
சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' என்ற திட்டத்தை செயல்படுத்துவதில் இஸ்ரோ மும்முரம் காட்டி வருகிறது.
ககன்யான் திட்டத்தின் கீழ் மொத்தம் மூன்று விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளனர். இவர்கள் பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் மூன்று நாட்கள் வரை விண்வெளியில் ஆய்வு செய்வார்கள். பின்னர் மீண்டும் பூமிக்குக் கொண்டு வரப்படுவார்கள் என்பதே இந்தத் திட்டமாகும். கோவிட் நோய்த்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திட்டம், தற்போது மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் 'வியோமித்ரா' என்ற பெண் ரோபோவை இணைப்பதற்கு இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதற்கான முதல் சோதனை ஓட்டம் அக்டோபர் மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடக்கும் ககன்யான் திட்டம் சார்ந்த பயணங்களில் இந்த பெண் ரோபோ விண்வெளிக்குப் பயணித்து, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளில் இந்தியாவின் முயற்சி மற்றும் முன்னேற்றங்களை உலகிற்கு வெளிப்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
விண்வெளிக்கு மனிதர்களை பாதுகாப்பாக அனுப்பி மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வரும் லட்சியத்தை அடிப்படையாகக் கொண்ட இத்திட்டம், HLVM-3 என்று புதிய வகை ராக்கெட் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் குறிக்கோள் என்னவென்றால், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் திறனை உலகிற்கு நிரூபிப்பதாகும்.
இதுவரை விண்வெளிக்கு மனிதர்களின் பயணம் என்றாலே நமக்கு நாசா தான் ஞாபகத்திற்கு வரும். அவர்கள் சர்வ சாதாரணமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் அளவுக்கு உயர்ந்துள்ளார்கள். நம் தற்போது தான் சிறுகச் சிறுக விண்வெளி சார்ந்த விஷயங்களில் வெற்றி கண்டு வருகிறோம். இருப்பினும் மற்ற விண்வெளி நிறுவனங்களோடு ஒப்பிடுகையில், இஸ்ரோ அனைத்தையும் குறைந்த செலவிலேயே செய்து காட்டுவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இதன் வரிசையில் ககன்யான் திட்டம் வெற்றிகரமாக நடந்தால், உலக அரங்கில் இந்தியாவுக்கு மற்றொரு அங்கீகாரம் கிடைக்கும்.