சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்றாலே அதற்கு உலகெங்கிலும் மவுசு அதிகம். இதற்கு இந்தியா ஒன்றும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் சீனப் பொருட்கள் அதிகமாக விற்கப்பட்டாலும், அவை நீண்ட காலம் நீடிப்பதில்லை. இதனாலேயே சீன தயாரிப்புகளை வாங்குவதற்கு முன் மக்கள் பலமுறை சிந்திக்கின்றனர்.
ஒரு பொருள் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று மக்களுக்குத் தெரிந்தாலே, இது நல்ல தரத்துடன் இருக்குமா? பாதுகாப்பானதாக இருக்குமா? என சிந்திப்பார்கள். அதிலும் சமையலறையில் பயன்படுத்தப்படும் சாதனமாக இருந்தால், அந்த சாதனத்தால் ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் மக்களிடம் ஏற்படும். ஆனால் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை சீனாவை விட ஜப்பான் பன்மடங்கு முன்னேறியுள்ளது. ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும். அத்தகைய கண்டுபிடிப்புகளில் வித்தியாசமான கோணம் இருப்பது மட்டுமின்றி, அவை மக்களுடைய வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும்படியாக இருக்கும்.
அந்த வரிசையில் சமீபத்தில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட சமையலறை உபகரணங்கள், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் பார்த்தால் கண்டிப்பாக அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு விசிறி ஆகிவிடுவீர்கள். குறிப்பாக சமைக்கும் கடாய் ஒன்றில் யாருடைய பங்களிப்பும் இன்றி அதில் போடப்படும் உணவுகளை கலப்பதற்கு சிறப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த உணவை கருவிகள் கிளறும்போது, வெளியே சிந்தவோ சிதறவோ இல்லை.
அந்த அளவுக்கு மிகவும் நுட்பமாக இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. சமைப்பதற்கு தேவையான பொருட்களை அந்த கடாயில் கொட்டிவிட்டால் போதும். குறிப்பிட்ட நேரம் டைமர் செட் செய்துவிட்டு நம் வேலையை பார்க்கச் சென்றுவிட்டால், உணவு தானாகவே விரைவாகத் தயாராகிவிடும். அந்த அளவுக்கு இந்த அதிநவீன சாதனத்தின் செயல் இருக்கிறது.
இந்த சாதனம் எதிர்காலத்தில் உலகெங்கிலும் பரவும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பெரும்பாலும் இத்தகைய தானியங்கி சாதனங்கள் தொழிற்சாலைகளில் அடைக்கப்படும் உணவு தயாரிப்பில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில். தற்போது வீட்டிலும் இவற்றை பயன்படுத்தும் படியான சிறிய சாதனங்கள் மக்களுக்கு அதிகம் பயன்படும் என்று நம்பப்படுகிறது. இத்தகைய சாதனங்களால் இனி இல்லத்தரசிகள் கையில் சூடுபடாமல் சமைக்கலாம்.