இன்னும் 3 ஆண்டுகள்தான்... AI தொழில்நுட்பத்தால் ஏற்படப்போகும் சிக்கல்கள்!
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவதால், அதனுடைய தாக்கம் எல்லா இடங்களிலும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AI தொழில்நுட்பத்தின் வருகையால் பலருடைய வேலை பறிபோகும்போல் தெரிகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு காரணமாக, 40% தொழிலாளர்கள் கட்டாயம் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் பல பணியிடங்கள் அதிகரிக்குமே தவிர, அவற்றால் எந்த வேலையையும் மாற்ற முடியாது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வருவதால், அதன் தாக்கம் எல்லா இடங்களிலும் இருக்கும். சிலர் மேலாளர் மற்றும் நிர்வாகிகள் போன்ற மேல்மட்ட பதவிகளுக்கு எவ்வித ஆபத்தும் நேராது என்று கூறுகின்றனர். ஆனால் அதை வெளிப்படையாக சொல்லிவிட முடியாது. நிச்சயம் இந்தத் தொழில்நுட்பத்தால், நிர்வாகிகள் தங்களது திறமை குறித்தும், வேலை குறித்தும், எப்படி ஒரு வேலை செய்து முடிக்கப்படுகிறது என்பது குறித்தும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 2020 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், உலக அளவில் 85 மில்லியன் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றும், இதனால் 97 மில்லியனுக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதனால் 2023 முதல் 2028 வரையிலான காலகட்டத்தில், சுமார் 44 சதவீத தொழிலாளர்களின் திறன்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதுகுறித்து கணித்ததை விட தற்போது ஒன்பது சதவீதம் அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பம் சவால் அளிக்கக்கூடியது என நினைக்கும் அதே சமயத்தில், பணியாளர்களின் நிலையை இது உயர்த்தும் என்பதற்கான மூன்று முக்கிய காரணிகளை நிபுணர்கள் அடையாளப்படுத்தி உள்ளனர். அது என்னவென்றால், பாரம்பரிய பணி செயல்முறையில் மாற்றம், பணி விவரம் மற்றும் நிறுவன அடிப்படை கட்டமைப்பை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்கி தொழில்களை செயல்படுத்துவதாகும். மேலும் மனிதர்கள் மற்றும் இயந்திரங்களுக்கு இடையேயான உறவை வளர்த்து வருமானத்தை பெருக்க உதவும் பல புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதும் இதில் அடங்கும்.
எனவே இந்தத் தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கப் போகிறார்கள் எனத் தெரிகிறது.