
இன்று இஸ்ரோவின் ஆதித்யா L1 விண்கலம் சூரியனை நோக்கி தன் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கிய நிலையில், பலரும் அறியாத இஸ்ரோவின் வெள்ளி கிரகத்தை ஆராயும் 'சுக்ரயான்' திட்டம் பற்றி அறிந்துகொள்ளலாம்.
இதுவரை வீனஸ் எனப்படும் வெள்ளி கிரகத்தில் ரஷ்யா மட்டுமே தன்னுடைய விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது. ஆனால் அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. வீனஸ் கிரகத்தின் அதிகப்படியான வெப்பம் காரணமாக அந்த விண்கலம் செயலிழந்தது. சூரியன் என்றும் மேற்கில் உதிக்காது என்று சொல்வார்கள். ஆனால் நம்முடைய சூரிய மண்டலத்தில் வீனஸ், யுரேனஸ் ஆகிய இரண்டு கிரகத்திலும் சூரியன் மேற்கில் தான் உதிக்கும். சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு வீனஸ் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பும் திட்டத்திற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது.
2024 இறுதியில் வீனஸ் கிரகத்தை ஆய்வு செய்யும் சுக்கிரயான் என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கிடையே எதற்காக இந்தியா வெள்ளி கிரகத்திற்கு போக வேண்டும் என நினைக்கிறது? என்ற கேள்வி பலது மனதில் எழுந்துள்ளது. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் இரண்டாவது கிரகமாக வீனஸ் இருக்கிறது. இதன் தூரம் சூரியனிலிருந்து 10.82 மில்லியன் கிலோமீட்டர்கள். இதன் மொத்த எடை 4,86,732 பில்லியன் கிலோ. வீனஸ் அதன் அச்சில் 2.64 டிகிரி சாய்ந்துள்ளதால் தன்னுடைய ஒரு சுழற்சியை முடிக்க 243 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இதுவே பூமி தன்னுடைய ஒரு சுழற்சியை முடிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் 24 மணி நேரம்தான்.
பல வானியலாளர்கள் இந்த கிரகத்தை நரகத்துடன் ஒப்பிடுகிறார்கள். ஏனென்றால் அங்கு அந்த அளவுக்கு வெப்பநிலை இருக்கும். என்னதான் வீனஸ் கிரகம் புதனுக்கு அடுத்தபடியாக இருந்தாலும், புதன் கிரகத்தை விட அதிகப்படியான வெப்பநிலை இங்கே இருக்கிறது. அதன் சராசரி வெப்பநிலை 471 டிகிரி செல்சியஸ் ஆகும். இது உலகில் உள்ள அனைத்துமே கண்ணிமைக்கும் நேரத்தில் கரைக்கக் கூடிய வெப்பமாகும். அதேசமயம் இந்த கிரகத்தின் வளிமண்டலமும் மிகவும் விஷத்தன்மை வாய்ந்த வாயுக்களால் நிரம்பியுள்ளது. 1978ல் அமெரிக்க அனுப்பிய விண்கலங்களும் இதன் மேற்பரப்பில் தரையிறங்கும் சமயத்திலேயே உருகி மறைந்தது.
இவற்றிற்கு மத்தியில், வெள்ளி கிரகத்தின் அடர்த்தியான வளிமாண்டத்தில் ஒளிந்திருக்கும் ரகசியங்களை வெளிக்கொண்டு வரவும், அதன் புவியியல் தன்மை மற்றும் வளிமண்டல நிலைகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு இஸ்ரோ சுக்கிரயான் என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இந்தப் பணியால் வீனஸ் பற்றிய பல மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
இதுவரை மற்ற நாடுகள் வீனஸ் கிரகத்தில் அடைந்த தோல்விகளை அடிப்படையாகக் கொண்டு, சுக்கிரயான் திட்டத்தில், வீனஸ் கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் அதன் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கான அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கருவிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.