Is AI Technology Boon? Or Bane?
Is AI Technology Boon? Or Bane?

சர்வமும் AI மயம். வரமா? சாபமா?

ற்போதைய டிஜிட்டல் உலகில் அனைவரது கவனத்தையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான AI. எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் தான் உலகையே ஆட்கொள்ளப் போகிறது என பல தொழில்நுட்ப வல்லுனர்களும் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர். 

மனிதர்களுக்கு இருக்கும் சுயமாக சிந்தித்து செயல்படும் திறனை இயந்திரங்களுக்குக் கொண்டுவரும் முயற்சியாக 20-ம் நூற்றாண்டின் பிற்பாதியில் AI தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த முன்னெடுப்பு படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்து, இன்று மனிதர்களுக்கே சவால்விடும் அளவுக்கு அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. அக்காலத்தில் கணினி துறையில் கோலோச்சிய சார்லஸ் பாபேஜ் போன்ற முன்னணி அறிஞர்கள்கூட, இந்தத் தொழில்நுட்பம் பிற்காலத்தில் இப்படிப்பட்ட மாற்றத்தைக் கொண்டுவரும் என எண்ணியிருக்க மாட்டார்கள். 

இந்தத் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கூட முழுமையாக எட்டப்படாத நிலையில், மனிதனால் உருவாக்கப்பட்ட இத்தொழில்நுட்பத்தின் உருமாற்றம் அதிவேகமாக இருக்கிறது. நீங்கள் சுஜாதா நாவல்களைப் படிப்பவராக இருந்தால், அவர் எழுதிய 'என் இனிய இயந்திரா'-வில் இருக்கும் ஜீனோ ரோபோவுக்கு தெரிந்த விஷயங்கள் கூட மனிதர்களாகிய நமக்கு தெரியாது எனக் கூறியிருப்பார். புத்தகத்தின் ஒரு பகுதியில், முகத்தைப் பார்த்து மனதில் நினைப்பதை ஒரு யூகத்தின் அடிப்படையில் கூறியதாக ஜீனோ ரோபோ சொல்லும். தமிழில் முதன்முறையாக ஏஐ குறித்த அறிமுகம் அங்கிருந்துதான் தொடங்கியது எனலாம். 

உலகைப் பொறுத்தவரை சர்வமும் AI தொழில்நுட்ப மயமாக மாறி ஒரு சில ஆண்டுகளே ஆகிறது. இது சார்ந்த பேச்சுக்கள் 21ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே பேசப்பட்டு வருகிறது. சுகாதாரம், தொழில்நுட்பம், இசை, புத்தகம், எழுத்து என பல பணிகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் உதவி வருகிறது. ஏஐ சார்ந்த ஆராய்ச்சிகள் முதற்கட்டமாக 1956 இல் தொடங்கியது. மனிதர்களுக்குள்ள நுண்ணறிவுத் திறனை இயந்திரங்களுக்குக் கொடுக்கும் முயற்சியில் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இந்த ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. இதில் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகள் கொண்டுவரப்பட்டு இன்று உருமாறி முழுமைபெற்று நிற்கிறது. 

இந்தத் தொழில்நுட்பம் பேசியல் ரெகக்னிஷனில் தொடங்கி, ஒரு பயனரைக் குறிவைத்து தேடுபொறியில் வரும் விளம்பரங்களை பரிந்துரை செய்தல், விர்ச்சுவல் அசிஸ்டன்ட், தானியங்கி வாகனங்கள் என அனைத்துமே இதனால் சாத்தியமாகிவிட்டது. அதன் பிறகு வெளிவந்த ChatGPT பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கடந்த ஓராண்டாகவே தினசரி இதைச் சார்ந்த தகவல்கள் வெளிவராத நாளே இல்லை. 

அதேசமயம் இந்தத் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு வரமா? சாபமா? என்று பார்த்தால், நாட்கணக்கில் செய்யும் வேலைகளை கன நேரத்தில் செய்யும் Bot-களால் வரமாகவும், மனிதர்களுக்கு மாற்றாக சில துறைகளில் அவர்களின் வேலையைப் பறிக்கும்போது சாபமாகவும் இருக்கிறது எனலாம். குறிப்பாக படைப்பு சார்ந்து தன் தொழிலை நடத்தி வருபவர்களுக்கு மிகப்பெரிய வில்லனாக AI தொழில்நுட்பம் விஸ்வரூபம் எடுக்கும் வாய்ப்புள்ளது. 

எனவே இனி நாம் இதை நம் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு பயணிக்க முயற்சிக்க வேண்டுமே தவிர, இதைப் பற்றி அறியாமல் ஒதுக்கி வைக்க முயற்சித்தால், பாதிப்புகள் மேலும் அதிகமாகும் என்பதே உண்மை. 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com