மரத்தினால் செய்யப்பட்ட இசைக்கருவிகளை சரஸ்வதியாக பாவிப்பது ஏன்?

மரத்தினால் செய்யப்பட்ட இசைக்கருவிகளை சரஸ்வதியாக பாவிப்பது ஏன்?

ருமுறை கலைவாணிக்கும் லட்சுமிக்கும் இடையே அபிப்பிராய பேதம் வந்தது. அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்கிற சர்ச்சை அவர்களுக்குள் எழுந்தது. அப்பொழுது பிரம்மா அங்கு வந்து சேர்ந்தார். தன் கணவரான பிரம்மாவிடம் சரஸ்வதி,  " எங்கள் இருவரில் யார் உயர்ந்தவர் கூறுங்கள்" என்று கேட்ட பொழுது, பிரம்மா, " சந்தேகம் என்ன லட்சுமி தான் உயர்ந்தவள்" என்று கூறிவிட்டார். 

அதனால் சரஸ்வதிக்கு கோபம் கட்டுக்கடங்காமல் இருந்தது. "என்ன இருந்தாலும் உங்களுக்கு உங்கள் தாயார் தானே உயர்ந்தவளாகி விட்டார்" என்று கூறி பிரம்மதண்டத்தை பிரம்மாவிடமிருந்து பிடுங்கி விட்டாள்.  "இந்த பிரம்ம தண்டம் தேவை என்றால் உங்கள் தாயாரையே கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றாள். 

பிரம்ம தண்டம் என்னும் சிருஷ்டி தண்டம் பறி போய்விட்டதால் சிருஷ்டி வேலை தடைப்பட்டது. பிரம்மா மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டுக்கொண்டார்.  அப்பொழுது மகாவிஷ்ணு அஸ்வமேத யாகம் செய்தால் வேறு சிருஷ்டி தண்டம் தருவதாக கூறி பிரம்மாவை அனுப்பி வைத்தார்.

மகாவிஷ்ணு பிரம்மாவுக்கு கூறிய விஷயத்தை சரஸ்வதி அறிந்து கொண்டாள். ஒரு அஸ்வமேத யாகம் செய்வது என்றால் பத்தினியானவள் அருகில் இருக்க வேண்டும் என்பது நியதி. தன்னுடைய பத்தினி இல்லாமலேயே பிரம்மா அஸ்வமேத யாகம் செய்ய முற்பட்டதை அறிந்த சரஸ்வதி வெகுண்டு எழுந்தாள்.  ஏற்பாடு செய்திருந்த யாக குண்டத்தை எரிக்க, அக்னியை  தன் சக்தியால் தூண்டிவிட்டாள். ஆனால் மகாவிஷ்ணுவானவர் அந்த அக்னியை,  தன் கைகளில் ஏந்திக் கொண்டார். மேலும் கோபம் கொண்ட சரஸ்வதி, மிகவும் ஆக்ரோஷமாக பூமிக்கு வந்தாள். பூமிக்கு வந்த சரஸ்வதி, நீரிலும், பின்னர் மரம், மூங்கில் முதலியவைகளிலும் மறைந்திருந்தாள். 

சரஸ்வதி இவ்வாறு மறைந்து வாழ்ந்ததால் பிரம்மா, சாவித்திரி , காயத்ரி ஆகிய இரு மனைவியர்களுடன் யாக தீட்சை செய்து கொண்டு யாகத்தை தொடங்கலானார். அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்த சரஸ்வதி,  நதி உருவம் கொண்டு யாகத்தை அழிக்க வேகமாக வந்தாள்.  பிரம்மா மீண்டும் திருமாலின் உதவியை நாட,  மகாவிஷ்ணுவானவர்,  நதியின் குறுக்கே படுத்துக்கொண்டார். அதனால் யாகத்திற்காக வளர்த்த அக்னி அணையாமல் யாகம் நல்லபடியாக முடிக்கப்பட்டது. மகாவிஷ்ணுவும் மீண்டும் ஒரு சிருஷ்டி தண்டத்தை பிரம்மாவுக்கு கொடுத்து சிருஷ்டி வேலைகளை தொடரும் படி  கூறினார். பிரம்மா  கேட்டுக் கொண்டபடி ஸ்ரீ மகாவிஷ்ணு செயல்பட்டதால்  சொன்ன வண்ணம் செய்த பெருமாள் அதாவது யதோத்தகாரி என்கிற திருநாமத்தைப் பெற்றார்.

ஆயக்கலைகள் அறுபத்து நான்கிற்கும் அதி தேவதையான சரஸ்வதி தேவி,  பூலோகத்திற்கு வந்து,  தன்னை மறைத்துக் கொள்வதற்காக மரங்களிலும் மூங்கிலிலும் மறைந்து வாழ்ந்தாள் என்று அறிந்தோம். அதனால்தான் தோல் கருவி, தந்திக் கருவி, வாத்தியக் கருவி, துளைக்கருவி போன்ற மரத்தால் செய்யப்பட்ட இசைக்கருவிகளை நவராத்திரி சமயத்தில் சரஸ்வதியாக பாவித்து அவைகளுக்கும் பூஜை செய்கிறோம்.

சரஸ்வதி தேவி பல கோலங்களில் காட்சியளிக்கிறாள். சரஸ்வதி தேவி கையில் இருக்கும் வீணைக்கு  கச்சபீ வீணை என்று பெயர். 

வீணையில்லாமல் யோகத்தில் உள்ள சரஸ்வதியை, கங்கைகொண்ட சோழபுரத்தில் காணலாம்.

வேதமே சிலம்பொலியாகவும்,  வீணை நாதமே வேத கீதமாகவும். வீணையுடன் இவள் நர்த்தனம் புரியும் கோலத்தில் பேலூரில் இருக்கும் ஒரு அபூர்வ படைப்பில் காணலாம். 

அன்னத்தை வாகனமாகக் கொண்ட சரஸ்வதியை வடநாடுகளில் காணலாம்.

தோகை விரித்தாடும் அழகு மயில் மேல் அமர்ந்து மகிழும்  மயூர வாகன சரஸ்வதியை ராஜபுதன சிற்பங்களில் காணலாம்.

'வாக்தேவியே 

உந்தன் மலரடி பணிந்தோம்.

காக்க வேண்டும் கருணாபாரதியே.' 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com