
ட்விட்டரில் எதுதான் மாறவில்லை? அதன் உரிமையாளரில் தொடங்கி லோகோ, பெயர் வரை எல்லாமே மாறிவிட்டது. மேலும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு பல புதிய அப்டேட்டுகள் எக்ஸ் தளத்தில் வந்து கொண்டிருக்கிறது. எலான் மஸ்கின் இந்த அதிரடி நடவடிக்கைகள் எல்லாமே எக்ஸ் தளத்தை வருவாய் தளமாக மாற்றும் நோக்கிலேயே இருக்கிறது.
இத்தகைய மாற்றங்களை செய்ததால் அவருக்கு எந்தவித பெரிய சிக்கலும் வரவில்லை என்றாலும், பயனர்கள் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட ட்வீட்டுகளை மட்டுமே பார்க்க முடியும் எனக் கொண்டு வந்த அறிவிப்பு, அவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தியதால் அதை மட்டும் மாற்றினார். சப்ஸ்கிரைப் செய்யும் முறையைக் கொண்டு வந்தார். சப்ஸ்கிரைப் செய்தால் மட்டுமே ப்ளூ டிக் கிடைக்கும் என அறிவித்தார். அவர்களுக்கே ட்விட்டரில் எல்லாவிதமான அணுகல்களும் கிடைக்கும்படி செய்தார்.
இந்த தளத்தைப் பயன்படுத்தி ஒருவர் சம்பாதிக்க நினைத்தாலும் அவர்கள் கட்டாயம் ப்ளூடிக் சப்ஸ்கிரிப்ஷன் வைத்திருக்க வேண்டும் என்று அப்டேட்டுகளை அடுக்கிக்கொண்டே சென்றார். எப்படியாவது யூடியூப் தளம் போன்று தன்னுடைய தளத்தை மாற்றிவிட வேண்டுமென்ற முனைப்பிலேயே அனைத்தையும் செய்து வந்தார் எலான் மஸ்க். எக்ஸ் தளத்தில் இருக்கும் சலுகை என்னவென்றால், காணொளிகள் மட்டுமின்றி கன்டென்ட் ரைட்டிங் மூலமாகவும் பணம் சம்பாதிக்க முடியும். நீங்கள் நன்றாக எழுதி அது அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்த்தாலே உங்களுக்கு வருமானம் வரும்.
YouTube தளத்தில் ஒருவர் சம்பாதிக்க வேண்டுமென்றால் குறைந்தது கேமரா, மைக் என 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் முதலீடு தேவை. ஆனால் ட்விட்டர் தளத்தில் உங்கள் அறிவை மூலதனமாக வைத்து எவ்வித செலவும் இல்லாமல் பணம் சம்பாதிக்கலாம். இதுதான் எக்ஸ் தளத்தின் வெற்றிப் படியாக எலான் மஸ்க் பார்க்கிறார். இதன் வரிசையில் தற்போது புதிதாக சிம் கார்டு இல்லாமல் பயனர்கள் எக்ஸ் தளத்தைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் ஆடியோ கால் பேச முடியும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கு ஏற்றவாறு ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனர்களுக்கு எல்லா அம்சங்களும் வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. இன்னும் இதில் அவர் எதுபோன்ற மாற்றங்களையெல்லாம் கொண்டு வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதன் பயனர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.