
மனிதர்களின் பங்களிப்பின்றி AI தொழில்நுட்பத்தின் உதவியால் உருவாக்கப்படும் கலைப் படைப்புகளுக்கு காப்புரிமை வழங்க முடியாது என அமெரிக்க நீதிமன்றம் கூறியுள்ளது.
பொதுவாக மனிதர்களின் புதுமையான படைப்புகளுக்கு மட்டுமே காப்புரிமை பாதுகாப்பு வழங்கப்படும். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட நபர் கண்டுபிடித்த அல்லது உருவாக்கிய விஷயத்திற்கு பிறர் உரிமை கோராமல் இருப்பதற்காகவே இந்த காப்புரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் சமீப காலமாக AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், எவ்வித மனிதப் பங்களிப்பும் இல்லாமல் கண நேரத்தில் கலைப் படைப்புகள் உருவாக்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டீபன் தாலர் என்பவர், டாபுஸ் என பெயரிடப்பட்ட AI அமைப்பின் சார்பாக சமர்ப்பித்த விண்ணப்பத்தை, நிராகரிக்கும் விதமாக அமெரிக்க காப்புரிமை அலுவலகம் எடுத்த முடிவை வாஷிங்டன் நீதிமன்றம் உறுதி செய்தது. இவர்களின் இந்தத் தீர்ப்பை அமெரிக்க காப்புரிமை அலுவலகமும் வரவேற்றுள்ளது.
இதற்கு முன்னதாக மிட்ஜேர்னி என்ற AI கருவியைக் கொண்டு உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கு காப்புரிமை வழங்கக் கோரி அமெரிக்காவில் ஒருவர் விண்ணப்பித்திருந்தார். அதை காப்புரிமை ஆணையம் நிராகரித்தது. அந்தப் படைப்பை உருவாக்க தன்னுடைய பங்கும் இருந்ததாக அவர் வாதம் செய்தார். இருந்தும் அவருடைய விண்ணப்பம் அதிரடியாக நிராகரிக்கப்பட்டது.
தற்போது எல்லா துறைகளிலுமே AI பயன்படுத்தப்பட்டு வருகிறது. இசை, இலக்கியம், படம் என பல கலை வடிவங்களை உருவாக்க இந்தத் தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முழுவதுமாக மனிதர்கள் மூலம் உருவாக்கப்படும் படைப்புகளுக்கு மட்டுமே காப்புரிமை அளிக்கப்படும் என்ற அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்தத் தீர்ப்பை, தங்களின் முழு பங்களிப்புடன் ஒரு புதிய விஷயத்தை உருவாக்குபவர்கள் வரவேற்றுள்ளனர்.