தேங்காய் சாதமும் தேவநாதரும்!

சிறுகதை
தேங்காய் சாதமும் தேவநாதரும்!

தோழி ராதாவிடமிருந்து வந்த வாட்ஸ்அப் செய்தியைப் படித்தாள் ஆனந்தி. அதில் தனது மகள் மஞ்சுளா லண்டனிலிருந்து அலுவலக டிரெயினிங் சம்பந்தமாக ஆடிப் பதினெட்டன்று பிற்பகல் மும்பை வருவதாகவும், ஆனந்தி வீட்டில் சாப்பிட்டுவிட்டு, மாலையில் மலபார் ஹில்ஸ்ஸிலிருக்கும் அவளுடைய அலுவலக கெஸ்ட் ஹவுஸ் சென்று விடுவதாகவும் இருந்தது. அத்துடன் மஞ்சுளாவின் ஃபேவரைட்டான தேங்காய் சாதம் செய்துவைத்து விட வேண்டுகோள் வேறு!

மும்பையில் அருகருகே வசித்த காலத்திலிருந்தே ஆனந்தி செய்யும் கலந்த சாதங்கள், அதிலும் தேங்காய் சாதமென்றால் அவளுக்குப் பிடிக்கும். “நீ செய்யற மாதிரி எனக்கு தேங்காய் சாதம் வரதில்லை” என ராதா கூறுவதுண்டு. இப்போது ராதா அமெரிக்காவில் பெரிய பெண் வீட்டில் இருக்கிறாள்.

ஆடிப் பதினெட்டன்று கலந்த சாதங்களைத் தவறாமல் ஆனந்தி செய்வது வழக்கம். அவளின் மாமனார் தேவநாதருக்கும் தேங்காய் சாதம் மிகவும் பிடிக்கும். மாமனார் மற்றும் மாமியார் இறையடி சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன.

இந்த வருட ஆடிப் பதினெட்டு அன்று மாமனாரின் ஸ்ரார்த்தம் இருப்பதால், கலந்த சாதங்களைச் செய்ய இயலாது என்பதை ராதாவிடம் தெரிவிக்க முடியவில்லை. “அம்மா! பராசக்தியே! நீதான் நல்ல ஐடியா கொடுக்கணும்” என்று ஆனந்தி வேண்டிக்கொண்டாள்.

ஸ்ரார்த்த சமையல் நிறைய செய்ய வேண்டும். சாஸ்திரிகள் மற்றும் இரு மச்சினர் குடும்பங்கள். ஆனந்தி, கணவரிடம் மஞ்சுளா வருகையைக் கூற, அதற்கு அவர், “ஸ்ரார்த்த காரணம், கலந்த சாதமெல்லாம் இருக்காது என விபரமாகச் சொல்லிவிடு. புரிந்துகொள்வாள்” ஈஸியாகக் கூறிவிட்டு சென்றார்.

ஆனந்திக்க மனசு கேட்கவில்லை.

லண்டனிலிருக்கும் மஞ்சுளா, ஐந்து வருடங்கள் கழித்து வருகிறாள். தேங்காய் சாதம், இன்றைய ஸ்ரார்த்தம் காரணம் பண்ணவில்லை என்று கூறிவிடலாமா? வேண்டாமா? மிகவும் யோசித்த ஆனந்தி, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.

ஸ்ரார்த்திற்கு முன் தினம் இரவு மச்சினர் குடும்பங்கள் வந்து சேர்ந்தனர். ஒரே அரட்டைதான். கைவலி; இடுப்பு வலி; கால் வலி என சாக்குச் சொல்லி ஒரு வேலையும் செய்ய மாட்டார்கள் ஓரகத்திகள். ஊர்க்கதை பேசுவதில் வல்லவர்களென்கிற விஷயம் தெரிந்ததுதான்.

ஸ்ரார்த்த தினமன்று, ஆனந்தி தான் எடுத்த முடிவின்படி, அதிகாலை அலாரம் வைத்து எழுந்து, பரபரவென ஸ்ரார்த்த சமையல் செய்து, பின்னர் தேங்காய்ச் சாதம், சேமியா பாயாசம் போன்றவைகளையும் தயாரித்து தனியாக வைத்துவிட்டாள்.

சாவகாசமாக எழுந்து வந்த ஓர்ப்படி, தனியாக வைத்திருந்த பாத்திரத்தை திறந்து பார்த்துவிட்டு, “இதென்ன புதுசா இருக்கு? நம்ம வீட்டு ஸ்ரார்த்தத்திற்கு தேங்காயே சேர்க்க மாட்டோம். மிளகு – சீரகம் போட்டுத்தானே செய்வோம். தேங்காய்ச் சாதம், சேமியா பாயாசம்...ம்... யாருக்கு?” என்று நீட்டி முழக்கினாள்.

ஆனந்தி, ஓர்ப்படியிடம் சுருக்கமாக விபரம் கூற, “உன் ராதா – மஞ்சுளாவிடம் ஸ்ரார்த்தம் என்று சொல்ல வேண்டியதுதானே!” என அவள் மறுபடியும் கேள்வியை எழுப்ப, ஆனந்தி பதிலே பேசாமல் மற்ற வேலைகளைக் கவனித்தாள்.

ஹாலுக்குச் சென்ற ஓர்ப்படி, கலந்த சாத விபரம் கூற, ஆனந்தியின் கணவரும், மச்சினர்களும் இப்படியெல்லாம் செய்வது தவறு என்றெல்லாம் காரசாரமாக லெக்சர் கொடுக்கையில், சாஸ்திரிகள் நான்கு பேர்கள் வர, லெக்சர் நின்று போனது. சாஸ்திரிகளில் ஒருவர் புதியவராக இருந்தார். எப்போதும் வருபவரில்லை.

ஸ்ரார்த்த காரியங்களெல்லாம் முறைப்படி நடந்து முடிந்து சாஸ்திரிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயம், Suitcase உடன் உள்ளே நுழைந்தாள் மஞ்சுளா.

“ஹாய் ஆனந்தி ஆன்ட்டி! அங்கிள் எப்படி இருக்கீங்க? இன்னிக்குத்தான் தாத்தாவின் ஸ்ரார்த்தமா? எனக்கு தாத்தாவை ரொம்பப் பிடிக்கும். அவர்கள் இறக்கையில் நான் லண்டனில் இருந்தேன். வர முடியவில்லை. Sorry!” மடமடனெனப் பேசியவாறே உள்ளே சென்றாள்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த சாஸ்திரிகளில் புதியவராக இருந்தவர் திடீரென, “மாமி! தேங்காய் சாதம் பண்ணியிருக்கேளா? இருந்தா கொஞ்சம் பரிமாறுங்கோ!” என்று சொன்னவுடன், அனைவருக்கும் தூக்கி வாரிப்போட, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்.

“இதோ!” என்றவாறே கிச்சனுக்குள் சென்ற ஆனந்தி தேங்காய்ச் சாதம் எடுத்து வந்து பரிமாற, அவர் ருசித்துச் சாப்பிட்டு எழுந்தார்.

சற்று நேரம் சென்று சாஸ்திரிகள் புறப்படும் சமயம், அந்த புதியவரிடம் “உங்கள் பெயர்?” என்று ஆனந்தி கேட்கையில், வந்த பதில் “தேவநாதர்!”.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com