உலகப் பணக்காரர்களில் ஒருவரான தொழில்நுட்ப ஜாம்பவான் எலான் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு 10 லட்சம் மனிதர்களை அனுப்புவதற்காக திட்டமிட்டு வருகிறார்.
இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு, விண்வெளி துறையில் மக்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதும், அதன் உள்ளிருந்து வெளிவந்த பிரகியான் ரோவர் நிலவின் பல ரகசியங்களை ஆராய்ந்து வருகிறது. இத்திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு விண்வெளி சார்ந்த பல நாடுகளின் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதன் வரிசையில் செவ்வாய் கிரகத்திற்கு பத்து லட்சம் மனிதர்களை அனுப்பும் எலான் மஸ்கின் திட்டமும் அடங்கும்.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்திற்கு 10 லட்சம் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்த திட்டத்தை 2020லேயே எலான் மஸ்க் வெளிப்படுத்தினார். வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் மக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதை இலக்காக அவர் நிர்ணயம் செய்துள்ளார். ஆனால் சவால் நிறைந்த இந்தப் பணியை அவர் எப்படி சாதிப்பார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்பேஸ் X நிறுவனம் நாசாவிடம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குவதற்கு ஒரு இடத்தை வழங்குமாறு கேட்டுள்ளது. இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரு ஸ்டார் ஷிப்பையும் உருவாக்கி வருகிறது. இந்த ஸ்டார் ஷிப் மனிதர்களையும் அவர்களுக்குத் தேவையான பொருட்களையும் செவ்வாய் கிரகத்திற்கு எடுத்துச் செல்லும்படி வடிவமைக்கப்பட்ட அதிநவீன வாகனமாகும்.
செவ்வாய் கிரகம் தொடர்பான பணிகளைப் பற்றி பேசும்போது, தற்போது அங்கு மூன்று ரோவர்கள் செயல்பாட்டில் உள்ளது. அவை செவ்வாய் கிரகத்தின் மர்மங்களுக்கு விடை தேடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது நாசாவின் பெர்சவரன்ஸ், க்யூரியாசிட்டி மற்றும் சீனாவின் ஜுராங் ரோவர்கள் ஆகும். இவற்றைத் தொடர்ந்து எலான் மஸ்கின் தற்போதைய திட்டம் மிகப்பெரிய திட்டமாகப் பார்க்கப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான ஒரு நகத்தை உருவாக்குவதற்கு 1 மில்லியன் டன் சரக்குகள் தேவைப்பட்டால், அதற்கான செலவு சுமார் 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இருக்கும் என எலான் மஸ்க் மதிப்பிட்டுள்ளார்.