
தொழில்நுட்ப முன்னேற்றத்தால் மாறிவரும் உலகில் இணையம் வழியாக கடன் பெறுவதும் அதிகரித்து வருகிறது. எந்தவித நிபந்தனைகளும் தேவையில்லை, உடனடியாக பணம் பெற்றுக்கொள்ளலாம் என்பதால் இதை நோக்கி பலர் செல்கின்றனர். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுவதும் தற்போது அதிகரித்து வருகிறது.
இதன் வரிசையில் புதுச்சேரியை சேர்ந்த அதிகாரி ஒருவர் தன் அவசர தேவைக்காக இணையத்தில் இன்ஸ்டன்ட் லோன் தரும் செயலியில் 15,000 கேட்டுள்ளார். அவர்களும் எந்த ஆதாரத்தையும் கோராமல் வெறும் செல்பி மற்றும் ஆதார் நகலை மட்டும் பெற்றுக்கொண்டு 15,000 ரூபாய் பணத்தை வழங்குவதாகக் கூறியுள்ளனர். இதை ஒரு வாரத்திற்குள் திரும்ப செலுத்திவிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதற்கும் சரியென ஒப்புக்கொண்ட அந்த நபருடைய வங்கிக் கணக்கிற்கு வெறும் 7.000 மட்டுமே வந்துள்ளது. அவர்கள் கூறியபடியே அந்த 7.000 ரூபாயை ஒரு வாரத்திற்குள் திருப்பி செலுத்திவிட்டார். இருப்பினும் அந்த நபர்கள் 15.000 ரூபாயை செலுத்துமாறு நிர்பந்தித்துள்ளனர்.
நீங்கள் அனுப்பிய பணத்தை நான் செலுத்திவிட்டேன் என்று அதை பெரிதும் பொருட்படுத்தாத அந்த நபரின் புகைப்படத்தை, நிர்வாணமாக மார்பிங் செய்து உங்கள் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் அனுப்பிவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதில் பயந்துபோன அன்னவர் மற்றொரு இன்ஸ்டன்ட் லோன் செயலியில் பணம்பெற்று அவர்கள் கேட்ட தொகையை அனுப்பி இருக்கிறார்.
இந்த புதிய செயலியில், தான் பெற்ற பணத்தை திரும்ப செலுத்திய சில நாட்கள் கழித்து இதே போல மார்பிங் புகைப்பட பிரச்சனை தொடங்கியிருக்கிறது. இதற்கு மேல் தன்னால் எதையும் தாங்க இயலாது என்பதை உணர்ந்த அந்த நபர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனவே இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கூறிய காவல் துறையினர் "இணையத்தில் கடன் பெற விரும்புபவர்கள் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றுள்ள இன்ஸ்டன்ட் லோன் செயல்களில் மட்டுமே வாங்க வேண்டும். அதுமட்டுமின்றி, எவ்வித ஆதாரத்தையும் கேட்காமல் லோன் கொடுக்கும் செயலிகள் பெரும்பாலும் பிறரை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. எனவே இன்ஸ்டன்ட் லோன் செயலிகள் உங்கள் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டினால் உடனடியாக காவல்துறையை அணுகுங்கள்" எனத் தெரிவித்துள்ளனர்.