சோலை, கருகமணியும் அதற்குள் போடுவார்கள்.

கலசம் தயாரானவுடன் கலசத்தின் மேல் குடுமியுடன் கூடிய ஒரு தேங்காயை முழுவதும் மஞ்சளைப் பூசி ஒரு குங்குமப்பொட்டு வைத்து அதில் அம்மன் முகத்தை சொருகுவார்கள். ஒரு வீட்டில் எத்தனை சுமங்கலிப் பெண்கள் இருக்கிறார்களோ அத்தனை அம்மன் முகங்கள் இருக்கும். தன் பெண்ணிற்கு புகுந்த வீட்டில் நோன்பு எடுத்து வைக்கிறார்கள் என்றால் பிறந்த வீட்டில் அம்மன் முகம் வெள்ளியில் வாங்கிக் கொடுத்து பூ, பழங்களோடு சீராக வைப்பது பழக்கம். இப்போது அம்மன் முகம் நகைகளுடனேயே நகைக்கடையில் கிடைக்கிறது. அந்த நாட்களில் அம்மன் முகத்திற்கு அவரவர் ரசனைக்கேற்ப காது தோடு, மூக்குத்தி, வண்ணங்களில் தீட்டி, கழுத்துக்கு நகைகளை பூட்டி அலங்காரம் செய்வார்கள். ஒரு சிவப்பு நிற ரவிக்கைத் துண்டை கொசுவமாகக் கொசுவி புடைவை போல அலங்கரிப்பதும் உண்டு.  பிறகு ஜடை அலங்காரம். அதுவுமே இப்போது ரெடிமேடாக கடைகளில் கிடைக்கிறது. அந்தக் காலத்தில் சவுரி முடியில் தாழம்பூ வைத்து மிக சிரத்தையாக ஜடை பின்னுவார்கள். அந்த ஜடை அலங்காரம் தெரிவதற்காக பின்னால் ஒரு கண்ணாடி வைப்பதும் உண்டு.

நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை எப்படி உற்சாகமாக வாசலில் நின்று வரவேற்போமோ, அதேபோல வாசலில் நின்று வரலட்சுமியை நம் வீட்டுக்குள் அழைக்க வேண்டும். வாசலில் துளசி மாடத்திற்கருகே கலசத்தில் வீற்றிருக்கும் வரமஹாலட்சுமி அம்மனை, ‘வரலட்சுமி வருவாயம்மா!’, ‘வரலட்சுமி ராவே மா இண்டிகி!’ ‘பாக்யாத லட்சுமி பாரம்மா!’ என்று தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் அம்மனை உற்சாகமாக வரவேற்று வீட்டிற்குள் அழைத்துக் கொள்வார்கள். சில வீடுகளில் முதல் நாள் வியாழக்கிழமை மாலையே அம்மனை வீட்டுக்குள் அழைப்பதும் உண்டு. வியாழக்கிழமை மாலையே துளசி மாடத்திற்கருகில் விளக்கேற்றி அம்மனுக்கு ஒரு வெண்பொங்கல் நைவேத்தியம் செய்வதும் வழக்கம்.

அம்மனை உள்ளே அழைத்ததும் கண்களுக்கு மையிட்டு கண்களைத் திறக்கும் வைபவம் நடைபெறும். அங்கங்கள் திறக்கப்பட்டு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு அமோகமாக ஷோடச உபசாரங்களுடன் பூஜை செய்யப்பட்டு வண்ண வண்ணப் பூக்கள் தூவப்பட்டு வரமஹாலட்சுமி தேவி அம்சமாக, வழிபடுவோர்களுக்கு எல்லா வரங்களையும் நல்க காத்திருப்பாள். விதவிதமாக கொழுக்கட்டை, பாயசம், வடை, பச்சரிசி இட்லி தேங்காய் பலவிதமான பழங்கள் என்று நைவேத்தியம் அளிக்கப்படும். தூப தீபம் காட்டப்பட்டவுடன் நோன்பு நோற்றதற்கு அடையாளமாக மஞ்சள் நிற சரடை பெண்கள் வலது கையில் கட்டிக் கொள்வார்கள். குடும்பத்தில் மூத்த பெண்மணி வீட்டில் எல்லா பெண்களுக்கும், சிறு குழந்தைகள் உட்பட எல்லோருக்கும் கட்டி விடுவார்கள். பூஜை முடிந்தவுடன் அக்கம் பக்கத்தவர்களை அழைத்து தாம்பூலம் கொடுப்பார்கள்.  சனிக்கிழமை இரவு அம்மன் குடிகொண்டிருக்கும் அந்த கலசத்தை அரிசிப் பாத்திரத்திற்குள் வைத்து மறுநாள்தான் எல்லாவற்றையும் எடுத்து வைப்பார்கள்.

இந்த வருடம் வரலட்சுமி விரதம் நாளை ஆகஸ்ட் 25 அன்று வருகிறது. தங்கள் வீட்டிற்கு வரமஹாலட்சுமி தேவியை அன்புடன் அழைத்து தங்கள் வீட்டில் நிரந்தர வாசம் செய்யும்படி வேண்டுவோம். இந்த வரலட்சுமி விரத வழிபாட்டால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், புகழ், செல்வம் எல்லா நலங்களும் உண்டாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com