சந்திரயான் திட்டத்துக்கு தலைமை தாங்கி முதல் தமிழர் யார் தெரியுமா?

சந்திரயான் திட்டத்துக்கு தலைமை தாங்கி முதல் தமிழர் யார் தெரியுமா?

ந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் திட்டத்தை உலக நாடுகளை தற்போது உற்று நோக்கி கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் சந்திரயான் திட்டம் முதல் முறையை அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதனை தலைமையேற்று நடத்திய தமிழர் பற்றி தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்..

விண்வெளி துறையில் இந்தியாவின் மீதான உலக நாடுகளின் பார்வையை மாற்றி அமைத்த சந்திரயான்-1 திட்டத்தை அப்போது தலைமை ஏற்று செயல்படுத்தியவர் பெருமைமிகு தமிழர் மயில்சாமி அண்ணாதுரைதான். கேரளாவைச் சேர்ந்த மாதவன் நாயர் தலைமையிலான இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் அபரிமிதமான சாதனை இது என்றாலும், குறிப்பாக இந்த திட்டத்தின் இயக்குநராக இருந்து சிறப்புடன் செயல்படுத்திய மயில்சாமி அண்ணாதுரை மீதே அனைவரின் கவனமும் இருந்தது.

''நிலவு மனிதன்''

தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் உள்ள கோதவாடி எனும் சிற்றூரில் 1958ம் ஆண்டு ஜுலை 2ம் தேதி ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, மாட்டுக்கொட்டையில் தன் கல்வியை தொடங்கிய மயில்சாமி அண்ணாதுரையை, அன்றைய தினம் உலக தலைவர்கள் மற்றம் விஞ்ஞானிகள் உச்சி முகர்ந்து கொண்டாடினர். அதற்கு காரணம், அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் நிலவு தொடர்பான ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும், மூன்றாம் உலக நாடான இந்தியாவில் இருந்து சென்ற சந்திராயன்-1 விண்கலம்தான், முதல் முறையாக நிலவில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதை ஆதாரத்துடன் உறுதிச் செய்தது என்பதுதான்.

உலக நாடுகளை பொறுத்தவரை, நிலவு தொடர்பான ஆராய்ச்சில் சந்திரயான்-1 என்பது மிகப்பெரும் சாதனை. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை இது அசுரப்பாய்ச்சல். மிகக்குறுகிய காலத்தில், குறைந்த பட்ஜெட்டில், சரியான திட்டமிடலோடு நிகழ்த்தி காட்டப்பட்ட வரலாற்றுச்சாதனை.

ஆகையால்தான், இந்த திட்டத்தை செயல்படுத்திக் காட்டி, உலக நாடுகளை இந்தியாவை நோக்கி வியந்துபார்க்க வைத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு பத்மஸ்ரீ விருது தந்து கெளரவித்தது மத்திய அரசு. சர்வதேச அளவில் 70க்கும் மேற்பட்ட விருதுகள் இவரை தேடி வந்தன. நிலவு மனிதன் எனும் அடைமொழியுடன் அழைக்கப்பட்டார் மயில்சாமி அண்ணாதுரை.

நிலவில் நீர் இருப்பதை கண்டறிந்த சந்திரயான் 1

சந்திராயன்-1 விண்ணில் ஏவப்படுவதற்கு முதல்நாள், இடி மின்னலுடன் மழை பெய்து ஓய்ந்திருந்தது. இந்த நிலையில் தான், 2008 அக்டோபர் 22ம் தேதி பிஎஸ்எல்வி ராக்கெட் சந்திராயன் -1 விண்கலத்தைச் சுமந்தபடி விண்ணில் சீறி பாய்ந்தது. அதே ஆண்டு நவம்பர் 8ம் தேதி நிலவை சுற்றிய துருவ வட்டப்பாதையில் நுழைந்தது. நவம்பர் 14ம்தேதி அன்றைய குடியரசு தலைவர் அப்துல் கலாம் முன்னிலையில், சந்திரயான் 1 தாய்க்கலனில் பொருத்தப்பட்டிருந்த moon impact probe என்ற சிறிய கலன் அதிலிருந்து பிரிந்து நிலவின் மீது மோதும் வகையில் இஸ்ரோ மையத்தில் இருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

அந்த விண்கலம் நிலவை நோக்கி பறந்து சென்ற 27வது நிமிடத்தில் impact probe நிலவின் மீது மோதியது. அதுவரை நிலவில் நீர் இருக்கிறதா என ஆராய்ச்சி மேற்கொண்ட நாசா உள்ளிட்ட மற்ற நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் நிலவின் முன்புறத்தில் மட்டுமே ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர்.

ஆனால், இந்தியாவில் இருந்து சென்ற சந்திராயன்-1 விண்கலம் நிலவின் மிக மிக அரிதான வளி மண்டலத்தில், அதாவது நிலவின் பின்புறம் சில தனிமங்களின் மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்தது. அப்படி கண்டுப்பிடிக்கப்பட்ட மிக முக்கியமான மூலக்கூறுகளில் ஒன்றாக நீர் இருப்பதை, சந்திரயான்-1 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்ட 11 மாதங்களில் உறுதிச் செய்தது. இதனை உலக நாடுகளுக்கு அறிவித்தது அமெரிக்காவின் நாசா.

நிலவின் வளிமண்டலத்தில் நீர் மூலக்கூறுகள் இருந்ததற்கு மூலக்காரணம் நிலவின் தரையில் இருக்கும் நீர் சூரிய ஒளியால் ஆவியாகி நிலவின் வளி மண்டத்திற்கு வந்திருக்கவேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுமானித்தனர். அதேபோல் நிலவின் பெரிய இருண்ட பள்ளத்தாக்குகளில் உறைபனிக் கட்டிகளாக நீர் இருப்பதையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு சர்வதே அறிவியல் அரங்குகளில் ஆமோதிக்கப்பட்டது. இதன்காரணமாக நிலவில் நீர்கண்ட முதல் நிலவுக் கலனாய் சந்திரயான்-1 வரலாற்றில் இடம் பிடித்தது. அமெரிக்கா விண்வெளி வீரர் ஆம்ஸ்ட்ராக் நிலவில் காலடி எடுத்துவைத்தது 1969ம் ஆண்டாக இருந்தாலும், அதே ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ உதயமானது.

இஸ்ரோ தொடங்கப்பட்ட 40வது ஆண்டில் நிலவில் நீர் இருப்பதை உலக நாடுகளுக்கு உரக்கச்சொன்னது சந்திராயன்-1 விண்கலம்.
சந்திரயான் கொடுத்த வெற்றி, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்கான மங்கள்யான் திட்டத்தையும், சந்திரயான் - 2 திட்டத்தையும் செயல்படுத்துவதற்கான பொறுப்பை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் கரங்களில் கொடுத்திருந்தது.

மேலும், சூரியனை ஆய்வுச் செய்வதற்காக ஆதித்யா விண்கலன் திட்டத்தை முன்னெடுக்கும் துணிவையும் கொடுத்திருந்தது. சில காரணங்களால் சந்திரயான்2 தொடங்குவதில் தாமதமான போது, மயில்சாமி அண்ணாதுரையின் அடுத்தகட்ட பாய்ச்சல் செவ்வாயை நோக்கி இருந்தது. ஆசிய நாடுகளில் செவ்வாய் கிரகத்தின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக செயற்கைக்கோளை அனுப்பிய முதல் நாடு இந்தியாதான். அதுமட்டுமின்றி, உலகிலேயே முதல் முயற்சியில் செயற்கைக்கோள் அனுப்பி வெற்றிபெற்ற நாடும் இந்தியாதான்.

இந்த பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காரரான மயில்சாமி அண்ணாதுரை 2018ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். தற்போது, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவராக பணியாற்றிவரும் மயில்சாமி அண்ணாதுரை, வேலூர் விஐடி மாணவர்களுடன் சேர்ந்து ஹைட்ரோஜன் வாயுவை கொண்டு வாகனத்தை இயக்குவது குறித்து தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறார். தன் அறிவாற்றலை இளம் தலைமுறையினருக்கு கடத்தும் கலங்கரை விளக்கமாக திகழ்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com