
திடீரென வாட்ஸ் அப்பில் வரும் பெண்ணின் அழைப்பு. அந்தப் பெண் இறந்து விட்டதாகவும், அதற்கு நீங்கள் தான் காரணம் என்றும் வரும் மற்றொரு அழைப்பு. இப்படி புதுவிதமாக தற்கொலை மோசடி ஒன்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் எக்குத்தகப்பாக வளர்ந்துவிட்டதால், அதற்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக அரசாங்கமும் மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்கி வந்தாலும், மோசடிக்காரர்கள் பல புதிய யுத்திகளை பயன்படுத்தி மோசடி செயலில் ஈடுபட்டு தான் வருகிறார்கள்.
இணையத்தில் பல மோசடிக்காரர்கள் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்றும், பகுதி நேர வேலை என்றும், ஒரே மாதத்தில் கோடீஸ்வரன் ஆகலாம் என்றும் கூறி மக்களின் ஆசையைத் தூண்டி பணத்தை பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இதிலும் குறிப்பாக வாட்ஸ் அப் வழியாக மக்களை அணுகி அவர்களை ஏமாற்றும் சம்பவங்களும் நடக்கிறது. கடந்த மாதம் வரை வெளிநாட்டு எண்ணிலிருந்து whatsapp பயனர்களுக்கு அழைத்து பல இந்தியர்களின் பணத்தை சுருட்டியது ஒரு கும்பல். அதற்கு அடுத்ததாக, வாட்ஸ்அப் எண்ணில் திடீரென நிர்வாண கோலத்தில் ஒரு பெண் அழைப்புவிடுத்து, அந்த அழைப்பை அட்டென்ட் செய்ததும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து உங்கள் கான்டக்ட் லிஸ்டில் உள்ள அனைவருக்கும் அனுப்பி விடுவேன் என மிரட்டி பணம் பறித்த நிகழ்வும் நடந்தது.
இப்போது முற்றிலும் புதுமையாக தற்கொலை மோசடி ஒன்று நடந்து வருகிறது. இது குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்து நடக்கத் தொடங்கியுள்ளது. நேர்காணல் என்று கூறி வீடியோ காலில் ஒரு பெண் அழைத்து பேசுகிறார். அந்தப் பெண் பேசிய சில நிமிடங்களில், அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி காவலர் போல பேசி, மோசடி கும்பல் ஒன்று பணம் பறித்து வருகிறார்கள். அதாவது அந்தப் பெண் அழைப்பை துண்டித்ததும், காவல் நிலையத்திலிருந்து அழைப்பது போல் ஒரு நபர் பேசுகிறார். நீங்கள் சிறிது நேரத்திற்கு முன்பு பேசிய பெண் இறந்துவிட்டதாகவும், அதற்கு நீங்கள் தான் காரணம் என்றும் கூறி அந்த நபர் பற்றிய விவரங்களைப் பெற்று முற்றிலும் நூதன முறையில் மோசடி செய்கிறது ஒரு கும்பல்.
இப்படிப்பட்ட புதுமையான மோசடிகளில் இருந்து கவனமாக இருக்கும் படி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.