படைப்பு: வளர்கவி, கோவை.
ஆட்டோவிலிருந்து அந்த இளைஞனின் தலையைத் தாயும் காலைப் பிள்ளையும் பிடித்தபடி இறக்கி, அந்த அரசு மருத்துவமனைக்குள் கொண்டு போனார்கள். ஆனாலும் அவனுக்குத் தலை தொங்கிப் போயிருந்தது.
மெதுவா, மெதுவா என்று வாராண்டாவில் நின்றபடி சொன்ன நர்ஸ், அவர்களை பேஷண்டைப் பொறுமையாய் எடுத்துவரச் சொல்ல, உள்ளே சிகிச்சைக்காகக் காத்திருந்தார் பிரபல மருத்துவர் மகேந்திரன்.
‘என்ன ஆச்சு?’ கேட்டார் டாக்டர்.
அந்தப் பெண் பையனின் அப்பாவைப் பார்க்க, அவர் கோபமாக அவளைப் பார்த்துச் ‘சொல்லித் தொலை!’ என்றார்
அவள் கண்ணீர் பெருக்கெடுத்து அழ, டாக்டர் ஏதோ குடும்பப் பிரச்னை என்பதைப் புரிந்துகொண்டார்,
மெதுவாக அந்தப் பெண்ணை அழைத்து, ‘ஒரு நிமிஷம் நீங்க உள்ளே வாங்கம்மா’ என்று கருணையோடு கூப்பிட்டார்.
பேஷண்டைச் செக்கப்பண்ணும் (அந்த ஸ்கிரீன் போட்ட அறைக்குள் அந்தப் பெண் நுழைந்ததும்)
‘சொல்லுங்க பையனுக்கு என்ன பிரச்னை?’ என்றார் அதே கனிவில்
‘சார், பள்ளிக்கூடம் போற பையன். நல்லா படிக்கிற பையன் சார் என் மகன், எவனோ ஒருத்தனோட கூட்டுச் சேர்ந்துகொண்டு கஞ்சா அடிச்சிருக்கான்னு, அவங்க ஸ்கூல்ல இருந்து என்னைக் கூப்பிட்டுச் சொன்னப்போ, நான் நொந்து போயிட்டேன்!’ கண்ணீர் ததும்ப அழுதாள்.
‘சரி, அதுக்கு நீங்க என்ன செஞ்சீங்க?’
‘ஏண்டா இப்படிப் பண்றியே நியாயமா’ன்னு கேட்டேன்!’
‘அதுக்கு அவனென்ன சொன்னான்?’
அப்பன் குடிக்குது, சீட்டாடுது. அதைக் கேக்க வக்கில்லை? என்னைக் கேக்கறயான்னு கேட்டதோட என்னையே அடிக்கவும் வந்துட்டான்…! அதுனால,
‘அதுனால?
அவனை பக்கத்து வீட்டுக்காரிகூடச் சேர்ந்து பிடிச்சு இழுத்து, மரத்துல கட்டி வைச்சுட்டு, குருமிளகை எடுத்து அரைச்சு மூஞ்சில பூசிட்டேன்!
‘அடப்பாவமே!’
‘பூசினது என்னவோ மூஞ்சிலதான் ஆனா, அது அவன் கண்ணுல படும் யோசிக்கலை..!’
‘அய்யோ அப்புறம்?’
ஆனா, அடுத்த நாள்ல இருந்து, எனக்குக் கண்ணு தெரியலைம்மான்னு அழுது, கால்ல விழுந்து அரற்றினான். கண்ணைத் திறந்து விடுங்கம்மா இனி தப்புப் பண்ண மாட்டேன்னு கதறினான். பெத்த மனசு கேக்கலை டாக்டர், உடனே தூக்கிட்டு வந்துட்டேன்’ என்றாள் கண்ணீருடன்.
‘என்ன நடந்துன்னு விசாரிச்சீங்களா? கண்ணு தெரியலைன்னு சொன்னான் சரி, ஆனா, இப்ப, ஏன் மயங்கிக் கிடக்கிறான்.

‘அந்தக் கொடுமையை ஏன் கேட்கறீங்க டாக்டர்? இருந்தாலும் சொல்றேன் கேளுங்க, என்று சொல்லிவிட்டு பையனின் அம்மா சொல்லத் தொடங்கினாள்…
‘என் பையன் கண்ணு தெரியலைனு அழவும், பதறிப் போயிட்டேன் டாக்டர். மிளகுலயே குருட்டு மிளகுன்னு ஒன்னு இருக்காமே, எனக்குத் தெரியாது. நான், அதை அரைச்சுப் போட்டிருக்கேன்னு அப்புறம்தான் தெரிஞ்சது. அதுகூடப் பரவாயில்லை. ராத்திரி பூராவும் மரத்துல கட்டி வைக்கப்பட்டிருந்தவனை அவன், ஸ்கூல் பிரண்டு எவனோ இதைக் குடின்னு சொல்லி, கூல் டிங்க்ஸ் குடிக்க கொடுத்திருக்கான் அதுக்கப்பறம்தான் என் பிள்ளை, இப்படி மயங்கிட்டான்’னு சொன்னாள்
பதறிப்போன டாக்டர், , மருத்துவ பரிசோதனைக்கு உடனே, அங்ககேயே ஏற்பாடு செய்தார். பரிசோதனையில் அவன் குடல் முழுக்க வெந்து போயிருந்தது தெரிந்தது. படிப்பில் கெட்டிக்காரன் என்பதால், அவன் நண்பன், இவனைப் பழிவாங்க, ஆசிட் கலந்த கூல்டிங்க்ஸ் கொடுத்திருக்கான். கண்ணுக்குக் கண்ணா காக்க வேண்டிய தாய், நான் அவன், கண்ணைப் பறிச்சுட்டேன்! என்று கதறி அழ, ‘என் குடிதானே எல்லாத்துக்கும் காரணம்’ என்று அவள் கணவனும் அரற்றி அழுதான்.
டாக்டர் எப்படியாவது என் பிள்ளையைக் காப்பாற்றிடுங்க, இனி ஆயுசுக்கும் குடிக்கமாட்டேன் அவன் அழ, அய்யா, என் பிள்ளைக்குக் கண்ணைக் கொடுங்கன்னு அவன் அம்மா அழ, அவனைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார் டாக்டர்.