
சமீப காலமாகவே விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகள் அதிகரித்துவிட்டது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு விண்வெளிக்கு செயற்கைக்கோளை அனுப்பி பலவிதமான ஆய்வுகள் செய்து வருகின்றனர்.
விண்வெளியின் பல பகுதிகளையும் உலக நாடுகள் ஆய்வு செய்து வரக்கூடிய நிலையில், சில நாடுகள் விண்வெளிக்கு தங்களின் செயற்கைக்கோளை அனுப்பி மீண்டும் பூமிக்கு வெற்றிகரமாகக் கொண்டு வருவதும், சில திட்டங்கள் தோல்வியில் முடிவதும் என மாறி மாறி நடந்தாலும், எத்தனை தோல்விகள் வந்தாலும் தொடர்ச்சியாக தங்கள் நாட்டின் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி, அவர்களின் திறமையை வெளி உலகத்திற்கு காட்டவேண்டும் என்ற முனைப்பிலேயே செயல்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் வெற்றியடைந்ததை, இந்தியர்களாகிய நாம் அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தோம். இவ்வாறு விண்வெளிக்கு அனுப்பும் எல்லா செயற்கைக்கோள்களுமே அறிவியல் ஆய்வு, தகவல் தொடர்பு, வானிலை கண்காணிப்பு போன்ற பல நோக்கங்களுக்காக அனுப்பப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் அறிவியல் துறைகளை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல, செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.
எனவே இதுவரை பல உலக நாடுகள் விண்ணிற்கு தங்களது செயற்கைக்கோள்களை அனுப்பி இருந்தாலும் இதுவரை விண்வெளியில் அதிகப்படியான செயற்கைக்கோள்களை அனுப்பிய நாடுகளின் பட்டியலைப் பார்க்கலாம்.
அமெரிக்கா விண்வெளியில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இதுவரை 3415 செயற்கைக்கோள்களை அனுப்பி முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவதாக சீனா பூமியை கண்காணிப்பதற்கான பல சேட்டிலைட்டுகளை விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. இவர்கள் இதுவரை 535 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளனர்.
விண்வெளி ஆராய்ச்சியில் சில ஆழமான நுண்ணறிவுகளை எளிதாக்குவதற்காக, பல திட்டங்களில் செயற்கைக்கோள்களை சில நாடுகள் அனுப்பி வருகின்றன. இதை மல்டிநேஷனல் என அழைப்பார்கள். இவர்கள் இதுவரை 180 செயற்கைக்கோளை அனுப்பியுள்ளனர்.
மேலும் ரஷ்யா 170 செயற்கைக்கோள்களையும், ஜப்பான் 88 செயற்கைக்கோள்களையும் அனுப்பியுள்ளது.
இதில் இந்தியா மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த செலவில் 59 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது.
அடுத்ததாக கனடா, விண்வெளி ஆராய்ச்சிக்காக 56 செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது.
இதுபோன்று உலக நாடுகள் அனுப்பிய எல்லா செயற்கைக்கோள்களும் விண்வெளி ஆராய்ச்சியில் ஏதோ ஒரு வகையில் மனித குலத்திற்கு உதவியாக இருக்கும் அறிவியல் சோதனைக்காக அனுப்பப்பட்டது தான்.