தீபாவளி வந்தாச்சு!

தீபாவளி
தீபாவளி

 'டும்,' என தூரத்தில் சத்தம் கேட்க, பதறி எழுந்தாள் குழந்தை லலிதா. தீபாவளியன்று அனைவரும் எழுந்து பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிட்டனர், தான் மட்டும் தூங்கிக்கொண்டிருக்கிறோம் என்று கலக்கத்துடன் அவள் கண் விழிக்க, வீட்டில் சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது.  கண்கள் சற்றே இரவொளிக்கு சுதாரித்தவுடன், மெல்ல எழுந்து கீழே படுத்திருப்பவர் யாரையும் மிதிக்காமல் தத்தி, தத்தி நடந்து சமையலறையின் மின்விளக்கைப் போட்டாள்.

 அங்கே இருந்த கடிகாரத்தில் மணி இரண்டு. அடுப்பு சுத்தமாகத் துடைத்திருந்தது, பட்சணங்கள் செய்த எண்ணெய் சட்டி மட்டும் மேடையில் ஒரு ஓரமாக இருந்தது. தரையில் பல சம்படங்களில் பட்சணம் பொறித்து வைத்திருந்தாள் அம்மா. அதைச் சுற்றி சீதா தேவிக்கு லட்சுமணன் போட்ட கோட்டைப்போல எறும்பு வராமலிருக்க ஒரு வளையத்தையும் போட்டிருந்தாள்.

 "அதுக்குள்ள முழிச்சிட்டியா நீ?" என்று பின்னாலிருந்து பாட்டியின் குரல் கேட்டது லலிதாவிற்கு. "தூக்கமே வரலை பாட்டி. நான்தான் முதல்ல எழுந்தேன், எனக்கு தான் முதல்ல எண்ணெய் தேச்சு விடணும் நீங்க. போன வருஷம் பிரியா முதல்ல குளிச்சிட்டு ரொம்ப பீத்திண்டா," என்றாள் லலிதா.

 பாட்டி சிரித்தபடி ,"ஓ! தேச்சுவிட்டா போச்சு," என்று கூறி ஒரு அடுப்பில் காபிக்கு வெந்நீரும், மறு அடுப்பில் இரும்பு சட்டியில் இஞ்சி, மிளகுடன் நல்லெண்ணையைச் சூடு செய்தாள் . பின் வரிசையாக அம்மா, அத்தை, சித்தி, தாத்தா என ஒவ்வொருவராக எழுந்திருக்க தீபாவளி களைகட்டத் தொடங்கியது.

பாட்டி "கௌரி கல்யாணம்," என்று பாடியபடி கோலம்போட்ட பலகையில் அமர்ந்திருந்த லலிதா தலையில் எண்ணெய் தேய்த்தாள்.

 "பாட்டி ... நாம ஏன் தீபாவளி கொண்டாடறோம்?" "உனக்குத்தான் அந்தக் கதை தெரியுமே லலிதா!" என்றாள் பாட்டி. "இன்னொரு தடவ சொல்லுங்கோ பாட்டி," என்று கெஞ்சினாள் லலிதா. "சரி! சொல்றேன் கேளு, நரகாசுரன் என்ற ராட்சசன், தேவர்களையும், மக்களையும்  ரொம்ப கொடுமைப்படுத்தினான். இவா எல்லோரும் போய்  கிருஷ்ணர்கிட்ட தங்களைக் காப்பாத்தும்படி வேண்டிக்கிறா. உடனே, கிருஷ்ணரும், அவருடைய மனைவி,  பூமாதேவியின் அம்சமான சத்தியபாமாவும் சேர்ந்து நரகாசுரனைக் கொன்னுட்டா," அதனால நாம அந்த நல்ல நாளை தீபாவளியாக் கொண்டாடறோம்" என்றாள் பாட்டி.

 "யாராவது ஒருத்தர் செத்துப்போன தினத்தைப் போய் கொண்டாடுவாளா?" என்று வினவினாள் லலிதா. "ஓய்... உனக்குத் தெரியாதா ஏன்னு?" என்றாள் பாட்டி. "நீங்களே சொல்லுங்கோ பாட்டி!" என்று மறுபடியும் குழைந்தாள் லலிதா. "நான் சாகும் அன்றைக்கு யாரும் அழக்கூடாது, எல்லோரும் அந்த நாளை தீபங்கள் ஏற்றி, புத்தாடை உடுத்தி, இனிப்புகள் பரிமாறிக் கொண்டாடணும்னு நரகாசுரன் சாகும்போது கிருஷ்ணர்கிட்ட வரம் வாங்கிண்டான்," என்று எண்ணை தேய்த்தபடியே கதையைச் சொல்லி முடித்தாள் பாட்டி.

 வீட்டு கூடத்தில் ஜமக்காளம் மற்றும் பாய்களில் படுத்திருந்த மற்ற உறவுகளை "தீபாவளி வந்தாச்சு! தீபாவளி வந்தாச்சு!," என்று கத்தியபடியே, மின் விளக்குகளைப் போட்டு லலிதா குட்டி எழுப்பினாள்.

 பத்து வயது லலிதா வாழ்ந்துக்கொண்டிருந்தது பன்னிரண்டு பேர் கொண்ட பெரிய கூட்டுக் குடும்பம். பண்டிகை என்பதால் ஊரிலிருந்து அவளின் இரண்டு அத்தைகளும், அவர்களது குடும்பத்தினரும் வந்திருந்தனர், கேட்கவா வேண்டும் அவள் மகிழ்ச்சிக்கு எண்ணெய் வைத்துக்கொண்டு லலிதாவும் அவளது சகோதர சகோதரிகளும் பட்டாசு வைத்தனர். பிறகு, கொதிக்கும் நீரில், வேப்பிலை மற்றும் பூஜையறையில் இருந்த கங்கை சொம்பிலிருந்து வாளியில் சிறிது கங்கை நீர் ஊற்றி, அரப்பு, மஞ்சள் தேய்த்து குளிப்பாட்டி விட்டாள் அம்மா. 

 தீபாவளி புத்தாடை என்றால் குங்குமம் வைத்துப் போட்டுக் கொள்வதுதானே முறை? அம்மா அவ்வாறு சுத்தமாக மடித்து பூஜையறையில் வைத்திருந்த புத்தாடைகளை உடுத்தி லலிதாவும், மற்ற வாண்டுகளும் கையில் ஊதுபத்தியுடன், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பட்டாசுகளை எடுத்துக்கொண்டு, பட்டாசு வெடிக்க வாசலுக்குச் சென்றனர்.  

 அப்பாவும், சித்தப்பாவும் விடாமல் திரியினைக் கிள்ளித்தர சரங்களும், வெடிகளும் வெடித்துத் தள்ளினர் அந்தக் குட்டிகள். "அப்பா அங்க பாருங்க, அந்தக் கோபு மட்டும் கையிலே கொளுத்தி வெடி போடறான். நானும் போடனும்," என்று அடம் பிடித்தாள் லலிதா. "அவன் பெரிய பையன், சொன்னா கேட்க மாட்டான்,
நீ சமத்து? கையிலேயே வெடிச்சிட்டா கொப்பளம் வந்திடும், டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணும், தேவையா உனக்கு?" என்று கூறி  சமாளித்தார் அப்பா.

 ஒரு வழியாக காலை பட்டாசு படலம் முடிந்தவுடன், பட்சணப் படலம் தொடங்கியது... மிக்சர், பூந்தி, தேங்குழல், தட்டை, லட்டு, ஜாங்கிரி, மைசூர்பா என பிடி பிடித்தனர். "லேகியம் சாப்பிட்டாதான் சாயந்தரம் பட்சணம் தருவேன்," என்று கூறியபடி அனைவரின் வாயிலும் தீபாவளி மருந்தைத் திணித்தாள் பாட்டி.

 "நமஸ்காரம் பண்ணினா இருபது ரூபாய் தருவேன்," என்று தாத்தா கூறி தனது கருப்பு பர்ஸை எடுத்து வந்தார். எல்லோரும் வரிசையாக வந்து தாத்தா, பாட்டி கால்களில் விழுந்து ஆசி பெற்றனர். கடைக்குட்டி முகுந்தன் மட்டும் குப்புறவாறு வெகுநேரம் இருந்தான். "எவ்வளவு நேரம் நமஸ்காரம் பண்ணினாலும் இருபது ரூபாய்தாண்டா," என்று தாத்தா கூற அனைவரும் 'கொல்' என்று சிரித்தனர்.

 லலிதாவின் அம்மா வீட்டுச் சிறுவர்களை அழைத்து அக்கம் பக்கத்தினருக்கு இனிப்பும், காரமும் கொடுத்து வரும்படி கூறினாள். லலிதாவிற்கு அவர்கள் தெருவுக்குப் புதிதாக குடிவந்த செந்தில் மற்றும் டேவிட்டின் வீட்டிற்குச் சென்றுவர உத்தரவு. "சிடுமூஞ்சி செந்தில் மாமா வீட்டுக்குப் போக முடியாது! அவர் எப்போதும் சிகரெட் பிடித்தபடி இருக்கிறார்," என தர்க்கம் செய்தாள் லலிதா. “இதோ பாரு, பண்டிகை என்றால் எல்லாரோட வீட்டுக்கும் போய் பட்சணம் தரணும், அது அன்பின் வெளிப்பாடு, சந்தோஷத்தின் வெளிப்பாடு, அன்னிக்கு போய் பிடிச்சவா, பிடிக்காதவா எல்லாம் பார்க்கக்கூடாது. அடம் பிடிக்காம போய் குடுத்துட்டு வா," என்றாள் அம்மா. முணுமுணுத்தபடியே செந்தில் மாமா வீட்டுக்கு சென்றாள் லலிதா. ஆனால், அங்கு அவளுக்குப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. 

வழக்கமாக உம்முனு இருக்கும் செந்தில் மாமா கூட குளித்து, புத்தாடை உடுத்தி சிரித்த முகத்துடன் லலிதாவை வரவேற்றார். அவளிடம் வெகுநேரம் சிரித்துப் பேசினார். இனிப்புகள் மற்றும் கதைப் புத்தகங்கள் கூட அன்பளிப்பாக கொடுத்தார். அன்று முதல், சிடுமூஞ்சி செந்தில் மாமா, லலிதாவிற்கு மிகவும் பிடித்தமான செந்தில் மாமாவாக மாறினார். அதன் பிறகு பள்ளியில் கொடி நாள் நன்கொடை வசூலிப்பு, இயற்கை பேரிடர் சம்பந்தமான நன்கொடை வசூலிப்பு என்றால், லலிதாவிற்கு நிறைய நன்கொடை தருவது செந்தில் மாமாவாகதான் இருப்பார். டேவிட் மாமாவும் லலிதாவை அன்பாக வரவேற்றார். சாக்கலேட்டுகள் கொடுத்தார். அதன் பிறகு, ஒவ்வொரு கிறிஸ்துமஸ்க்கும்  லலிதாவின் குடும்பத்துக்கு பிளம் கேக் கொடுத்து, தனது அன்பை பரிமாறிக்கொண்டார்.

 மாலையில் வீட்டு மொட்டை மாடியில் குடும்பத்துடன் அனைவரும்  புஸ்வானம், தரை சக்கரம், ராக்கெட், மத்தாப்பூ என வெடிக்க, மீண்டும் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது.

 வீட்டுப்  பெண்கள் புதுப் புடவை அணிந்து பட்டாசுகளை  வெடிக்க ஆயத்தமானர். வாரம் முழுவதும் சமையலறையில் அயராமல் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மா, பாட்டி, சித்தி, அத்தைகள் குதூகலமாக பட்டாசு வெடிக்க வந்ததால் அந்த மழலைகள் கூட மனமுவந்து தங்கள் பட்டாசுகளை அவர்களுடன் பகிர்ந்தனர். ஏக குஷியில், தினமும் தீபாவளியாக இருந்துவிடக் கூடாதா? என்ற ஆசையுடன் அண்ணாந்து பார்த்து வான வேடிக்கைகளை ரசித்தாள் லலிதா.

 கதைகள்
கதைகள்

 ட்ரிங்...ட்ரிங்... என அலாரம் அடிக்க, நன்கு விழித்த நிலையில் படுத்திருந்த லலிதா, அலைபேசியை எடுத்து ஐந்து மணிக்கு அடிக்கும் அலாரத்தை அணைத்தாள். ஐந்து மணிக்கு மிகவும் நிசப்தமாக இருந்தது அவள் தெரு, மருந்திற்குக் கூட ஒரு வெடிச் சத்தத்தை அங்கு கேட்க முடியவில்லை. அருகே திரும்பிப் பார்த்தாள், இரவு வெகுநேரம் கண் விழித்து, தொலைக்காட்சி பார்த்ததால் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர் அவளது கணவரும், குழந்தைகளும். அவர்கள் ஏழு மணிக்குக் குறைந்து எழப்போவதில்லை என்று நினைத்து, ஒரு சலிப்புடன் தனது அலைபேசியை எடுத்து வாட்ஸ்ஆப் செயலியைப் படிக்க ஆரம்பித்தாள்.  ஐம்பதிற்கும் மேல் தீபாவளி வாழ்த்து மற்றும் பார்வர்ட்ஸ் வந்திருந்தது.

 'ராமநாதன் குடும்பம்' என்று தனது தாத்தா பெயரில் தொடங்கப்பட்ட தன்னுடைய பிறந்தவீட்டு குடும்பத்தினருக்கான பிரிவைக் கிளிக் செய்தாள் லலிதா. இருபது வருடம் முன்னே, தான் சேர்ந்து  தீபாவளி கொண்டாடிய சகோதர, சகோதரிகள், தனது அப்பாவுடன் பிறந்தோர்கள், அம்மா என அனைவரும் இருந்தனர் அந்தப் பிரிவில். ஆனால், முன்பிருந்த அந்த இணக்கம் அவர்களிடத்தில் இல்லை. அவரவர் குடும்பம், குழந்தைகள், அயல் நாட்டு வாசம் என ஏகப்பட்ட மாற்றங்கள்  லலிதாவின் குடும்பத்தில்.

 லலிதா அவளது பெற்றோர் வசிக்கும் ஊரில்தான் இருக்கிறாள். இப்போது அவளது பிறந்த வீட்டில் அப்பா, அம்மா, தாத்தா மட்டும்தான் இருக்கிறார்கள் . ஒவ்வொரு தீபாவளிக்கும் அம்மா வீட்டுக்குச் செல்வது அவளது வழக்கம். முடிந்தபோது மற்ற உறவினர்களும் அங்கு வருவார்கள். போன தீபாவளியன்று எடுத்த
குடும்பப் புகைப்படத்தை அப்பா அந்தப் புலனம் பிரிவில் பகிர்ந்திருந்தார். 

 அந்தப் புகைப்படத்தை உற்று நோக்கிய லலிதா கண்களில் பட்டது அவளது தாத்தாவின் முகமே. தனது நூறாவது அகவையை நெருங்கிக்கொண்டிருக்கும் தாத்தா, குதூகலத்துடன், கையில் மத்தாப்புடன், புதுச் சட்டை அணிந்து, பொக்கை வாய் தெரிய சிரித்துக்கொண்டிருந்தார். இன்றைக்கும் அவர் அதே சந்தோசத்துடன் தன்னை வரவேற்பார், பட்டாசு வெடிப்பார், புகைப்படத்துக்குப் போஸ் கொடுப்பார் , கருப்பு பர்ஸிலிருந்து ஆசீர்வாதப் பணத்தை எடுத்துத்தருவார்  என்று நினைத்தாள் லலிதா. 

ராமநாதன் தாத்தாதான் தனது வாழ்வில் எத்தனை தீபாவளிகளைக் கண்டுவிட்டார்! இருந்தும் அவர் முகத்தில் வாட்டம் இல்லை, கொண்டாட்டத்தில் குறைவில்லை. அவர் வாழ்வில் காணாத மாற்றங்களையா நாம் கண்டுவிட்டோம் என்று நினைத்தாள் லலிதா.  உடனே சட்டென்று அவள் உள்ளத்தில் ஒரு பூரிப்பு ஏற்பட்டது. காலம் மாறினாலும், நாம் நமது கொண்டாட்டங்களைக் குறைத்துக் கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்தாள். "தீபாவளி வந்தாச்சு! தீபாவளி வந்தாச்சு!," என்று கத்தியபடியே, மின் விளக்குகளைப் போட்டு பத்து வயது லலிதாவாக தனது குடும்பத்தை எழுப்பினாள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com