நோய் நிவாரணம் தரும் வரமங்கை பெருமாள் தைலக்காப்பு எண்ணெய்!
திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில். இந்தத் திருத்தலத்துக்கு ஸ்ரீ வரமங்கை, வானமாமலை, நாங்குநேரி, தோதாத்ரி என்று பல பெயர்கள் உண்டு. இக்கோயிலின் நந்தவர்த்தன விமானம் என்று சிறப்பிக்கப்படும் வைகுண்ட விமானத்தின் கீழே ஆதிசேஷன் குடைபிடிக்க அமர்ந்த கோலத்தில் பெருமாள் வைகுண்ட காட்சியளிப்பதால், இத்தலம், ‘பூலோக வைகுண்டம்’ என்றே சிறப்பிக்கப்படுகிறது. மூலவர் தோதாத்ரிநாதன், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். உத்ஸவர் தெய்வநாயகன். தாயார் ஸ்ரீ வரமங்கை. நம்மாழ்வார் இத்தலப் பெருமாளைப் பாடியிருக்கிறார். இந்தக் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இந்தக் குடவரைக் கோயிலின் பிராகாரம் மிகவும் பெரியது.
பூலோகத்தில் பெருமாள் சுயம்வக்தமாக தோன்றிய தலங்கள் எட்டு. அவை: திருவரங்கம், திருப்பதி, புஷ்கரம், தோதாத்திரி, பத்ரிநாராயணம், நைமிசரண்யம், சாலிகிராமம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம். இவற்றுள் இந்த வானமாமலை க்ஷேத்ரம் பதினொரு சுயம்பு மூர்த்தங்களைக் கொண்டு சிறப்பு பெற்றதாக விளங்குகிறது. இக்கோயிலில் அருளும் வரமங்கை நாச்சியார் திருமேனி திருப்பதியில் இருந்ததாகவும், பின்னர் இங்கு கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த திருக்கோயிலை பற்றி பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம், நரசிம்ம புராணம் ஆகியவற்றில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தலத்தின் சிறப்பு இறைவனுக்கு வருடம் முழுவதும் சாத்தப்படுகின்ற தைலக் காப்பு வைபவம். பக்தர்களின் வேண்டுதல் பேரிலும் தைலக் காப்பு நடத்தப்படுகிறது. இதற்கான சுத்தமான நல்லெண்ணெய் கடைகளிலிருந்து வாங்காமல் செக்குகளிலிருந்து நேரடியாகத் தருவிக்கப்படுகிறது. அர்ச்சகர்கள் தங்கள் கரங்களினால் இந்த எண்ணெயை எடுத்து இறைவனுக்கு சாத்துகின்றனர்.
எண்ணெய் சாத்திய பின்னர், இறைவனுக்கு நீரினால் அபிஷேகம் செய்யும்போது, வருகின்ற எண்ணெய் கலந்த நீரிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு அதற்கென்று வடிவமைக்கப்பட்ட பெரிய எண்ணெய் குளங்களில் சேகரிக்கப்படுகின்றன. இவை சிறிய குப்பிகளில் நிரப்பப்பட்டு, கோயிலில் தைலப் பிரசாதமாக பக்தர்களுக்கு விற்கப்படுகிறது. இந்தத் தைலத்தை உடலில் தடவிக் கொண்டு சிறிய அளவு உட்கொள்வதானால் பலவிதமான சரும நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரம்மன், இந்திரன், உரோமசர், பிருகு முனிவர், மார்க்கண்டேயர், சிந்து நாட்டு அரசன், கருடன், ஆதிசேஷன், ஊர்வசி, திலோத்தமை ஆகியோர் இத்தல பெருமாளை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர்.