பிச்சு மணி

பிச்சு மணி

சிறுகதை

எழுத்து: லேZY

ஓவியம்: இளையராஜா

பிச்சைக்காரன் ஒருவன் அழுதுகொண்டிருந்தான். அன்று மாலை எங்கோ போய்வரலாம் என்று பொடிநடையாய் வந்தபொழுது, லேசான மழை பெய்யத்தொடங்கி உடனே இருட்டவும் ஆரம்பித்துவிட்டது. அப்பொழுதுதான் இவன் அழுதுகொண்டு இருந்ததைப் பார்க்க நேரிட்டது.

இது என்னடா வம்பு, இதைப் பார்த்தும் பார்க்காமல் போக முடியாதே. வளர்ந்த வளர்ப்பு அப்படி.

“யாராவது கஷ்டத்தில இருந்தா, ஒரு வார்த்த ஆறுதலா பேசுடா கண்ணா” என்று வீட்டில் உள்ள பெருசுகள் சொன்னது காதிலேயே இருந்தது.

“இந்தாப்பா, ஏன் அழற? சொல்லிட்டு அழு...” என்றேன்.

“என்னத்த சொல்ல சொல்ற?” என்றான்.

“உன் பெயர் என்ன?”

“பிச்சை.”

“அது நீ எடுக்கிறது... நான் கேட்டது உன் பெயரை?”

“பெயரே பிச்சைதான்.”

“அட, பரவாயில்லையே, ரொம்பப் பேருக்கு இப்படி அமையாதுப்பா. செய்கிற தொழிலும் பெயரும்”.

“என்ன, கிண்டலா?” என்றான் சற்றுக் கடுப்பாகி.

“அட, அத விடப்பா, ஏன் அழற? அத சொல்லு”.

“உன் பேரு என்ன?”

“மணி” என்றேன், சுருக்கமாக.

“மணி என்ன ஆச்சு?”

“என்ன, என்ன ஆச்சு, ஒண்ணும் புரியலயே”?

“டைம் என்ன ஆச்சுனு கேட்டேன்.”

“யோவ், என்ன, எப்படி இருக்கு உடம்பு.”

“அதான் நீ கையில வாட்ச்சு கட்டிருக்கியே, சொல்லுவியோனு பார்த்தேன்.”

“ஏத்தம்டா உனக்கு, ஏன் அழற அத்த சொல்லித் தொல” என்றேன்.

“இந்த டென்ஷன் இருக்கே சார் டென்ஷன்… அது எப்போ எவனைப் பாதிக்கும்னு சொல்லவே முடியாது. அன்னிக்கு எனக்கு திடீர்னு அது வரத்தொடங்கிடிச்சு. என்னத்த சொல்லுறது, ஓட்டு போட சொல்றாங்கனு அழுவதா. ஓட்டு போட்டாச்சேன்னு அழுவதா, மழை பெய்யுதேன்னு அழுவதா, அப்படி மழை வந்தால் வெள்ளமா ஓடுதேன்னு அழுவதா, ரோட்ட நோண்டறானுங்கனு அழுவதா, மரத்தலாம் வெட்டறானுங்கனு அழுவதா, பிச்சை எடுக்க வச்சிடிச்சே தெய்வம்னு அழுவதா, பிச்ச கூட போடாம போறானுங்கனு அழுவதா, இப்படி எதைச் சொல்லி அழுவதுன்னு தெரியாமல்தான் சாமி அழுவுறேன்.”

“யோவ் என்ன கிண்டலா?” என்றேன் நான் மேலும் கடுப்பாகி.

“உன்ன ஏன் சாமி நான் கிண்டல் அடிக்கப்போறேன்” என்றான்.

இவன் உண்மையிலேயே அழுகிறானா, அல்லது பிச்சைக்கு தோதா வேஷம் போடுறானா? என்ற சந்தேகமும் வந்தது.

“சரி, இதுல எவ்வளவு வருமானம் வருது?”

“ஏன் சாமி, உனக்கும் பிசினஸ் படுத்திடுச்சா, இல்ல வேலவெட்டி எதுவும் இல்லையா?”

“யோவ், இந்த ஏத்தம்தான் கூடாது”, எனக்கு கடுப்பு உச்சத்தை எட்டியது.

“கோச்சிக்காத சாமி, Just கேட்டேன்” என்றான்.

“கேட்ப, கேட்ப, உட்டா இன்னமும் கேட்ப.”

சற்று என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் அவனிடம் பேசத்தொடங்கினேன்.

“சரி, உன்னைப் பார்த்தா நல்லவனா தெரியுது, உன்னை ஒண்ணு கேட்கிறேன்” என்றேன்.

“எங்க பாத்தா தெரியுது” என்றான்.

எனக்கு BP எகிறியது.

“யோவ், கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லாம, ஏதேதோ பேசிக்கிட்டிருக்க… சொல்லியா, ஒரு நாளையில எவ்வளவு சம்பாதிப்ப?” நான் கத்திட்டேன், ரொம்பவே கத்திட்டேன், அவ்வளவு டென்ஷனாக்கிட்டான்.

‘சாமி வீடு இன்கம்டாக்ஸ் ஆபீஸ் பக்கத்தில போல’  என்று முனுகிக்கொண்டே, “ஒரு நாளைக்கு averageஆ ஒரு 4000 ரூபா வரும்.”

“யப்பா, மாசம் ஒரு லட்சத்து இருபது ஆயிரமா” என்று என்னை அறியாமல் வாயிலிருந்து வந்துவிட்டது.

“கண்ணு போடாதே சாமி” என்று மேலும் என்னைக் கடுப்பேத்தினான்.

“அவ்வளவு பணத்தை எங்கப்பா வைப்ப?” என்றேன்.

முறைத்தான்.

“இல்லப்பா, வருஷத்துக்கு 13 லட்சத்துக்கு மேல வருதே, அதான் கேட்டேன்.”

“இங்கீதம் தெரியாதவன், வந்துட்டான்” என்று அவன் முனுமுனுத்தது என் காதில் விழுந்தது. விழ வேண்டும் என்பதற்குத்தான் முனுமுனுத்தான் என்பது என் அபிப்பராயம்.

சற்று நேரம் மௌனமாக இருந்தான்.

“டீ சொல்லு சாமி” என்றான்.

நான், “டீ” என்றேன், அவன் முகத்தில் கோபம் தாண்டவம் ஆடிற்று. எனக்கு பேரானந்தம்.

“சாமி, குடிக்க, டீ வாங்குனு சொன்னேன்” என்றான், பற்களை நறநற என்று கடித்தவாறு.

“ஓ, அதுவா, அப்படி சரியா சொல்லு” என்று அருகில் உள்ள கடையில் இரண்டு டீ போடச்சொல்லி இருவரும் பருகினோம்.

“எந்த ஊர்பா உனக்கு”?

“மதுரை பக்கம்”.

“இடது பக்கமா, வலது பக்கமா?”

“ம்ம்ம்… எதிர் பக்கம். என்ன சாமி, ஊட்ல மாமிகிட்ட செமுத்தியா வாங்கினியா, இந்த கடுப்பெல்லாம் என் மீது காட்டாதே.”

“அவ்வளவு பணத்தையும் எங்கடா வைப்ப, சொல்லுடா” எனக்கு உண்மையிலேயே செம கோபம் வந்திருச்சு. விட்டா இரண்டு இழு இழுத்திடலாமுனுகூட தோணிடுச்சு.

ஐ.டி படிச்சவனுங்களே மாசம் முப்பது நாப்பது ஆயிரம்தான் சம்பாதிக்கிறான், பிச்சக்கார பய, லட்சக்கணக்கில சம்பாதிக்கறான். செம டென்ஷனாகிட்டேன்.

“மத்தவா வருமானத்தைப் பார்த்து வயிறு எரியக்கூடாதுடானு” வீட்டில சொன்னது எல்லாம் காதிலிருந்து கழன்டு விழுந்திருச்சு.

“சொல்டா, எங்கடா வைச்சியிருக்க, என்னடா முறைப்பு” என்று எறத்தாழ ஒரு போலீஸ்காரர் போலவே அதட்டியதில் சற்று பெருமையும் அடைந்தேன்.

“த பாரு, போன வாரம் இப்படித்தான் ஒருத்தன் ஏடாகூடமா பேசிக்கிட்டிருந்தான், கல்லால அவன் மண்டையைப் பொளந்துட்டேன். ஆமாம் பாத்துக்கோ.”

“அவன் யாராவது உன்னை மாதிரி பிச்சைக்காரப் பயலா இருப்பான். என்கிட்ட அதெல்லாம் வேகாது.”

“ஏன், மேல பேசித்தான் பாரேன் என்ன நடக்குதுன்னு?”

“டேய், வேண்டாம், நான் பத்தாம் கிளாஸ் படிக்கும்பொழுதே ஆறு மாசம் கராத்தே பயிற்சி எடுத்திருக்கேன். ஜாக்கிரதை.”

“நானும் ஒண்ணும் லேசுபட்டவனில்ல, ஆறாம் கிளாஸ் படிக்கும்பொழுதே ‘என்டர் தி டிராகன்’ படம் பார்த்தவன்.”

“எங்க பார்த்த?” எனக்கு கோவத்தில கை காலெல்லாம் துடிக்கத் தொடங்கிடிச்சு.

“தியேடர்லதான்” என்றான் வெகு தெனாவட்டாக.

“தெரியுதுடா, எந்த தியேடர்ல?” நான் என்ன பேசறேன்னு எனக்கே தெரியல.

“ஆனந்த் தியேடர்லதான், அதான் இப்ப இடிச்சிட்டாங்களே.”

அவ்வளவுதான், இதுக்கு மேல சும்மா கோபத்த கடுப்படுத்தியிருந்தா, அது எனக்கே ஆபத்தா போயிட்டிருக்கும். சடார்னு பாய்ந்து அவனைத் தாக்க முயற்சித்தேன். அவன் படு உஷாராக டபாய்த்து, பழைய ஜெய்சங்கர் பட வில்லனைப் போல கைவிரல்களைக் கூர்மையாக நீட்டி வைத்துக்கொண்டு சண்டைக்குத் தயாராய் நின்றான்.

ஒரு நிமிஷம் இருவரும் படு வேகமாய் தாக்கிக் கொண்டாலும் ஒரு அடி கூட ஒருவர் மீதும் படல. பயத்தில தள்ளியே நின்று கையை வேகமாக சுற்றிக் கொண்டிருந்ததில் யாருக்கும் எந்தச் சேதமுமில்லை.

கராத்தேன்றது தெனம் பயிற்சி எடுக்கணும்னு அப்பத்தான் என் மர மண்டையில ஏறியது.    

“யோவ், தள்ளி போய் உங்க சண்டைய வச்சுக்கீங்க… இது வியாபாரம் செய்ற இடம். யோவ் மாஸ்டர் இந்தப் பிச்சகார பயலுங்க சாப்பிட்ட டீக்கு காசு கொடுத்தாங்களா, அப்படியே சண்ட போடற வாக்கில கம்பிய நீட்டீடுவானுங்க.” இது டீ கடை சொந்தக்காரன்.

“யோவ் யாரப் பார்த்து பிச்சைகாரன்னு சொல்ற? பார்த்து மரியாதையா பேசு” என்று டீ கடைகாரனையும் வம்புக்கு இழுத்தபடி, இவனைப் பிடித்து கிழே தள்ளி சண்டை பலமாக போட்டேன்.

இருவரும் கட்டிப் புரண்டோம், கிடுகிடுனு ஒரு கூட்டம் கூடியதை ஓரக்கண்ணால் பார்க்க முடிந்தது.

அப்பொழுது சடேர் சடேர்னு இரண்டு பேர் மேலும் கம்பால் பலமான அடி விழுந்தது.

“எழுந்திருங்கடா, இதே வேலையா போச்சு, ரோட்டில எடுக்கிறது பிச்சை, இதுல காம்படிஷன் சண்டை வேறு, எழுந்திருங்கடா” என்று பலமாகக் கத்தியவாரு தன் கடமையை எங்களை அடித்தாவாரு செய்தார் ஒரு போலீஸ்காரர்.

கூட்டத்தில எல்லாம் பேஸ்புக்குக்குதான் வீடியோ எடுக்கிறானுங்கனு பார்த்தா, எவனோ ஒருத்தன் 108க்கு போன் போட்டிட்டிருக்கான் பாருங்க!

இரண்டு பேரையும் தரதரவென இழுத்துச்சென்று ஜீப்பில் ஏற்றினார்கள்.

“சார் என்ன சார் ஆச்சு?” என்றது நன்றாக பழக்கப்பட்டக் குரல்.

“டேய் சங்கரா, வாடா வா...” சங்கரன் என் மாணவன்.

ஆட, சொல்லவே மறந்திட்டேன், நான் ஒரு பள்ளிக்கூட வாத்தியாரு.

“போன வருஷமே நம்ம ஆனந்து சொன்னான் சார், நம்ம மணி வாத்தியாரு எங்கயாவது கேவலப்படுவாருனு. அதே மாதிரி ஆயிடுச்சு பார்த்தீங்களா. கரு நாக்கு சார் அவனுக்கு. அதான் சார், நீங்க டீசி கொடுத்து அனுப்பிச்சீங்களே, நம்ம S. ஆனந்து”.

“டேய், நல்ல நேரம் பார்த்தடா, என் வயித்தெரிச்சல கொட்டிக்க”.

“நீ வா சார், நான் கூட வரேன் ஸ்டேஷனுக்கு” என்றான் இவன் ஸ்டேஷன் வரைக்கும் வந்து நம்ம ஜட்டியோட நிக்கிறத பார்க்காம போகமாட்டானு நல்லாவே தெரிந்தது.

“டேய் தம்பி நீ யாரு, இந்த பிச்சகார பயலுங்ககிட்ட உனக்கு என்ன சவுகாசம், பார்த்தா படிச்சவனாட்டம் இருக்க...” இது ஜீப்பிலிருந்தபடியே கேள்வி கேட்ட
எஸ் ஐ.

“சார் இது எங்க மணி வாத்தியாரு சார்” என்று காட்டுக்கத்தலா கத்திட்டான். ஏதோ உண்மையிலயே பிச்சைகாரனுங்க சண்டைனு நினைச்சுக்கிட்டு கிளம்பிய ஒளிப்பதிவாளர்கள் எல்லாம் ஒருத்தன் விடாம கிடுகிடுனு திரும்பி ஓடி வந்து, மீண்டும் ஒளிப்பதிவு செய்ய ஆரம்பிச்சிட்டானுங்க!

“வாத்தியாரா இரண்டு பேரும்.”

“சார் சார், நான்தான் வாத்தியாரு, இவன் பேரும் பிச்சை தொழிலும் பிச்சை. He is a professional beggar, moreover இது இன்கம்டாக்ஸ் கேஸு."

“யோவ் சும்மா இருயா, உன்ன கேட்டனா, இங்கிலீஷ் வேற ஒரு கேடு உனக்கு. தம்பி நீ சொல்லு, இந்த ஆளு என்ன வாத்தியாரு.”

“இவரு எங்க பிஸிக்ஸ் மாஸ்டர் சார்.”

“தம்பி, உன் பிஸிக்ஸ் வாத்தியாருக்கு சொக்கா துணியெல்லாம் பிச்சிகிச்சு” என்றான் பிச்சை, சிரித்துக்கொண்டே.

“டேய், உன்ன விட்டேனா பாருடா” என்று மீண்டும் அவன் மீது பாய முயற்சித்தேன். சுமார் பத்து பேர் என்னைப் பிடிக்க வேண்டியதா போச்சு, அவ்வளவு பலம் எனக்குள்ள எப்படி வந்ததுனு எனக்கே தெரியல. இரண்டு பேரு கீழ உட்கார்ந்தெல்லாம் வீடியோ எடுக்க ஆரம்பிச்சாங்க. இன்னிக்கு ராத்திரி சமூக வலைதளம் பூரா நம்ம பொழப்பு நாறிடும் என்ற எண்ணம் அப்பொழுது எனக்கு வரவேயில்லை.

“யோவ் இரண்டு போடுயா அந்த ஆள, சரியான, ரவுடியா இருப்பான் போல” எஸ் ஐ, அலறினான்.

பளார்னு ஒரு சத்தம், வேடிக்கைய பாருங்க, சரியா மூன்று செகன்டுகள் கழித்துதான் கன்னத்தில வலிக்கவே ஆரம்பிச்சது.

“மணி சார், நான் பாட்டுக்கு சரிதான் போடானு போயிட்டே இருப்பேன், ஆமாம், அப்படி உட்காருங்க பளாட்பாரத்தில” சங்கர் அதட்டியதில் சற்று அமைதியானேன்.

“தம்பி, வாத்தியார்னு சொல்லுற, இப்படி நடந்துக்கிறான், ஏன் அட்வைஸ் கிட்வைஸ் பண்ண மாட்டீங்களா ஸ்கூல்ல”.

“சொல்றேன் சார் இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டு விடுங்க சார், நான் புத்திமதி சொல்லி வைக்கிறேன்” என்றான் சங்கர்.

பரவாயில்ல பையன் அம்சமா பேசுறான், சங்கர் ஏறக்குறைய ஒரு வக்கீல் போலவே பேசத் தொடங்கிட்டான்.

“நாளைக்குள்ள இந்த ஆளு வீட்டிலிருந்து யாரையாவது உன் பள்ளிக்கு வரச்சொல்லி, நடந்ததை ஒண்ணு விடாம சொல்லி, ஒழுங்கா இருக்கச்சொல்லு. செய்வியா?” என்றான் அந்த எஸ் ஐ, சங்கரிடம்.

சரியான அறிவு கெட்ட போலீஸ்காரன், என்ன நடந்தது என்றுகூட விசாரிக்காமலே பேசறான்.

“யோவ் மணி பாத்துக்கினியா, ஒரு நொடியில உன் வாழ்கையில எல்லாம் தலை கீழ நடக்குது” இது யாரு சொன்னது? கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்? கரெக்ட், இந்தப் பிச்சைதான் அவ்வளவு தெனாவட்டா பேசினான்.

“எஸ் ஐ சார், நான் கேரன்டி, அவங்க அம்மா, அப்பா இரண்டு பேரையும் வரவச்சிடுறேன். மணி சார், கமான், சாரி சொல்லிட்டு கிளம்புங்க.”

“டேய் சங்கரா, நான் ஏன்டா மன்னிப்பு கேட்கனும், Actualஆ என்ன நடந்தது தெரியுமா?” என்று சொல்லத்தொடங்கினேன்.

“சார் உங்களுக்கு அவ்வளவுதான் மரியாதை, ஒழுங்கா சாரி சொல்லிட்டு வரீங்களா, கம்பி எண்ண போறீங்களா? உங்க இஷ்டம், யோசிச்சு சொல்லுங்க” என்று கைகளைக் கட்டிக்கொண்டு திரும்பி நின்றுகொண்டான். சும்மா சொல்லக்கூடாது, சங்கர் உண்மையிலேயே பெரிய மனுஷன் போலவே நடந்துக்குறான்.

“சபாஷ், அப்படி கேளு தம்பி” என்று உரக்கச் சொன்னான் பிச்சை.

“டேய், பிச்சை, இப்பச் சொல்றேன் கேட்டுக்கடா, இனி இந்த ஜன்மத்தில யவனுக்கும் பிச்சை போட மாட்டேன்டா, இது சத்தியம்.”

“டேய் மணி, போடலேன்னா அந்தப் பாவத்திற்கு அடுத்த ஜன்மத்தில நீயும் என்னைய போல பிச்சதான் எடுப்ப, போ…”

ஒரு பிச்சைக்காரன், இரண்டு போலீஸ்காரர்கள், சில சமூக ஊடகவியாளர்கள் உட்பட பல பேரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தேன்.

சங்கர் முகத்துல எதோ ஒரு கள்ளச்சிரிப்பு....

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com